
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 7-ஆம் தேதியன்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சௌதாம்ப்டன் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 198/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அற்புதமாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (33) ரன்கள் எடுக்க அவருடன் தீபக் ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (17) ரன்களும் 4 பவுண்டரி 2 சிக்சருடன் சூர்யகுமார் யாதவ் 39 (19) ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 5 பவுண்டரியுடன் 24 (14) ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரிலேயே கிளீன் போல்டானார். அதைவிட டேவிட் மாலன் 21 (14) லியாம் லிவிங்ஸ்டன் 0 (3) ஜேசன் ராய் 4 (16) என 3 முக்கியமான பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் செய்த ஹர்டிக் பாண்டியா ஆரம்பத்திலேயே இந்தியாவை முன்னிலைப் படுத்தினார்.
இந்தியாவின் பதிலடி:
அதனால் 33/4 என மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்தை 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொய்ன் அலி – ஹரி ப்ரூக் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால் சஹால் வீசிய அற்புதமான சுழல் பந்தில் சிக்கிய மொய்ன் அலி 36 (20) ரன்களிலும் ஹரி ப்ரூக் 28 (32) ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டானார்கள். இறுதியில் க்றிஸ் ஜோர்டான் 26* (17) ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இதர பேட்ஸ்மென்கள் கைகொடுக்க தவறியதால் 19.3 ஓவரில் 148 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் அர்ஷிதீப் சிங் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து அசத்தியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு முக்கிய வீரர்கள் அனைவரும் அதிரடியாக ரன்களை குவித்ததால் 15 ஓவர்களில் 160/4 என்ற நிலைமையில் இருந்தது. ஆனால் கடைசி 5 ஓவரில் வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 4 விக்கெட்டுகளை மடமடவென இழந்தது.
மீண்டும் அவமானம்:
அதனால் அபாரமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியா கடைசியில் 200 ரன்களை தொட முடியாமல் போனது. 12-வது ஓவரில் சூரியகுமார் யாதவ் அவுட்டானதும் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்க்கு பதிலாக அக்சர் படேல் அதுவும் 5-வது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாகும். ஆம் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்ற லட்சியத்தில் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்க விட்டு 3 வருடங்களுக்கு பின் அபார கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் அதன்பின் நடந்த தென் ஆப்ரிக்க தொடரிலும் அதிரடியாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார்.
அதன் காரணமாக அயர்லாந்து தொடரில் பங்கேற்று பின்னர் 2 கவுண்டி அணிகளுக்கு எதிரான பயிற்சி போட்டியில் கேப்டனாக செயல்பட்ட அவர் போட்டிக்கு தகுந்தார் போல் எந்த சூழ்நிலையிலும் களமிறங்கும் திறமையையும் அனுபவத்தையும் பெற்றுள்ளார். ஆனால் முன்கூட்டியே களமிறங்கினால் அவரால் ரன்கள் அடிக்க முடியாது என்று கருதும் இந்திய அணி நிர்வாகம் கடைசி நேரத்தில் 18-வது ஓவரில் தான் களமிறக்கியது. அதனால் செட்டாவதற்கு வாய்ப்பு கிடைக்காத அவர் 2 பவுண்டரியுடன் 11 (7) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் அவருக்கு பதிலாக 12-வது ஓவரிலேயே களமிறக்கப்பட்ட அக்சர் பட்டேல் 3 பவுண்டரியுடன் 17 (12) ரன்கள் எடுத்தாலும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய ரன்களை எடுக்கவில்லை.
ஒருவேளை அவரின் இடத்தில் முன்கூட்டியே களமிறக்கப்பட்டிருந்தால் மேலும் பந்துகளை எதிர்கொண்டு இன்னும் செட்டாகி தினேஷ் கார்த்திக் சற்று அதிகமான ரன்களை எடுத்திருப்பார். சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் கேப்டன் ரிஷப் பண்ட் இருந்தபோது தினேஷ் கார்த்திக்க்கு இதே நிலைமை ஏற்பட்டது. அதற்காக பினிஷெர்கள் என்றால் கடைசி நேரத்தில்தான் களமிறங்க வேண்டும் என்ற சட்டமில்லை என அப்போதே ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க : இப்படி ஒரு வீக்னசை வச்சிக்கிட்டு இந்திய அணி டி20 உலககோப்பையை ஜெயிக்க முடியாது – மைக்கல் வாகன் கருத்து
ஆனால் தற்போது கேப்டன் ரோகித் சர்மாவும் தினேஷ் கார்த்திக்கை நம்பாமல் அதே முடிவை எடுத்துள்ளதால் பல ரசிகர்கள் அதிருப்தியடைந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புகின்றனர். நல்லவேளையாக நேற்றைய போட்டியில் பவுலர்கள் அசத்தியதால் இந்தியா தப்பியது. இல்லையேல் ரோகித் சர்மாவின் அந்த முடிவு தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கலாம்.