ஜிம்பாப்வே தொடருக்கு கூட தகுதியில்லையா? அவங்களுக்கு பதில் தரமான நடராஜன் எங்கே.. அகர்கரை விளாசும் ரசிகர்கள்

T Natarajan
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வழக்கம் போல இம்முறையும் கத்துக்குட்டியான ஜிம்பாப்வேவுக்கு எதிராக ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு முழுமையாக ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடைய ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய ரியான் பராக், அபிஷேக் சர்மா, நித்திஷ் ரெட்டி, துருவ் ஜுரேல் ஆகியோர் முதல் முறையாக இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் போன்றவர்களும் இந்தியாவுக்காக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த அணியில் தமிழகத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

ரசிகர்கள் கேள்வி:
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி 2020/21 சுற்றுப்பயணத்தில் அறிமுகமான நடராஜன் ஆஸ்திரேலிய மண்ணில் 3 விதமான தொடர்களிலும் நன்றாக பந்து வீசி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். ஆனால் அதன் பின் காயத்தை சந்தித்த அவருக்கு இதுவரை மறுவாய்ப்பு கிடைக்கவில்லை.

குறிப்பாக தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் அசத்தும் அவர் 2024 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை 9.06 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார். அதன் காரணமாக நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரை தேர்வுக்குழு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட தேர்வு செய்யவில்லை. அதுவே தமிழக ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

அந்த நிலையில் தற்போது கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வேவுக்கு எதிராகவும் நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை. இத்தனைக்கும் ஜிம்பாப்வே தொடரில் தேர்வாகியுள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 2024 ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் வெறும் 17 விக்கெட்டுகளை 9.58 என்ற எக்கனாமியில் தான்எடுத்துள்ளார். ஆனால் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் அவரை விட 0.52 குறைந்த எக்கனாமியில் 2 விக்கெட்டுகள் அதிகமாகவும் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: காசுக்காக இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் தோற்க மாட்டாங்க.. பாகிஸ்தான் நிரூபரால் எலான் மஸ்க்கிற்கு அஸ்வின் கோரிக்கை

இது போக கலீல் அகமதை விட நடராஜன் டெத் அவர்களில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசக்கூடியவர். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது மட்டுமல்லாமல் 9.59 எக்கனாமியில் பந்து வீசிய ஆவேஷ் கான், சிஎஸ்கே அணியில் ரன்களை வாரி வழங்கிய துசார் தேஷ்பாண்டே ஆகியோருக்கும் ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் நடராஜனுக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்காததால் ஜிம்பாப்வே தொடரில் விளையாடுவதற்கு கூட தகுதியில்லையா? என்று தமிழக ரசிகர்கள் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை விளாசி வருகின்றனர்.

Advertisement