டெஸ்ட் மேட்ச் ஆடவா இவ்ளோ விலை கொடுத்து வாங்குனீங்க? தொடர்ந்து சொதப்பும் மும்பை வீரர் மீது ரசிகர்கள் கோபம்

Ishan
- Advertisement -

மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2022 தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட தொடரில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் போராடி வருகின்றன. இதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது.

அதே நிலைமையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா தலைமையில் பரிதவித்த சென்னை கூட தனது 5-வது போட்டியில் அதிரடியான வெற்றியை பதிவு செய்து 2 பொன்னான புள்ளிகளைப் பெற்று 9-வது இடத்திற்கு முன்னேறி நிம்மதி அடைந்தது. ஆனால் 4 தொடர் தோல்விகளுக்கு பின் சென்னையைப் போல மீண்டெழும் என எதிர்பார்த்த மும்பை அதற்கடுத்து நடந்த 5, 6 ஆகிய போட்டிகளிலும் அதற்கான அறிகுறியை காட்டாமல் மீண்டும் மோசமாக செயல்பட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 6 போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாபத்திற்கு உள்ளானது.

- Advertisement -

வெளியேறும் மும்பை:
இதன் காரணமாக இந்த வருட ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுடன் முதல் அணியாக மும்பை வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் இம்முறை 10 அணிகள் விளையாடுவதால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 8 – 9 வெற்றிகள் தேவைப்படுகின்றது. அந்த நிலையில் தனது அடுத்த 8 போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்தால் கூட ரன்ரேட் காரணமாக முதல் 4 இடங்களை மும்பை கடினமாகும்.

காரணம் தற்போதைய நிலைமையில் மற்ற அணிகளை காட்டிலும் மும்பைக்கு தான் மிக மோசமான ரன்ரேட் உள்ளது என்பதையும் தாண்டி தற்போது அந்த அணியில் நிலவும் மோசமான பேட்டிங் மற்றும் அதைவிட படுமோசமான பவுலிங்கை வைத்துக்கொண்டு 8க்கு 8 என்ற வெற்றிகள் என்பது கிட்டத்தட்ட அசாத்தியமானது என்றே கூறலாம்.

- Advertisement -

மொத்தமும் சொதப்பல்:
இந்த அடுத்தடுத்த தோல்விகளுக்கு காரணம் அந்த அணியின் மோசமான பந்துவீச்சு முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மட்டும் தனி ஒருவனாக வெற்றிக்கு போராடுகையில் அவருக்கு கை கொடுக்க வேண்டிய டைமல் மில்ஸ், ஜயதேவ் உனட்கட், பேசில் தம்பி, டேனியல் சாம்ஸ் போன்ற பவுலர்கள் எதிரணிக்கு ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையாக பந்து வீசுகின்றனர்.

சரி மோசமான பந்து வீச்சை மூடி மறைக்கும் வகையில் அந்த அணியின் பேட்ஸ்மேன்களாவது ரன்களை அடிப்பார்களா என்று பார்த்தால் அவர்களில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இளம் வீரர் தேவால்ட் பிரேவிஸ் தவிர யாருமே தொடர்ச்சியாக ரன்களை அடிப்பதில்லை. குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, கைரன் பொல்லார்ட் போன்ற முதுகெலும்பு வீரர்களின் பேட்டில் ரன்கள் வர அடம் பிடிக்கிறது. மொத்தத்தில் அந்த அணியின் பேட்டிங் பவுலிங் என அனைத்தும் சொதப்பலாக இருக்கிறது என்று வெளிப்படையாக கூறலாம்.

- Advertisement -

ஏமாற்றிய இஷான் கிஷன்:
சமீபத்தில் நடந்த ஏலத்தில் மும்பை அணி நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறு தான் அனைத்து சொதப்பலுக்கும் காரணம் என்று கூற வேண்டும். ஏனெனில் இஷான் கிஷன் என்ற ஒரு இளம் வீரருக்கு மட்டும் அந்த அணி 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகையை செலவழித்து அதுவும் கேப்டன் ரோகித் சர்மா (16 கோடி) வாங்கும் சம்பளத்திற்கு ஈடாக வாங்கியது.

அதைவிட காயத்தால் விளையாடமாட்டார் எனத் தெரிந்தும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை வாங்கி இலவச சம்பளத்தை கொடுக்கும் அந்த அணி நிர்வாகம் அவரைபோலவே மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய டிம் டேவிட்டை சிறப்பாக செயல்பட தவறியதால் ஒருசில போட்டிகளுக்கு பின் பெஞ்சில் அமர வைத்து வருகிறது.

- Advertisement -

சரி 15 கோடிகளை வாரியிறைத்த இஷான் கிசான் அந்த அளவுக்கு செயல்படுகிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஏனெனில் முதல் போட்டியில் 81* (48), 2-வது போட்டியில் 54 (43) என அவர் அதிரடியாக ரன்களை குவித்த போதிலும் இதர பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் மும்பை தோல்வியடைந்தது. ஆனால் அதன் பின் 14 (21), 26 (28), 3 (6), 13 (17) என அடுத்த 4 போட்டிகளில் மனிதர் வரிசையாக மெதுவாக டெஸ்ட் இன்னிங்ஸ் போல விளையாடியது மும்பையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இதனால் 15 கோடி கொடுத்து டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவதற்கா வாங்கப்பட்டார் என்று நிறைய ரசிகர்கள் கோபத்துடன் அவர்மீது அலுத்துக் கொள்கிறார்கள். இதற்காக அவர் திறமை இல்லாதவர் என்று அர்த்தமில்லை.

இதையும் படிங்க : ஒரே வாரத்தில் இப்படி ஒரு மாற்றமா? புள்ளிபட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி தெரியுமா? – விவரம் இதோ

இவ்வளவு கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளார்கள் அதற்கு நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற பதற்றத்திலேயே அவர் இப்படி சொதப்புகிறார். மேலும் அவருக்காக இவ்வளவு தொகைகளை செலவளித்ததற்கு பதிலாக தேவால்ட் பிரேவிஸ் போன்ற வேறுசில நல்ல தரமான வீரர்களை வாங்கியிருந்தால் மும்பைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

Advertisement