IND vs ENG : அப்படி உங்களுக்கு என்ன வன்மம், முன்னாள் ஜாம்பவான் இந்திய வீரரை விளாசும் விராட் கோலியின் ரசிகர்கள், என்ன நடந்தது

Kohli-1
- Advertisement -

பர்மிங்காமில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் சேர்த்தது. ஏனென்றால் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 98/5 என தடுமாறிய இந்தியாவை 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக சதமடித்து 146 (111) ரன்களை குவித்தார்.

அவருடன் நங்கூரமாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்கள் குவித்தார். அதைவிட கடைசி நேரத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்து அனைவரையும் திகைக்க வைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

போராடும் இந்தியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 284 ரன்களுக்கு சுருண்டது. ஜோ ரூட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்காமல் கைவிட்ட நிலையில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 132 ரன்கள் மிகப்பெரிய முன்னிலை பெற்ற இந்தியா 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விராட் கோலி, விகாரி, ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற முக்கிய வீரர்கள் 2-வது வாய்ப்பிலும் சுமாராக செயல்பட்டதால் இந்தியா 245 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அனுபவத்தைக் காட்டிய புஜாரா அரைசதம் அடித்து 66 ரன்களும் அவருடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிசப் பண்ட் அரைசதம் அடித்து 57 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 378 என்ற இலக்கை துரத்தி வரும் இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 100/0 என்ற அபாரமான தொடக்கத்தை பெற்று மிரட்டலை கொடுத்தது. அதற்காக அஞ்சாத இந்தியா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து இப்போட்டியில் வென்று 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல போராடி வருகிறது.

- Advertisement -

விராட்டை விமர்சித்த சேவாக்:
முன்னதாக கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறி வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இப்போட்டியில் சதம் அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11, 20 என 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளித்தார். ஆனால் இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கட்டத்தில் அவர் நடந்து கொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆம் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது நல்ல பார்மில் இருக்கும் அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ முதல் 60 பந்துகளில் வெறும் 12* ரன்கள் மட்டுமே எடுத்து மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்ததால் தீயைப் போல பற்றிய அவர் அடுத்த 59 பந்துகளில் 88 ரன்களை தெறிக்கவிட்டு சதமடித்து மிரட்டலான பதிலடி கொடுத்தார். அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் “புஜாரா போல் மெதுவாக விளையாடிக் கொண்டிருந்த பேர்ஸ்டோவை விராட் கோலி ஸ்லெட்ஜிங் செய்து ரிஷப் பண்ட் போல அதிரடியாக விளையாட வைத்து விட்டார்” என்று தனது ட்விட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

என்ன வன்மம்:
இருப்பினும் போட்டியில் ஸ்லெட்ஜிங் செய்வதும் வெற்றிக்கான ஒரு வழி என தெரிவிக்கும் விராட் கோலியின் ரசிகர்கள் களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வது போட்டியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என்ற வகையில் வீரேந்திர சேவாக் மீது பதிலுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்த நிலைமையில் இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை இந்தியா எடுத்த போது வழக்கமாக தனக்கே உரித்தான பாணியில் விராட் கோலி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆனால் அதை இந்திய வீரர் முகமது கைப் உடன் ஹிந்தி வர்ணனையில் ஈடுபட்டிருந்த வீரேந்திர சேவாக் “உற்சாக நடனமாடுபவரை போல விராட் கோலி அங்கே நடனமாடுகிறார்” என்று நேரலையில் வர்ணனை செய்தார். அதற்கு இந்தியில் காசு வாங்கி கொண்டு நடனமாடும் பெண் என்பது போன்ற பொருளாகும். அதனால் கோபமடைந்த விராட் கோலியின் ரசிகர்கள் ஒரு ஜாம்பவானாக இருந்து கொண்டு நீங்கள் இவ்வாறு பேசுவது சரியில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சிப்பதுடன் அவரை விரைவில் வர்ணனையாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

Advertisement