IND vs SA : இதுக்கு மேல என்ன வேணும், டி20 உ.கோ’யில் பும்ராவுக்கு பதில் அவர செலக்ட் பண்ணுங்க – ரசிகர்கள் கோரிக்கை

Deepak Chahar IND
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்துள்ள இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இத்தொடரின் 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 43 (37) கேஎல் ராகுல் 57 (28) விராட் கோலி 49* (28) சூர்யகுமார் யாதவ் 61 (22) தினேஷ் கார்த்திக் 17* (7) என அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 237/3 ரன்கள் குவித்து மிரட்டியது.

அதை தொடர்ந்து 238 என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0, மார்க்ரம் 33 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறியதால் 47/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் அடுத்ததாக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் 174 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை பந்தாடிய நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 8 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 106* (47) ரன்களும் குயின்டன் டி காக் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 69* (48) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 221/3 ரன்களை மட்டுமே எடுத்து தென்னாப்பிரிக்கா போராடி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

வேற என்ன வேணும்:
அதனால் போராடி வென்ற இந்தியா சொந்த மண்ணில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டி20 தொடரை வென்று வரலாற்றை மாற்றி எழுதியது. முன்னதாக இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடிய ஆட்டமே இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ஏனெனில் அந்த அளவுக்கு பந்து வீச்சில் மோசமாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் ஆரம்பத்தில் அசத்தினாலும் பவர் பிளே ஓவருக்குப்பின் ரன்களை தாறுமாறாக வாரி வழங்கி வெற்றி தாரை வார்க்க பார்த்தனர்.

ஆனால் அவர்களுக்கு மத்தியில் தங்கமாக செயல்பட்ட தீபக் சஹர் மட்டும் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் 1 மெய்டன் ஓவர் உட்பட வெறும் 24 ரன்களை மட்டும் கொடுத்து 6.00 என்ற எக்கனாமியில் போர்க்களத்துக்கு மத்தியில் பூவாக பந்து வீசினார். அதிலும் குறிப்பாக கடைசி கட்ட ஓவர்களில் இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி திணறிய போது 17வது ஓவரை வீசிய இவர் வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. முன்னதாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலும் அதே 4 ஓவரில் அதே 24 ரன்களை மட்டுமே கொடுத்து துல்லியமாக பந்து வீசிய அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலர் – சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் ஆகிய இரட்டை சாதனைகளை படைத்து உலக கோப்பையில் விளையாடும் முதன்மை பவுலராக காத்திருந்த சஹர் ஐபிஎல் 2022 தொடருக்கு முன்பாக சந்தித்த காயத்தால் பெரிய பின்னடைவை சந்தித்தார். ஏனெனில் அதனால் 2 மாதங்கள் விலகி அதிலிருந்து குணமடைந்து திரும்பிய போது ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வீரர்கள் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்து விட்டனர்.

அதனால் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்த அவர் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் களமிறகிய முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று கம்பேக் கொடுத்த போதிலும் உலகக் கோப்பை அணியில் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே இடம் பிடிக்க முடிந்தது. இந்த தென் ஆப்ரிக்க தொடரில் கூட நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியதால் வாய்ப்பை பெற்றுள்ள அவர் இந்த கடைசி வாய்ப்பை இறுக்கமாக பிடித்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

அதிலும் புவனேஸ்வர், ஹர்ஷல், அர்ஷிதீப் சிங் போன்ற இதர பவுலர்கள் கடைசி ஓவர்களில் தடுமாறும் நிலையில் பும்ரா போலவே பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை சிறப்பாக பந்து வீசும் திறமை பெற்றுள்ள தீபக் சஹர் பும்ராவை விட பேட்டிங்கில் லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களை அதிரடியாக அடிக்கும் திறமை பெற்றுள்ளார். அதனால் காயமடைந்து வெளியேற காத்திருக்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் முதன்மை அணியில் இவரைத் தேர்வு செய்யுமாறு கேப்டன் ரோகித் மற்றும் அணி நிர்வாகத்துக்கு ரசிகர்கள் வலுவான கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

Advertisement