இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்தது. சொல்லப்போனால் அந்தப் போட்டியில் 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா 0/2 என ஆரம்பத்திலேயே திண்டாடியது. அதனால் இந்தியா கண்டிப்பாக இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
இருப்பினும் அப்போது நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் 90, கேப்டன் கில் சதத்தை 103 ரன்களை குவித்தனர். அதே போல ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தினார்கள். தொடர்ந்து அபாரமாக விளையாடிய அவர்கள் சதத்தை நெருங்கிய போது போட்டியை முடித்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து அணியினர் கெஞ்சினார்கள்.
ரிஷப் பண்ட் அர்ப்பணிப்பு:
இருப்பினும் அதற்கு சம்மதிக்காத இந்திய அணி சுந்தர், ஜடேஜா சதத்தை அடித்ததும் போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்து மாஸ் காட்டியது. முன்னதாக அப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பாதத்தில் காயமடைந்து நடக்க முடியாமல் வண்டியில் ஏறிச் சென்றார். அதனால் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் காயத்தை பொருட்படுத்தாமல் இந்தியாவுக்காக மீண்டும் வந்து விளையாடி அரை சதத்தை அடித்து 58 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் காயத்தையும் தாண்டி நாட்டுக்காக விளையாடியதைப் எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக அவர் செய்த அந்த அர்ப்பணிப்பான செயலை வருங்கால தலைமுறை பேசும் என்று பாராட்டும் கம்பீர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இத்தொடரிலிருந்து ரிஷப் வெளியேறியதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது”
கம்பீர் பாராட்டு:
“நான் சொல்ல விரும்புவது என்னவெனில், ரிஷப் பண்ட் நாட்டுக்காக என்ன செய்தார் என்பதன் அடிப்படையிலேயே இந்த இந்திய அணியின் குணமும் அடித்தளமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. உடைந்தக் காலுடன் பேட்டிங் செய்த அவருக்கு எவ்வளவு பாராட்டைக் கொடுத்தாலும் போதாது. கடந்த காலங்களில் இப்படி பலரும் செய்யவில்லை. ஆனால் நான் அதை செய்கிறேன் என்று அவர் கையை உயர்த்தினார்”
இதையும் படிங்க: இந்தியான்னா தொக்கா போச்சா? இதே நீங்களா இருந்தா இதை செஞ்சுருப்பீங்களா.. இங்கிலாந்துக்கு கம்பீர் பதிலடி
“அதனாலேயே அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என்று சொல்கிறேன். அதைப்பற்றி நான் இங்கே உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசலாம். வரும் தலைமுறையினர் அதைப்பற்றி பேசுவார்கள் என்று நினைக்கிறேன். வரும் தலைமுறைகள் கால் உடைந்தும் விளையாடிய அவரைப் போன்றவரைப் பற்றி பேச வேண்டும். அப்படிப்பட்டவர் நல்ல ஃபார்மில் இருக்கும் போது துரதிஷ்டவசமாக காயமடைந்துள்ளார். இப்போதும் முக்கிய வீரரான அவர் விரைவாக குணமடைந்து எங்களுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.



