நன்றி, விஸ்வாசத்தை மும்பையிடம் பாத்து கத்துக்கோங்க – சென்னை அணியை விளாசும் ரசிகர்கள், நடந்தது என்ன

Jadeja-1
- Advertisement -

ரசிகர்களின் அபிமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கோலாகலமாக நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இத்தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று வெளியிட்டன. அதில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களுக்காக 2010 முதல் அபாரமாக செயல்பட்டு 5 கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸின் கைரன் பொல்லார்ட்டை இந்த வருடம் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக விடுவித்துள்ளது.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியின் உப்பை சாப்பிட்டு வளர்ந்த நான் அந்த அணிக்கு எதிராக விளையாட மாட்டேன் என்ற வகையில் மானஸ்தனை போல் 35 வயதிலேயே பொல்லார்ட் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த நிலையில் தங்களது அணி மீது இவ்வளவு மரியாதையும் பாசமும் வைத்திருக்கும் பொல்லார்ட் போன்ற அனுபவம் வாய்ந்த வீரரை வெளியே விட விரும்பாத மும்பை நிர்வாகம் தங்களுடைய பேட்டிங் பயிற்சியாளராக அறிவித்து பதிலுக்கு பாச மழை பொழிந்துள்ளது.

- Advertisement -

கத்துக்கோங்க சென்னை:
மொத்தத்தில் பொல்லார்ட் விஷயத்தில் இயக்குனர் விக்ரமன் படத்தை போல நடந்து கொண்ட மும்பையை பார்த்து அந்த அணி ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளார்கள். அந்த நிலைமையில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாகவும் மும்பையின் எதிரியாகவும் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது அணியில் ட்வயன் ப்ராவோவை விடுவித்தது அந்த அணி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் கேப்டன் தோனியை தக்க வைத்த சென்னை நிர்வாகம் சண்டை என்று வந்த செய்திகளை பொய்யாக்கும் வகையில் ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்துள்ளது.

அதற்கு “அனைத்தும் நலமாக உள்ளது சென்னைக்காக விளையாட தயாராக உள்ளேன்” என்று தோனிக்கு தலை வணங்கும் புகைப்படத்தை ரவீந்திர ஜடேஜா பதிவிட்டது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதை பார்த்த முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா “சிஎஸ்கே என்பது எங்கள் வாழ்க்கையின் ஒரு குடும்பமாகும்” என்று பாராட்டினார். அதைப் பார்த்த ரவீந்திர ஜடேஜா “ஆம் பிரதர்” என்று சமூக வலைதளத்தில் பதிலளித்தார். இதை பார்க்கும் சென்னை ரசிகர்கள் நன்றியையும் விசுவாசத்தையும் மும்பையிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் சென்னை அணி நிர்வாகத்தை சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் என்ன தான் கேப்டனாக தோனி 4 கோப்பைகளை வென்றாலும் அவருடைய தளபதியாக கடந்த 2008 முதல் எதிரணி பவுலர்களை பந்தாடிய நம்பிக்கை நாயகன் சுரேஷ் ரெய்னா ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் சென்னை இதுவரை வென்ற 4 கோப்பைகளிலும் சுரேஷ் ரெய்னா கருப்பு குதிரையாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் இல்லாத 2 சீசன்களிலும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

அந்தளவுக்கு தோனிக்கு அடுத்தபடியாக சின்னத்தல என்று கொண்டாடும் வகையில் சென்னையின் கருப்பு குதிரையாக கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்த ரெய்னாவை 2021 சீசனில் பார்ம் இழந்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக மொத்தமாக கழற்றி விட்ட சென்னை நன்றி இல்லாமல் நடந்து கொண்டது எதிரணி ரசிகர்களை கூட கோபமடைய வைத்தது. ஆனால் அவரோ நிதர்சனத்தை புரிந்து கொண்டு 35 வயதிலேயே ஓய்வு பெற்றாலும் இந்த வருடம் வர்ணனையாளராக வந்து சென்னைக்கு ஆதரவு கொடுத்து விஸ்வாசத்துடன் நடந்து கொண்டதை போல இப்போதும் சமூக வலைதளங்களில் ஆதரவு கொடுத்து வருகிறார்.

எனவே அவரை மீண்டும் அணியில் வாங்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் மும்பையை போல் ஏதேனும் ஒரு பயிற்சியாளர் பதவியை கொடுத்து கௌரவித்து அவருடைய அற்புதமான அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை ரசிகர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஏனெனில் வரலாற்றில் சென்னைக்காக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக இப்போதும் சாதனை படைத்துள்ள சுரேஷ் ரெய்னா மிஸ்டர் ஐபிஎல் என கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement