
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அந்த தொடருடன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். அதே போல பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் தம்முடைய பதவியிலிருந்து வெற்றியுடன் விடை பெற்றார்.
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2007 மற்றும் 2011 உலகக் கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் இந்தியா தோனி தலைமையில் சாம்பியன் பட்டங்களை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதே போல 2012, 2014 ஐபிஎல் சீசனில் கேப்டனாக கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்ற அவர் இந்த வருடம் ஆலோசகராக சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
புதிய கோச் கம்பீர்:
அதனால் அவரை புதிய தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ நியமிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது அதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “திரு. கௌதம் கம்பீர் அவர்களை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்”
“தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. அதை கௌதம் மிகவும் அருகில் இருந்து பார்த்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை தவிர்த்துக் கொண்டு பல்வேறு பாத்திரங்களில் சிறந்து விளங்கிய அவர் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழி நடத்த சிறந்த நபர் என்று நம்புகிறேன்”
“இந்திய அணி பற்றி அவருடைய தெளிவான பார்வை பரந்த அனுபவத்துடன் இணைந்து இந்த உற்சாகமான மற்றும் மிகவும் விரும்பப்படும் பயிற்சியாளர் பாத்திரத்தை ஏற்று அவரை முழுமையாக நிலை நிறுத்துகிறது. அவருடைய இந்திய புதிய பயணத்துக்கு பிசிசிஐ முழுமையாக ஆதரவு கொடுக்கிறது” என்று கூறினார். இது பற்றி கௌதம் கம்பீர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: டியர் ராகுல் பாய்.. உங்களை 2வது மனைவின்னு ரித்திகா சொல்வாங்க.. டிராவிட் பற்றி உருகிய ரோஹித் சர்மா
“இந்தியா என்னுடைய அடையாளம். என்னுடைய நாட்டுக்காக சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கௌரவம். வித்தியாசமான தொப்பி அணிந்திருந்தாலும் இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பி வருவதில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதை எனது குறிக்கோள். 140 கோடி இந்தியர்களின் கனவுகளை நிஜமாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து குறைந்தது 2027 உலகக் கோப்பை வரை கௌதம் கம்பீர் பயிற்சியாளராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.