
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலம் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெறுகிறது. எனவே அடுத்த பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏனெனில் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் இந்தியா சாம்பியன் பட்டங்களை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதே போல ஐபிஎல் தொடரில் 2012, 2014 வருடங்களில் கொல்கத்தா அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டங்களை வென்ற அவர் 2024 சீசனில் ஆலோசகராக கோப்பையை வென்றார். அந்த வகையில் மிகப்பெரிய அனுபவமும் தரமும் திறமையும் கொண்டுள்ள அவரை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புகிறது. இருப்பினும் கடந்த காலங்களில் அவர் வர்ணனையாளராக தோனி, விராட் கோலி ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அஸ்வின் கருத்து:
அத்துடன் ஐபிஎல் தொடரில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர் என்று பார்க்காமல் விராட் கோலியுடன் அவர் சண்டையில் ஈடுபட்டதை மறக்க முடியாது. எனவே இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் விராட் கோலி போன்றவர்களுடன் இணைந்து எப்படி செயல்படப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கௌதம் கம்பீர் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நபர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மேலும் தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களை ஹீரோவாக கொண்டாடும் ரசிகர்கள் அவரை மறந்து விட்டதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி தனது புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் என்னுடைய முதல் தொடரை முழுமையாக விளையாடினேன். 2011 உலகக் கோப்பைக்கு முந்தைய 2 வருடங்கள் நான் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே தூக்கினேன்”
“அந்த ஆரம்ப காலங்களில் கௌதம் கம்பீர் எனக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளார். அதற்கு முன் என்னுடைய சொந்த மாநிலத்தை தாண்டி வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கு அவ்வளவு தன்னம்பிக்கையை கொடுத்ததில்லை. கௌதம் கம்பீர் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நபர். இவை அனைத்தும் உணர்வைப் பற்றியது. அவர் ஒரு போராளி”
இதையும் படிங்க: `கில்கிறிஸ்ட் மாதிரி டேஞ்சரான ரிஷப் பண்ட் அந்த 2 ஆர்டரிலும் கலக்குறாரு.. இயன் ஸ்மித் பாராட்டு
“நம் மனதில் உள்ள ஒருவருக்கு ஹீரோ அந்தஸ்து கொடுத்து விட்டு மற்ற அனைவரையும் மறந்து விடுவது தான் நம்மில் பலருக்கும் உள்ள பெரிய பிரச்சினையாகும். இது விளையாட்டு. திரைப்பட கதையல்ல. இங்கே ஹீரோக்கள் மற்றும் வில்லன்கள் இல்லை. கம்பீர் ஒரு போட்டியாளர். வெற்றி பெற வேண்டும் என்று அவரது ஆசையும் பசியும் நம்ப முடியாதது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு” என்று கூறினார்.