IPL 2023 : எதிரணிக்கு இம்பேக்ட் வீரராக செயல்படும் அவரை ட்ராப் பண்ணுங்க, இளம் வீரர் மோசமான சாதனை – ரசிகர்கள் அதிருப்தி

Tushar DeshPandey
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 3ஆம் தேதியன்று நடைபெற்ற 6வது லீக் போட்டியில் லக்னோவை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. சேப்பாக்கம் மைதானத்தில் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ருதுராஜ் கைக்வாட் 57, டேவோன் கான்வே 47 என முக்கிய பேட்ஸ்மேன்களில் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 217/7 ரன்கள் குவித்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 218 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் அதிரடியாக 53 (22) ரன்கள் குவித்தும் கேஎல் ராகுல் 20, தீபக் ஹூடா 2, க்ருனால் பாண்டியா 9, மார்கஸ் ஸ்டோனிஸ் 21 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 205/7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய மொய்ன் அலி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இந்த ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறை எஞ்சிய அனைத்து அணிகளுக்கும் சாதகமாக இருக்கும் நிலையில் சென்னைக்கு மட்டும் வில்லனாக அமைவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

- Advertisement -

எதிரணிக்கு இம்பேக்ட்:
குறிப்பாக ராயுடுவுக்கு பதிலாக முதல் போட்டியில் இம்பேக்ட் வீரராக தேர்வான துஷார் தேஷ் பாண்டே வெறும் 3.2 ஓவரில் 51 ரன்களை வாரி வழங்கி சென்னைக்காக களமிறங்கிய தன்னுடைய முதல் அறிமுக போட்டியிலேயே கையிலிருந்த சென்னையின் வெற்றியை குஜராத்துக்கு தாரை வார்க்கும் வகையில் மோசமாக செயல்பட்டார். இருப்பினும் ஒரு மோசமான செயல்பாட்டால் அதிரடியாக அணியிலிருந்து நீக்கும் பண்பை கொண்டிருக்காத தோனி இந்த போட்டியிலும் அவரை ராயுடுவுக்கு பதிலாக அதே போல இம்பேக்ட் வீரராக மீண்டும் தேர்வு செய்தார்.

ஆனால் கொஞ்சம் கூட மாறாமல் முதல் ஓவரிலேயே 18 ரன்களை வாரி வழங்கிய அவர் மீண்டும் சென்னை ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைத்தார். இருப்பினும் கடைசி 3 ஓவரில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் இம்முறை வெற்றி பறி போகாத அளவுக்கு ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். ஆனால் உண்மையாகவே மொய்ன் அலி மட்டும் 4 விக்கெட்டுகளை எடுத்து லக்னோவின் அதிரடி பேட்டிங் வேகத்தை குறைக்காமல் போயிருந்தால் நிச்சயமாக இவர் கடைசி 3 ஓவரிலும் சரமாரியான அடி வாங்கியிருப்பார் என்று உறுதியாக சொல்லலாம்.

- Advertisement -

அதை விட இந்த போட்டியில் தன்னுடைய முதல் ஓவரிலேயே 0, 1, 2, 1 நோ-பால், 1 ஒய்ட், 1 நோ-பால், 1 ஒய்ட், 4, 1 ஒய்ட், 6, 0 என 11 பந்துகளை வீசிய அவர் 18 ரன்களை கொடுத்தார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை கொண்ட மிகப்பெரிய ஓவரை வீசிய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை முகமது சிராஜுடன் துஷார் தேஷ்பாண்டே பகிர்ந்து கொண்டுள்ளார். இதே தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணிக்காக முகமது சிராஜ் இதே போல 11 பந்துகளைக் கொண்ட ஓவரை வீசி முதல் வீரராக அந்த மோசமான சாதனை படைத்தார்.

மறுபுறம் காலம் காலமாக சிறந்த பந்து வீச்சு கூட்டணியை கொண்ட சென்னை அணிக்காக 11 பந்துகளை கொண்ட பெரிய ஓவரை வீசிய முதல் வீரர் என்ற பரிதாப சாதனை துசார் டேஷ்பாண்டே படைத்துள்ளார். ஆனால் பொதுவாக பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவது கூட பரவாயில்லை ஆனால் ஒயிட் மற்றும் நோ-பால்களை வீசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று வல்லுனர்கள் தெரிவிப்பார்கள்.

இதையும் படிங்க: IPL 2023 : எதிரணிக்கு இம்பேக்ட் வீரராக செயல்படும் அவரை ட்ராப் பண்ணுங்க, இளம் வீரர் மோசமான சாதனை – ரசிகர்கள் அதிருப்தி

அதன் காரணமாகவே அடுத்து வரும் போட்டிகளிலும் இப்படியே பந்து வீசினால் புதிய கேப்டன் தலைமையில் விளையாட வேண்டியிருக்கும் என்று தோனியும் போட்டியின் முடிவில் எச்சரித்திருந்தார். மொத்தத்தில் எதிரணிக்கு இம்பேக்ட் வீரராக செயல்படும் துஷார் தேஷ்பாண்டேவை தயவு செய்து அடுத்த போட்டியில் சேர்க்காமல் டிராப் செய்யுமாறு சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement