பிசிசிஐயின் 89வது ஆண்டு பொதுக் கூட்டம் வருகிற வியாழக் கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு முன் பயிற்சி போட்டியாக பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலர் ஜெய் ஷா தலைமையிலான அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 1,10,000 பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் கொண்ட மோதிரா மைதானத்தில் இதுவரை எந்த போட்டிகளும் நடைபெறாத நிலையில் தற்போது முதன்முதலாக பிசிசிஐ உறுப்பினர்களுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் நடுவராக முன்னாள் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா செயல்படுகிறார். இதன் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் 89வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த பொதுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளது.
இந்தப் பிரச்சனைகளை சமாளிக்க சவுரவ் கங்குலி ஆவலுடன் காத்திருக்கிறார் என்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஹைதராபாத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் முகமது அசாருதீன், முன்னாள் வீரர்கள் பிரிஜேஷ் படேல், ஜெய்தேவ் ஷா உள்ளிட்ட பிசிசிஐயின் 28 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் இங்கிலாந்து தொடர், உள்ளூர் போட்டிகள், 2021 ஐபிஎல் தொடரை நடத்துவது மற்றும் ஐபிஎல் தொடரில் புதிய அணிகளை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட் இருக்கிறது.
இந்தப் பிரச்சனைகள் குறித்து இறுதி முடிவு எடுக்க அதிக வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகளை சேர்ப்பது குறித்து அனைத்து பிசிசிஐ உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய அணிகள் 2022ஆம் ஆண்டு முதல் மட்டுமே களமிறங்கும் என முன்னரே பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சவுரவ் கங்குலியின் ரசிகர்களுக்கு இந்த பயிற்சி போட்டி ஒரு விருந்தாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் கங்குலிக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் வேளையில் மீண்டும் கங்குலி விளையாடவுள்ளது அவரது ,ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.