ஒரு காலத்தில் தடை பெற்று இன்று சென்னையின் கேப்டனான ராக்ஸ்டார் ரவீந்திர ஜடேஜா – அபார வளர்ச்சியின் கதை

Ravindra Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டிக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருந்த வேளையில் வெறும் ஒருநாள் முன்பாக சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த எம்எஸ் தோனி அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

Dhoni

- Advertisement -

புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா:
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் கடந்த வருடம் வரை தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக 4 கோப்பைகளை பெற்றுக் கொடுத்து வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக சென்னையை முன்னேறியுள்ளார். மேலும் அவர் தலைமையில் 12 சீசன்களில் பங்கேற்ற சென்னை 11 முறை பிளே ஆஃப் தகுதி பெற்று 9 ஃபைனல்களில் விளையாடி ஐபிஎல் வரலாற்றில் ஒரு வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.

அப்படிப்பட்ட அவர் 40 வயதை கடந்து விட்ட காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு காலம் காலமாக வகித்து வந்த சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை மற்றொரு வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவர் தலைமையில் சாதாரண வீரராக விளையாட உள்ளார். இதையடுத்து எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குப் பின் சென்னையின் 3-வது கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

jadeja

தடை பெற்ற ஜடேஜா:
இன்று சென்னை போன்ற ஒரு புகழ்பெற்ற அணியின் கேப்டனாகும் அளவுக்கு வளர்ந்துள்ள ரவீந்திர ஜடேஜா ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை செய்யப்பட்டார் என்பது ஒருசில ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஐபிஎல் தொடரில் அவரின் ஆரம்ப காலம் முதல் இப்போது பெற்றுள்ள அபரித வளர்ச்சியை பற்றிய வரலாற்றுச் சுவடுகளை புரட்டிப் பார்ப்போம் வாங்க.

- Advertisement -

1. கடந்த 2008-ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற அண்டர்-19 உலககோப்பையை விராட் கோலி தலைமையிலான இந்தியா வென்று சாதனை படைத்தது. அதில் ஆல்-ரவுண்டராக அசத்தி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா $30,000 என்ற தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Shane Warne Ravindra Jadeja IPL 2008 RR

2. அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே இவரின் திறமையை உணர்ந்து விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் நேரடியாகவே வாய்ப்பை வழங்கினார். அதைப் பயன்படுத்திய ஜடேஜா தம்மால் முடிந்த அளவு அந்த அணியின் வெற்றிகளில் பங்காற்றி ஐபிஎல் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்ற ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். அப்போது முதல் ஷேன் வார்னே அவரை ராக்ஸ்டார் என அழைத்து வந்தார்.

- Advertisement -

3. அதன்பின் 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த அவர் 2010 தொடருக்கு முன்பாக வேறு ஒரு அணியில் அதிக தொகைக்கு விளையாடுவதற்காக விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் முயற்சி செய்தார். அந்த முயற்சி நிரூபிக்கப்பட்டதால் அப்போதைய ஐபிஎல் தொடரின் கமிஷனராக இருந்த லலித் மோடி ரவீந்திர ஜடேஜாவை 2010 ஐபிஎல் தொடரில் பங்கேற்க அதிரடியாக தடை விதித்தார். அது ஒன்று மட்டும் தான் அவர் வாழ்நாளில் ஏற்பட்ட ஒரு கருப்பு புள்ளி எனக்கூறலாம்.

4. அதை தொடர்ந்து தனது தவறை திருத்திக் கொண்ட அவர் 2011-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

- Advertisement -

5. இருப்பினும் அதற்கு அடுத்த வருடம் அந்த அணி கலைக்கப்பட்டதால் அதன் பின் நடந்த மினி ஏலத்தில் 9.2 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமான ரவீந்திர ஜடேஜா இதுநாள் வரை அந்த அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். குறிப்பாக 9.2 கோடிகளுக்கு வாங்கப்பட்ட அவர் 2012 ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

jadeja 1

6. அதன்பின் நிறைய வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் பெரிய அளவில் சோபிக்க தவறிய அவருக்கு சென்னை மற்றும் இந்தியாவின் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வளர்த்து வந்தார். குறிப்பாக இந்திய அணியில் அவர் சொதப்பிய காரணத்தால் பல முறை விமர்சனங்களுக்கு உள்ளான கேப்டன் தோனி அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஜடேஜா மீது இருந்த நம்பிக்கை காரணமாக தொடர்ந்து வாய்ப்பு அளித்து வந்தார்.

7. இடையில் சென்னை தடை பெற்றபோது சுரேஷ் ரெய்னா தலைமையில் குஜராத்தை லயன்ஸ் அணியில் விளையாடிய அவர் மீண்டும் 2018 முதல் சென்னை அணியில் தோனியின் ஆதரவுடன் விளையாடி வருகிறார். தோனி கொடுத்த தொடர்ச்சியான வாய்ப்புகளின் பலன் கடந்த 2019-இல் தான் கிடைத்தது என்றே கூறலாம்.

Jadeja

8. ஏனெனில் 2019-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதிப் போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அதே எம்எஸ் தோனியுடன் இணைந்து காப்பாற்ற போராடிய ரவீந்திர ஜடேஜாவின் முயற்சி தோல்வி அடைந்தது. ஆனால் அந்த ஒரு போட்டிக்கு பின் வேற லெவல் பேட்ஸ்மேனாக உருவெடுத்த அவர் இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் இன்று தனது அதிரடியான பேட்டிங், அற்புதமான சுழல் பந்துவீச்சு மற்றும் மின்னல் வேக பீல்டிங் போன்றவற்றால் இந்தியாவின் முதன்மை ஆல்-ரவுண்டராக பல சாதனைகளை படைத்து வருகிறார்.

9. மேலும் 2019-க்கு பின் வயது காரணமாக தனது பார்மை இழந்த தோனி ஐபிஎல் தொடரில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வந்தார். சென்னை அணியின் பினிஷராகக் கருதப்பட்ட அவர் ரன்கள் எடுக்க தடுமாறிய போது அவரின் இடத்தில் களமிறங்கிய ஜடேஜா கடந்த சில வருடங்களாக அதிரடியாக பேட்டிங் செய்து சிறப்பான வெற்றிகளை தேடிக் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பினிஷராக உருவெடுத்துள்ளார்.

Jadeja

10. அதன் காரணமாக இம்முறை 16 கோடிகளுக்கு சென்னை அணியில் மீண்டும் தக்க வைக்கப்பட்ட அவர் 12 கோடி சம்பளம் வாங்கும் டோனியை விட அதிக சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த வேளையில் தற்போது சென்னை அணியின் 3-வது கேப்டனாக அபார வளர்ச்சி பெற்றுள்ள அவர் முதல் முறையாக ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்டு தனது புதிய பயணத்தை தொடங்க உள்ளார்.

Advertisement