வரலாறு படைத்த ஐபிஎல் : ஸ்பான்சர்கள் மூலம் மட்டும் எவ்வளவு வருமானம் தெரியுமா? வாயை பிளக்கும் வெளிநாடுகள்

Ganguly-ipl
IPL MI
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

IPL 2022

- Advertisement -

இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை பார்ப்பதற்காக 25% ரசிகர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட ஐபிஎல் 2022:
கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரு சாதாரண டி20 தொடராக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு மாபெரும் கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று கூறினால் மிகையாகாது. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தரத்திலும் சரி பணத்திலும் சரி தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு வளர்ந்து வரும் இந்த ஐபிஎல் தொடர் இன்று இமயத்தின் உயரத்தை தொட்டு மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.

IPL

கிரிக்கெட்டை புதிய பரிணாமத்திற்கு எடுத்து வந்துள்ள இந்த ஐபிஎல் தொடர் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கு தரமான இளம் வீரர்களை கண்டறிந்து கொடுக்கிறது. அதேபோல் பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்வாதாரமாக உருவெடுத்துள்ள இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் விரிவடைந்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 7000+ கோடி ரூபாய் செலவில் லக்னோ மற்றும் 5000+ கோடி ரூபாய் செலவில் குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளதால் வழக்கமாக நடைபெறும் 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் இந்த வருடம் நடைபெற உள்ளது. இந்த புதிய அணிகளால் பிசிசிஐக்கு சுமார் 12,000 கோடிக்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளதை பார்க்கும் வெளி நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வாய் மேல் கை வைக்கின்றன என்றே கூறலாம்.

- Advertisement -

முதல் முறையாக 1000 கோடி:
மேலும் சமீப காலங்களாக இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு வருடமும் 4000 கோடி ரூபாய் வருமானத்தை பிசிசிஐ பெற்று வருகிறது. இந்த 4000 கோடி என்பது ஸ்பான்சர்ஷிப், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியிடம் இருந்து பெறப்படும் உரிமத் தொகை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகும். ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஐபிஎல் 2022 தொடருக்கு ஸ்பான்சர்ஷிப் வாயிலாக மட்டும் 1000 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. இந்த வருடம் முதல் முறையாக அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பிகளுக்கு ஸ்பான்சர்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதே இதற்கு ஒரு காரணமாகும்.

Ganguly

இது பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியது பின்வருமாறு. “ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இது ஐபிஎல் எனும் பிராண்ட் பெரிய அளவில் வளர்ந்துள்ளது காட்டுகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் ஸ்பான்சர்ஷிப் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதிலும் சாதனை படைக்கும் வண்ணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனுக்கு 1000 கோடி ரூபாய் வருமானம் ஸ்பான்சர்ஷிப் அடிப்படையில் மட்டுமே கிடைத்துள்ளது” என கூறினார்.

வாயை பிளக்கும் வெளிநாடுகள்:
அதேபோல் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஒவ்வொரு 5 – 7 வருடங்களுக்கு ஒருமுறை பிசிசிஐ ஏலம் விடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவடையும் நிலையில் அடுத்த குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு ஒப்பந்த ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் குறைந்தபட்சம் சுமார் 45,000 கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி புதிய 2 அணிகளை உருவாக்கி ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பிகளுக்கு முதல் முறையாக ஸ்பான்சர்ஷிப் செய்து ஐபிஎல் தொடரின் பிராண்ட் மற்றும் வருமானத்தை உயர்த்துவதே தங்களின் கடமை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதன் காரணமாக உலகின் இதர நாடுகளில் உள்ள கிரிக்கெட் வாரியங்களை காட்டிலும் பிசிசிஐ பல மடங்கு வருமானத்தை சம்பாதிக்கும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசி ஈட்டும் வருமானத்தை விட பிசிசிஐ ஈட்டும் வருமானம் அதிகமாகும். மேலும் ஐபிஎல் தொடரால் இந்திய அரசாங்கத்திற்கும் கேளிக்கை வரியின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் சில ஆயிரம் கோடிகள் வருமானம் கிடைக்கிறது. மொத்தத்தில் ஐபிஎல் தொடரின் பிரமாண்ட வளர்ச்சியையும் அதில் ஈட்டப்படும் வருமானத்தையும் பார்க்கும் வெளிநாடுகள் வாயை பிளக்கின்றன என்றே கூறலாம்.

Advertisement