
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 16 வருடங்களாக சிறப்பாக விளையாடி வருகிறார். 2008 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்தார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வரும் அவர் இதுவரை 26,000+ ரன்கள் மற்றும் 80 சதங்கள் விளாசி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அத்துடன் கேப்டனாகவும் செயல்பட்ட அவருடைய தலைமையில் தான் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது.
கம்பீர் பாராட்டு:
மேலும் இந்திய அணியில் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலைமையையும் விராட் கோலி கேப்டனாக இருந்த போது கொண்டு வந்தார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகனாக திகழும் விராட் கோலி ஆகஸ்ட் 18ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16வது வருடத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2008இல் விராட் கோலி அறிமுகமான போது ஆரம்பத்திலேயே அவுட்டானதாக இந்திய அணியின் தற்போதைய புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இருப்பினும் இவரிடம் இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடும் திறமையை கொண்டுள்ளார் என்பதை வலைப்பயிற்சியில் காண்பித்த உழைப்பை பார்த்து புரிந்து கொண்டதாக கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“இலங்கையில் நடைபெற்ற முதல் போட்டியில் அறிமுகமான விராட் கோலி மிகவும் வேகமாக அவுட்டானார். ஆனால் வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங் செய்த விதத்தை வைத்து இவர் நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்பதை நான் தெரிந்து கொண்டேன். ஏனெனில் நல்ல திறமையை கொண்டுள்ள அவருக்கு சிறப்பாக செயல்பட கொஞ்சம் நேரம் மட்டுமே தேவைப்பட்டது”
இதையும் படிங்க: 2 விக்கெட்ஸ்.. 6, 0, 6.. திருநெல்வேலியில் கலக்கல் ஃபினிஷிங்.. கம்பீருக்கு மெசேஜ் கொடுத்த இஷான் கிசான்
“சிறப்பான அணுகுமுறை, நல்ல சுபாவம் கொண்ட அவருக்கு எப்படி போராடி தன்னுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தெரிகிறது. தன்னுடைய ஆரம்ப நாட்களிலேயே இந்திய அணிக்காக அவர் போட்டிகளை வென்று கொடுத்த விதம் நேர்மறையானதாக இருந்தது” என்று கூறினார். முன்னதாக விராட் கோலி முதல் சதமடித்த அதே போட்டியில் கம்பீரும் சதமடித்தார். ஆனால் அப்போது தமக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை இளம் விராட் கோலிக்கு சீனியராக கௌதம் கம்பீர் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.