PAK vs ENG : நீங்கல்லாம் எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டீங்க, 2வது டெஸ்டில் சொதப்பும் பாகிஸ்தானை கலாய்க்கும் ரசிகர்கள்

PAK vs ENG
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து முதல் போட்டியில் முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்து 2வது இன்னிங்ஸில் முக்கிய நேரத்தில் தைரியமாக டிக்ளேர் செய்து 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் கிண்டல்களுக்கு உள்ளான பாகிஸ்தான் டிசம்பர் 9ஆம் தேதியன்று முல்தானில் நடைபெற்ற 2வது போட்டியில் களமிறங்கியது. முன்னதாக முதல் போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி பிட்ச் தார் ரோடு போல இருந்த நிலையில் இப்போட்டி நடைபெறும் முல்தான் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்த காரணத்தால் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அதே அதிரடியான அணுகு முறையுடன் விளையாடினாலும் 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக பென் டன்கட் 63 ரன்களும் ஓலி போப் 60 ரன்களும் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் களமிறங்கிய அப்ரார் அகமது சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி 7 விக்கெட்டுகளையும் ஜாகிட் முகமது 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம், ஷாகீல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 102/2 என்ற நிலையில் இருந்த அந்த அணி வெற்றி இங்கிலாந்தை விட வலுவான நிலையில் இருந்தது.

- Advertisement -

சரிப்பட்டு வரமாட்டீங்க:
அந்த நிலைமையில் துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த பாபர் அசாம் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 75 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் நங்கூரமாக நின்ற ஷாகீல் முடிந்தளவுக்கு போராடி 63 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதை பயன்படுத்திய இங்கிலாந்து அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 10, சல்மான் 1, நவாஸ் 22 என முக்கிய வீரர்களை சீரான இடைவெளிகளில் அவுட்டாக்கி மிரட்டியது. அதனால் ஒரு கட்டத்தில் 142/2 என்ற நல்ல நிலையில் இருந்தால் பாகிஸ்தான் அடுத்த 8 விக்கெட்டுகளை வெறும் 60 ரன்களுக்குள் இழந்து 202 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அளவுக்கு நீங்கள் மட்டும் தான் சுழலில் அசத்துவீர்களா நாங்களும் அசத்துவோம் என்ற வகையில் பந்து வீச்சில் கலக்கிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சுழல் பந்து வீச்சாளார் ஜாக் லீச் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 79 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 3, வில் ஜேக்ஸ் 4, ஜோ ரூட் 21, ஓலி போப் 4 என முக்கிய வீரர்கள் அதே அப்ரார் அகமதின் மாயாஜால சுழலில் சிக்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

ஆனாலும் அதிரடியாக செயல்பட்ட தொடக்க வீரர் பென் டன்கட் 79 ரன்களும் ஹரி ப்ரூக் 74* (108) ரன்களும் எடுத்ததால் அசத்தலாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 202/5 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலைமையில் பாகிஸ்தானை விட 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள அந்த அணி இப்போட்டியிலும் வெல்வதற்கு அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சுழலுக்கு சாதகமாக இருக்கும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸிலேயே சொதப்பிய பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸிலும் நிச்சயம் திண்டாடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மறுபுறம் தார் ரோடு போன்ற பிட்ச்சில் அதிரடியாக செயல்பட்ட இங்கிலாந்து சுழலுக்கு சாதகமான முல்தான் மைதானத்துக்கு ஏற்றார் போல் தங்களை உட்படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனால் தங்களுக்கு மிகவும் பிடித்த சுழலுக்கு சாதகமான மைதானத்திலும் கூட இப்படி சொந்த மண்ணில் மீண்டும் பாகிஸ்தான் திணறுவதை பார்க்கும் ரசிகர்கள் நீங்கள் எந்த வகையான பிட்ச் அமைந்தாலும் ஒரே மாதிரியாக சொதப்பலான ஆட்டத்தை தான் வெளிப்படுத்துகிறீர்கள் என்று கலாய்த்து வருகிறார்கள்.

அதனால் எஞ்சிய நாட்களிலாவது சிறப்பாக செயல்பட்டு இப்போட்டியில் சந்திக்க காத்திருக்கும் தோல்வியிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யுமாறு கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை விமர்சிக்கிறார்கள்.

Advertisement