விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னர் ஒரு மாதம் இடைவெளி உள்ளதால் வீரர்கள் அனைவருக்கும் மூன்று வாரங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தங்களது குடும்பத்துடன் வெளியே சென்று நேரத்தை கழித்து வருகின்றனர்.
இந்நிலையில் யூரோ கோப்பை கால்பந்து போட்டிகளை காண சென்ற இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் விராத் கோலியின் அறிவுரைகளை கேளாமல் ரசிகர்கள் அதிகம் கூடும் இது போன்ற இடத்திற்கு சென்று வந்ததால் தான் தொற்று உறுதியானது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு மத்தியில் ரிஷப் பண்ட் எந்தவிதமான மாஸ்க் (முகக்கவசம்) அணியாமல் இருந்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கும் செல்பி எடுக்க அனுமதி கொடுத்துள்ளார். இது போன்ற விடயங்கள் தற்போது அவர் மீது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் பண்ட் குறித்த இந்த விவகாரம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில் :
தற்போது இங்கிலாந்தில் யூரோ கோப்பை கால்பந்து போட்டி மட்டுமின்றி விம்பிள்டன் போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ரிஷப் பண்ட் கலந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. மேலும் நம்மால் அனைத்து நேரங்களிலும் மாஸ்க் அணிந்து கொண்டே இருக்க முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதனால் இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என கங்குலி பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சில நாட்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு நெகட்டிவ் வந்தால் அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தொடர்களாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.