இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார். எனவே அந்த இடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வென்ற அனுபவம் கொண்டவர்.
மேலும் 2012, 2014 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாக வென்ற அனுபவத்தையும் கொண்ட அவர் இந்த வருடம் கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதன் காரணமாக அவர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் எதைப்பற்றியும் நினைக்காமல் உண்மையுடன் அணிக்காக விளையாட வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கம்பீரின் மெசேஜ்:
அத்துடன் அணி விளையாட்டான கிரிக்கெட்டில் சொந்த சாதனைகளைப் பற்றி நினைத்துக் கொண்டு விளையாடும் தனி நபர்களால் சாதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே அனைவரும் ஒன்றாக சேர்ந்து நாட்டுக்காக உண்மையாக விளையாடும் போது வெற்றி தாமாக கிடைக்கும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“உண்மையுடன் விளையாட முயற்சி செய்யுங்கள் என்பதே என்னுடைய ஒரே ஒரு மெசேஜ் ஆகும். உங்களால் முடிந்த வரை நேர்மையுடன் விளையாடுங்கள். அதைச் செய்தாலே முடிவுகள் உங்களைத் தேடி வரும். நான் பேட்டை கையிலெடுத்த போது முடிவுகளைப் பற்றி சிந்தித்ததில்லை. அத்துடன் என்னுடைய ஆட்டத்தில் நான் எப்போதும் உண்மையுடன் இருக்க வேண்டும் என்பதை நம்புகிறேன்”
“மொத்த உலகமும் உங்களுக்கு எதிராக இருப்பதாக நினைத்தாலும் எப்போதும் சில கொள்கைகள், மதிப்புகள் ஆகியவற்றைப் பின்பற்றி சரியானதை செய்ய முயற்சி செய்யுங்கள். அந்த வகையில் அணியின் நலனுக்காக நீங்கள் சரியானதை செய்கிறீர்கள் என்று உங்களுடைய இதயம் நம்பும். களத்தில் நான் ஆக்ரோசமாக செயல்படுவது, எதிரணியிடம் சண்டையிடுவது உள்ளிட்ட அனைத்தையும் அணியின் நன்மைக்காகவே செய்கிறேன்”
இதையும் படிங்க: இதெல்லாம் சகஜம்.. அதுக்காக அப்படியே போகாதீங்க.. பாண்டியா போன்ற இந்திய வீரர்களுக்கு கம்பீர் அறிவுரை
“அதையே செய்ய முயற்சியுங்கள். ஏனெனில் எங்கே அணி தான் முக்கியம். தனிநபர் முக்கியமல்ல. எனவே நீங்கள் விளையாடும் அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் மட்டும் நீங்கள் விளையாடுங்கள். ஏனெனில் அணி விளையாட்டுக்கு அதுவே தேவைப்படுகிறது. உங்களுடைய சொந்த சாதனைகளைப் பற்றி நினைக்க இது தனி நபர் விளையாட்டு கிடையாது. இது அணி விளையாட்டு. இங்கே அணி தான் உங்களுக்கு முதலாவதாக இருக்க வேண்டும். வேண்டுமானால் நீங்கள் அணியின் கடைசி நபராக இருக்கலாம்” என்று கூறினார்.



