துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்ற பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய பவுலர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்மான் 43 ரன்களை எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத் தொடர்ந்து 148 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி நடையை கட்டினாலும் கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களும் விராட் கோலி 35 ரன்களும் சேர்த்து 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து அவுட்டானார்கள்.

அந்த நிலைமையில் நல்ல பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதனால் 89/4 என சரிந்த இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியான நிலையில் 5-வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா 35 ரன்களில் வெற்றியை உறுதி செய்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவருடன் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டலாக செயல்பட்ட ஹர்டிக் பாண்டியா 33* (17) ரன்களை விளாசி சிக்ஸருடன் பினிஷிங் கொடுத்தார்.
போராட்ட வெற்றி:
இந்த வெற்றியால் கடந்த வருடம் இதே துபாயில் உலக கோப்பையில் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது. முன்னதாக கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோகித் – டிராவிட் ஆகியோர் விக்கெட் விழுந்தாலும் அதிரடியாக விளையாடும் யுத்தியை கைவிடக் கூடாது என்ற புதிய ஸ்டைலை தற்போதைய இந்திய அணியில் உருவாக்கியதால் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளை அடித்து துவைத்து வெற்றிநடை போட்டு வருகிறது.

தேவையற்ற வேலை:
ஆனால் உலக கோப்பைக்கு நிகரான அழுத்தம் நிறைந்த இந்த பாகிஸ்தான் போட்டியில் அந்த அதிரடி யுக்தி இந்தியாவுக்கு கை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம். ஏனெனில் தரமாக பந்து வீசிய பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி அணுகுமுறையால் வெற்றியை காண முடியாத இந்தியா சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடி தான் வென்றது. இந்நிலையில் உலக கோப்பைக்கு முன்பாக இதுபோன்ற சோதனை முயற்சி தேவையற்றது என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.
2017, 2021 ஆகிய வருடங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக பவர்பிளே ஓவர்களில் 4 – 5 விரைவான விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்த தருணங்களை இந்த அதிரடி யுக்தியால் சமாளிக்க முடியாது என்று ரோஹித் – ட்ராவிட் கூட்டணியின் அதிரடி அணுகுமுறையை விமர்சிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டீர்கள். முழுமையான 20 ஓவர்கள் விளையாடி இலக்கை எட்டிப் பிடிக்கவே நீங்கள் விரும்புவீர்கள். எப்போதும் நீங்கள் நேர்மையான அணுகுமுறையை கையாள வேண்டும். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதும் அவசியம்”

“நேர்மறையாக இருப்பது என்றால் இப்போதைய இங்கிலாந்தை போல களத்தில் இறங்கியது முதலே சரவெடியாக செயல்படுவது என்று அர்த்தமா? கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே உங்களது அணுகுமுறையாக இருக்க வேண்டும். 15வது ஓவரிலோ அல்லது 19வது ஓவரிலோ வெற்றி பெறுவது முக்கியம் கிடையாது. கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களது அணுகுமுறை இருக்க வேண்டும். குறிப்பாக புதிய பந்தில் நீங்கள் அதிரடியாக விளையாட முயற்சிக்கும் போது பவர்பிளே ஓவர்களில் 3 – 4 விக்கெட்டுக்களை இழப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே உங்களுடைய பேட்டிங் டெம்ப்ளேட் அனைத்து நேரங்களிலும் வேலை செய்யாது என்பதால் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று கூறினார்.
அதேபோல் இந்தியாவின் புதிய பேட்டிங் அணுகுமுறையை பற்றி பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் விமர்சித்துப் பேசியது பின்வருமாறு. “இங்கு வந்ததிலிருந்து இந்திய அணியின் அணுகுமுறை மாறிவிட்டதாக கேள்விப்பட்டு வருகிறேன். அதாவது 50 பந்துகளில் 60 ரன்களை எடுப்பதைவிட 25 பந்துகளில் 50 ரன்களை எடுக்க கேப்டன் விரும்புவதாக கேள்விப்படுகிறேன்”

“ஆனால் இது கால சூழ்நிலையை பொருத்தது. டி20 கிரிக்கெட்டில் நீங்கள் உங்களுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் 148 ரன்களை துரத்தும் போது நீங்கள் ஏன் 6 ஓவர்களில் 60 ரன்களை எடுக்க முயற்சித்து 5 விக்கெட்டுகளை இழக்க வேண்டும். அப்படி செய்தால் எதிரணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார்.



