நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 36 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 24ஆம் தேதி துவங்கும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை வைத்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது. அந்த போட்டியில் கேஎல் ராகுல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் பெரும்பாலான ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஏனெனில் சமீப காலங்களாகவே சுமாராக விளையாடும் அவர் பெங்களூருவில் 0, 12 ரன்களுக்கு அவுட்டாகி தோல்வியை சந்திக்க ஒரு காரணமாக அமைந்தார். குறிப்பாக 46க்கு ஆல் அவுட்டான பின் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் ஆகியோர் போராடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அப்போது களமிறங்கிய ராகுல் 12 ரன்னில் அவுட்டானார்.
சோசியல் மீடியாவுக்கு பதிலடி:
அதனால் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்து வெல்லும் வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது. அதன் காரணமாக அவரை நீக்கி விட்டு சர்பராஸ் கானை சேர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் இருப்பவர்கள் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாது என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் சமூக வலைதளங்கள் ஒரு பொருட்டே கிடையாது. சமூக வலைதளங்கள் அல்லது வல்லுனர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்து நீங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க முடியாது. அணி நிர்வாகம் மற்றும் தலைமை நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது முக்கியம். சர்வதேச கிரிக்கெட்டின் விளையாடும் ஒவ்வொருவரும் மதிப்பிடப்படுவார்கள்”
கம்பீர் ஆதரவு:
“சர்வதேச போட்டிகளே மதிப்பிடுவதை பற்றியது. இங்கே ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் மதிப்பிடப்படுகிறது. ஆனால் சமீபத்தில் கான்பூரில் கடினமான பிட்ச்சில் ராகுல் எங்களுடைய திட்டங்களுக்கு தகுந்தாற்போல் கொஞ்சம் நன்றாக பேட்டிங் செய்ததாக கருதுகிறேன். நாம் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பது அவருக்கும் தெரியும். அவருக்கு அந்த திறன் இருப்பதாலேயே அணி நிர்வாகமும் தொடர்ந்து ஆதரவளிக்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க: 103 பந்தில் 200.. தமிழக வீரர் ஜெகதீசன், டிராவிஸ் ஹெட் சாதனையை உடைத்த நியூஸிலாந்து வீரர் உலக சாதனை
அந்த வகையில் சுமாரான ஃபார்மில் இருக்கும் அவருக்கு கம்பீர் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடுவாரா என்பது பற்றி போட்டி நாளன்று முடிவெடுக்கப்படும் என்றும் கம்பீர் தெரிவித்தார். இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் ராகுல் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.



