இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஹார்டிக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூரியகுமார் யாதவ் இப்படி கேப்டனாக நியமிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் ஆட்சியரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் முழுநேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே அவரது அசத்தலான செயல்பாடு அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே சூரியகுமார் யாதவ் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ள கம்பீர் தான் அவருக்கு டி20 கேப்டன் பதவியை வழங்க காரணமாக இருந்த வேளையில் இனியும் அவருக்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்க உள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில் டி20 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மனாக பார்க்கப்படும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார். ஆனால் 33 வயதான அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள கௌதம் கம்பீர் விரைவில் அவரை டெஸ்ட் அணியிலும் கொண்டுவர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இலங்கைத் தொடர் முடிந்த கையோடு புஜ்ஜி பாபு டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளுமாறு சூர்யகுமார் யாதவை கம்பீர் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த வகையில் புஜ்ஜிபாபு தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக தற்போது சூரியகுமார் யாதவ் விளையாட இருக்கிறார். ஒருவேளை இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவரது ஆட்டம் தேர்வுக்குழுவினரை ஈர்க்கும்.
அதுமட்டுமின்றி துலீப் டிராபி தொடரிலும் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் கம்பீர் அவரை டெஸ்ட் அணிக்குள் கொண்டுவர முயற்சிப்பார். கம்பீர் அவருக்கு ஆதரவு தரும் பட்சத்தில் தேர்வுக்குழுவும் கம்பீரின் முடிவை மீறாது என்பதனால் சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இணைந்தாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவையும், விராட் கோலியையும் எங்களால் கட்டாயப்படுத்த முடியாது.. அதுக்கு காரணம் இருக்கு – ஜெய் ஷா விளக்கம்
ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக அனைவரும் உள்ளூர் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்று கம்பீர் கேட்டுக் கொண்ட வேளையில் சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து உள்ளூர் தொடர்களில் பங்கேற்க இருப்பதினால் அவர் மீது கம்பீர் பெரிய நம்பிக்கை வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



