இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆகியோர் கலந்து கொண்ட நேர்காணல் பிசிசிஐ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டுக்காக ஒன்றாக விளையாடினாலும் நாளடைவில் ஐபிஎல் தொடரில் அவர்கள் சண்டையிட்டது சர்ச்சையானது. இருப்பினும் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர்கள் நட்பாக இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர்.
அந்த பேட்டியில் சமீப காலங்களில் வெளிநாட்டு மண்ணில் இந்தியா வெற்றிகரமாக செயல்படுவதற்கு விராட் கோலி மிகவும் முக்கிய காரணம் என்று கௌதம் கம்பீர் நேராக பாராட்டினார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. மேலும் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை குவித்துள்ள விராட் கோலி வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலிக்கு பாராட்டு:
அது பற்றி கௌதம் கம்பீர் பேசியது பின்வருமாறு. “25 வயது பையனாக நீங்கள் எம்மாதிரியான சூழ்நிலையில் இருந்திருப்பீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சமயத்தில் நீங்கள் இந்தியாவின் டெஸ்ட் கேப்டன்சிப் பொறுப்பை ஏற்றீர்கள். அந்தப் பொறுப்பில் நீங்கள் மிகவும் வலுவான பவுலிங் கூட்டணியை உருவாக்கினீர்கள்”
“20 விக்கெட்டுகளை எடுத்தால் தான் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியும். அதுவரை உங்களிடம் வலுவான பவுலிங் வரிசை இல்லை. ஆனால் அதை நீங்கள் உருவாக்கியதே உங்களை நம் நாட்டின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக உருவாக வைத்தது. அதற்கான பாராட்டுக்கள் உங்களுக்குச் செல்ல வேண்டும். பொதுவாக 6 – 7 வலுவான பேட்ஸ்மேன்களை வைத்து பெரிய ரன்களை குவிப்பது மிகவும் எளிது”
வெற்றிகரமான கேப்டன்:
“அதற்கான மாற்று வழியை கண்டறிந்த நீங்கள் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் அணுகுமுறையை உருவாக்கினீர்கள். ஷமி, பும்ரா, இஷாந்த், உமேஷ் ஆகியோரை வைத்து வெளிநாடுகளில் வென்றதை கற்பனை செய்து பாருங்கள். அதே போல அடிலெய்ட் நகரில் இந்தியா 400 ரன்கள் துரத்தியது. அது தான் கேப்டனாக உங்களுக்கு முதல் போட்டி”
இதையும் படிங்க: அதுக்காக மதிக்கிறோம் ஆனா உங்களுக்கெல்லாம் இந்தியா பயப்படாது.. வங்கதேச கேப்டனுக்கும் கம்பீர் பதிலடி
“ஆனால் அப்போதும் நீங்கள் அப்போட்டியை வெல்ல விரும்பினீர்கள். அந்த மனநிலை மற்றும் கலாச்சாரத்தை நீங்கள் இந்திய அணியில் கொண்டு வந்ததைப் பற்றி தான் நாங்கள் பேசுகிறோம். அதையே நாங்கள் முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறோம். நீங்கள் உங்களுடைய கேரக்டரை சோதிக்க விரும்பினால் அதற்கு டெஸ்ட் போட்டிகளே மிகவும் சரியான ஃபார்மட்” என்று கூறினார்.



