IPL 2023 : பேசாம கமெண்ட்ரி பண்ண வாங்க, தொடர்ந்து சொதப்பும் டிகே – மோசமான ஐபிஎல் வரலாற்று சாதனையால் ரசிகர்கள் அதிருப்தி

Dinesh Karthi 66
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 20வது லீக் போட்டியில் டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 174/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 50 (34) ரன்கள் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், மிட்சேல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 175 ரன்களை துரத்திய டெல்லி பெங்களூருவின் தரமான பந்து வீச்சில் 20 ஓவரில் 151/9 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.

அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 50 (38) ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக விஜயகுமார் 3 விக்கெட்கள் எடுத்தார். அதனால் 2013க்குப்பின் தன்னுடைய முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து 5 தோல்விகளை பதிவு செய்த டெல்லி பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் ஆரம்பத்திலேயே 50% இழந்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் மூத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் சுமாராக செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

கமெண்ட்ரி பண்ண வாங்க:
கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறிய அவர் தோனி எனும் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் வந்ததால் இந்திய அணியில் நிலையான வாய்ப்பை இழந்தார். மேலும் கிடைத்த வாய்ப்புகளிலும் 2018 நிதியாஸ் கோப்பை தவிர்த்து பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்ட அவர் 2019 உலக கோப்பையிலும் வெற்றிகளில் பங்காற்றாததால் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். அந்த நிலையில் 2021இல் வர்ணனையாளராக அவதாரம் எடுத்த அவருடைய இந்திய கேரியர் முடிந்ததாகவே கருதப்பட்டது.

ஆனாலும் மனம் தளராமல் போராடிய அவர் கடந்த வருடம் பெங்களூரு அணிக்காக 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி மிகச் சிறந்த பினிஷராக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதில் முக்கிய பங்காற்றினார். அதனால் 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் இருதரப்பு தொடர்களில் அசத்தியதால் டி20 உலக கோப்பையிலும் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

ஆனால் பொதுவாகவே அழுத்தமான போட்டிகளில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் விராட் கோலியின் போராட்டத்தை வீணடிக்கும் வகையில் சொதப்பினார். நல்லவேளையாக அந்த சொதப்பலை சரி செய்த அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் அவருடைய இடத்தில் முக்கிய ரன்களை விளாசி இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

Dinesh-Karthik

மறுபுறம் டி20 உலகக்கோப்பையில் 1 சிக்சர் கூட அடிக்காமல் மோசமாக செயல்பட்ட அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததால் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார். அந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தை சரியாகப் பிடித்து ரன் அவுட் செய்யாமல் 1 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்க ஒரு காரணமாக அமைந்த அவர் பேட்டிங்கில் 0 (3), 9 (8), 1 (1), 0 (1) என 10 ரன்களை கூட தாண்டாமல் மோசமாக செயல்பட்டு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக டெல்லிக்கு எதிரான இப்போட்டியில் குல்தீப் யாதவ் வீசிய முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து தினேஷ் கார்த்திக் கோல்டன் டக் அவுட்டானார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை மந்திப் சிங்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பட்டியல்:
1. தினேஷ் கார்த்திக்/மந்தீப் சிங் : தலா 15*
2. ரோஹித் சர்மா/சுனில் நரேன் : தலா 14

இதையும் படிங்க:வீடியோ : விராட், ரோஹித்தின் சாதனையை உடைத்து 2 புதிய உலக சாதனை படைத்த பாபர் அசாம் – தோனியின் சாதனையும் தகர்ப்பு

ஏற்கனவே இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ள இந்திய அணியில் 37 வயதை கடந்து விட்ட இவருக்கு நிச்சயம் இனிமேல் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் ஐபிஎல் தொடரிலும் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் பெங்களூரு அணியில் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் தினேஷ் கார்த்திக் செயல்படுவதால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் பேசாமல் இந்த சீசனுடன் விடை பெற்று எங்களை வர்ணனை செய்து மகிழ்விப்பதற்கு வாருங்கள் என்று சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement