உலகசாதனையை உடைப்பது நோக்கமல்ல, எனது நினைப்பு எல்லாம் இதில் மட்டும் தான் – உம்ரான் மாலிக்

Umran Malik 3
Advertisement

கடந்த 2 மாதங்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2022 தொடர் பல பரபரப்பான தருணங்களுடன் நிறைவு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. அந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கேஎல் ராகுல் தலைமையில் ஐபிஎல் தொடரில் அசத்திய வீரர்களுடன் இந்தியா களமிறங்க உள்ளது. குறிப்பாக பினிஷராக சொல்லி அடித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

அதைவிட ஹைதராபாத் அணிக்காக அசுர வேகத்தில் பந்து வீசிய 22 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக் பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்கு மத்தியில் இந்தியாவுக்காக முதல் முறையாக தேர்வாகியுள்ளார். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இவர் கடந்த வருடம் ஒருசில போட்டிகளில் கிடைத்த வாய்ப்பில் 145 கி.மீ வேகத்தில் பந்துவீசி அப்போதைய கேப்டன் விராட் கோலியின் பாராட்டைப் பெற்றார்.

- Advertisement -

சோயப் அக்தர் உலகசாதனை:
அதனால் இந்த வருடம் 4 கோடி என்ற பெரிய தொகைக்கு அவரை ஹைதராபாத் நிர்வாகம் தக்க வைத்த நிலையில் பங்கேற்ற 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்து நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டுள்ளார். மேலும் கடந்த வருடத்தை விட இம்முறை கூடுதலான வேகத்தை பயன்படுத்திய இவர் தொடர்ச்சியாக அசால்டாக 150 கி.மீ வேகப்பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியது பல ஜாம்பவான்களை பாராட்ட வைத்தது. அத்துடன் டெல்லிக்கு எதிரான போட்டியில் 157.0 கி.மீ வேகப்பந்தை வீசி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்த இவர் ஹைதராபாத் பங்கேற்ற 14 போட்டிகளிலும் வேகமான பந்தை வீசி அதற்காக 14 லட்சங்களை பரிசாக வென்றார்.

Umran Malik Pace

அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சோயப் அக்தர் படைத்துள்ள உலக சாதனை (161.3 கி.மீ) சாதனையையும் இவர் நிச்சயம் முறியடிப்பார் என்று சோயப் அக்தர் உட்பட ஒருசில முன்னாள் வீரர்களும் பெரும்பாலான ரசிகர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இருப்பினும் வேகத்திற்கு ஈடாக அவ்வப்போது ரன்களையும் வாரி வழங்கிய அவர் அதற்காக விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனாலும் இந்தியாவில் அவ்வளவு வேகத்தில் பந்து வீசுபவர் இல்லையென்பதால் தைரியமாக தேர்வு குழுவினர் அவரை நம்பி தேர்வு செய்துள்ளனர்.

- Advertisement -

நோக்கம் வேகமல்ல:
இந்நிலையில் சோயப் அக்தர் உலக சாதனையை உடைப்பது நோக்கமல்ல என்று தெரிவித்துள்ள உம்ரான் மாலிக் தமக்கு பொன்னாக கிடைத்துள்ள முதல் வாய்ப்பில் இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் முறையாக அவர் பேட்டி அளித்துள்ளது பின்வருமாறு. “தற்போது அந்த சாதனையில் என்னுடைய கவனமில்லை. நான் சிறப்பாக பந்து வீச விரும்புகிறேன். களத்தில் தேவையான சரியான இடத்தில் பந்துவீசி என்னுடைய நாட்டுக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டியிலும் வெற்றி பெற முயற்சிக்க உள்ளேன். இருப்பினும் என்னுடைய உடலையும் பலத்தையும் சீராக பார்த்துக் கொள்வதற்காக வழக்கம் போல 150 போன்ற வேகத்தை பயன்படுத்த உள்ளேன்” என்று கூறினார்.

Umran

அதேபோல் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் போல உம்ரான் மாலிக் பந்து வீசுவதாக இர்பான் பதான், பிரெட் லீ போன்ற முன்னாள் வீரர்கள் பாராட்டியிருந்தனர். அதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் வக்கார் யூனிசை பின்பற்றவில்லை. எனக்கு என்னுடைய இயற்கையான பந்துவீச்சு உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோரை பின்பற்றித்தான் நான் கிரிக்கெட்டுக்குள் வந்தேன். நான் எனது நாட்டுக்காக சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

- Advertisement -

இந்த 5 போட்டியிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ள்து. அந்த 5 போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தனி ஒருவனாக இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பதே எனது லட்சியமாகும்”
“மேலும் இந்தியா முழுவதும் அனைவரிடமும் இருந்து கிடைத்த ஆதரவுக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் நான் பெருமைப்படுகிறேன். நிறைய உறவினர்கள் வீட்டுக்கு வந்து பாராட்டுகின்றனர். ஐபிஎல் தொடருக்கு பின் நான் பிஸியாக இருந்தாலும் எந்த ஒரு பயிற்சியையும் கைவிடவில்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : தேவைப்படுப்போது அடிக்கமாட்டாங்க – ரோஹித், விராட், ராகுல் மீது முன்னாள் ஜாம்பவான் விமர்சனம்

அவர் கூறுவது போல ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க தொடரில் இவருக்கு முழுமையான 5 வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்காக வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதே தமது இலக்கு என்று உம்ரான் மாலிக் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement