IND vs ENG : மோர்கனுடன் அதிரடியும் ஓய்ந்துவிட்டதா, வரலாற்றில் சொந்த மண்ணில் மெகா அவமானத்தை சந்தித்த இங்கிலாந்து

IND vs ENG Jasprit Bumrah
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 12-ஆம் தேதியன்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் நட்சத்திரம் விராட் கோலி காயத்தால் விலகிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் நெருப்பான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 2-வது ஓவரில் ஜேசன் ராய் டக் அவுட்டாக அடுத்த பந்திலேயே நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட்டும் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

அந்த நிலையில் களமிறங்கிய மற்றொரு நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 7/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஜானி பேர்ஸ்டோ 7 (20) ரன்களில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே லியம் லிவிங்ஸ்டனும் டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 26/5 என ஆரம்பத்திலேயே சரிந்த தங்களது அணியை மீட்க போராடிய மொயின் அலி 14 (18) ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லர் 6 பவுண்டரியுடன் 30 (32) ரன்களிலும் இந்தியாவின் எக்ஸ்பிரஸ் பந்துவீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர்.

இந்தியா மாஸ்:
அதனால் 59/7 என மொத்தமாக சாய்ந்த இங்கிலாந்து 100 ரன்களை தாண்டாது என்று அந்நாட்டு ரசிகர்கள் கவலை அடைந்தனர். இறுதியில் ஓவெர்ட்டன் 8, கார்ஸ் 15, டேவிட் வில்லி 21 (26) என அந்த அணி பவுலர்கள் கணிசமான ரன்கள் எடுத்ததால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது குறைந்தபட்ச ஸ்கோரான 86 ரன்களை கடந்த இங்கிலாந்து 25.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களுக்கு சுருண்டது. அதனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தனது மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அந்த அணி சொந்த மண்ணில் மாபெரும் அவமானத்தைச் சந்தித்தது.

IND vs ENG Rohit Sharma

அந்த அளவுக்கு எரிமலையாக பந்துவீசிய இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளும் முகமது சமி 3 விக்கெட்டும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 111 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பிய ஷிகர் தவானுடன் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தார். அதில் ஒருபுறம் ஷிகர் தவான் 4 பவுண்டரியுடன் 31* (54) ரன்கள் எடுக்க மறுபுறம் பட்டைய கிளப்பும் வகையில் பேட்டிங் செய்த ரோகித் சர்மா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 76* (58) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

மெகா அவமானம்:
அதனால் 18.4 ஓவரிலேயே 114/0 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் படுமோசமாக செயல்பட்ட இங்கிலாந்து வரலாற்றில் மோசமான தோல்வியை பதிவு செய்ததுள்ளது.

Shami-1

அதிலும் ஜேசன் ராய் 0 (5), ஜானி. பேர்ஸ்டோ 7 (20), ஜோ ரூட் 0 (2), பென் ஸ்டோக்ஸ் 0 (1) என அந்த அணியின் 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டானதே இந்த வரலாற்று தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் இப்படி டக் அவுட்டாவது வரலாற்றில் இது 2-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 2018இல் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இதுபோல ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ரூட் என அந்த அணியின் 3 பேட்ஸ்மேன்கள் இதேபோல் டக் அவுட்டாகியிருந்தார்கள். ஆனால் வரலாற்றிலேயே இப்போதுதான் முதல் முறையாக சொந்த மண்ணில் 3 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகி தங்களது அணியை தலை குனிய வைத்து பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

மோர்கன் போனதும்:
முன்னதாக கடந்த 2015க்கு முன்பு வரை தடுமாறிக் கொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் வருகையால் எழுச்சி பெற்று பட்லர், ராய், ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களுடன் அதிரடி படையாக மாறி சொந்த மண்ணுக்கு வரும் எதிரணிகளை சரமாரியாக அடித்து பெரும்பாலான போட்டிகளில் அசால்டாக 400 ரன்களை குவித்து 2019 உலக கோப்பையை வென்று வலுவான அணியாக மாறியது.

ஆனால் சமீபத்தில் அவர் ஓய்வு பெற்றதும் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட பட்லர் தலைமையில் ஏறக்குறைய அதே வீரர்களுடன் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக விளையாடும் இங்கிலாந்து ஏற்கனவே டி20 தொடரில் தோற்ற நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் தங்களது பயணத்தை தோல்வியுடன் துவக்கியுள்ளது. இதனால் மோர்கன் போனதும் இங்கிலாந்திலிருந்து அதிரடியும் போய்விட்டதா என அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளார்கள்.

Advertisement