பாகிஸ்தான் போட்டிக்கான இந்திய அணியில் டிகே’வை செலக்ட் பண்ணா ஆபத்து நமக்கே – காரணத்துடன் எச்சரிக்கும் கம்பீர்

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்று முடிந்து சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று துவங்கியுள்ளன. இந்த தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் அக்டோபர் 23ஆம் தேதியன்று மெல்போர்ன் நகரில் பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. கடந்த வருடம் துபாயில் மோதிய போது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை பரிசளித்த அந்த அணி சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் சூப்பர் 4 சுற்றில் தோற்கடித்து ஃபைனலுக்கு கூட செல்ல விடாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.

axar Patel Virat Kohli Mohammed Shami

- Advertisement -

எனவே அந்த வரலாற்று தோல்விகளுக்கு இம்முறை தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணியில் தரமான 11 பேர் வீரர்களை தேர்வு செய்வது அவசியமாகிறது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடும் 11 பேர் இந்திய உத்தேச அணியை முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடந்த சில தினங்களாகவே கணித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தன்னுடைய 11 பேர் அணியை நேற்று வெளியிட்டுள்ளார்.

ஆபத்து நமக்கே:
அதில் விக்கெட் கீப்பராக தமிழகத்தின் மூத்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்ட அவர் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் சமீபத்திய ஆசிய கோப்பை உட்பட அறிமுகமான 2017 முதல் இதுவரை கொடுக்கப்பட்ட 58 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒருமுறை கூட அவர் ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதில்லை. மறுபுறம் கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 2022 ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்கு பின் அதிக ரன்கள் மற்றும் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரராக அசத்தி வருகிறார்.

RIshabh Pant Dinesh Karthik

ஆனால் சூரியகுமார், பாண்டியா ஆகியோரும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் 10 – 12 பந்துகளை எதிர்கொள்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து ஒரு இடத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் கௌதம் கம்பீர் அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் நிலவும் இடது கை பேட்ஸ்மேன் பஞ்சத்தை போக்குவதற்காக ரிசப் பண்ட்டை தேர்வு செய்துள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய 11 பேர் அணியில் 5, 6, 7 ஆகிய இடங்களில் முறையே ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பிடிப்பார்கள். ஆனால் பயிற்சி போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியதை நான் பார்த்தேன். இருப்பினும் வெறும் 10 பந்துகளை எதிர்கொள்வதற்காக ஒருவரை நீங்கள் தேர்வு செய்யக்கூடாது”

- Advertisement -

“குறிப்பாக 5 அல்லது 6வது இடத்தில் களமிறங்குபவர் அதிரடியாக அடிக்க வேண்டும். ஆனால் தினேஷ் கார்த்திக் அந்த ஆர்வத்தை காட்டுவதாக தெரியவில்லை. மாறாக அவரும் அணி நிர்வாகமும் அவர் கடைசி 2 – 3 ஓவர்களில் மட்டுமே விளையாடுவார் என்பதை சமீபத்திய போட்டிகளில் காட்டியது ஆபத்தானது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் நீங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளைக் இழந்தால் பாண்டியாவின் விக்கெட்டை காப்பாற்றுவதற்காக அக்சர் பட்டேலை முன்கூட்டியே அனுப்புவீர்கள். அதனால் தான் நான் பண்டை தேர்வு செய்துள்ளேன். ஆனாலும் இது நடக்காது என்பது எனக்கு தெரியும்” என்று கூறினார்.

Gambhir

அதாவது கடைசியில் களமிறங்கி 10 – 12 பந்துகளை மட்டும் எதிர்கொள்ள ஒரு இடத்தை வீணடிக்காமல் 5வது இடத்தில் இடது கை பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதாலேயே ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளதாக கம்பீர் தெரிவிக்கிறார். ஆனால் நான் கடைசி 2 – 3 ஓவர்களில் தான் விளையாடுவேன் என்று தினேஷ் கார்த்திக் எப்போதும் அடம் பிடித்து கூறியதில்லை. மேலும் அவர் இல்லாமல் அந்த 10 – 12 பந்துகளை எதிர்கொண்டு 15 – 20 ரன்களை எடுக்க தவறிய காரணத்தாலேயே சமீபத்திய ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது

Advertisement