இலங்கை அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று மொகாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அதன்பின் மார்ச் 12-ஆம் தேதியன்று பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடந்த 2வது போட்டியிலும் அதிரடியாக விளையாடிய இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று 2 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது. மறுபுறம் முதலில் நடந்த டி20 தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாத இலங்கை டெஸ்ட் தொடரிலும் தோல்வி அடைந்ததால் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.
100 க்கு 100 ரோஹித் சர்மா:
முன்னதாக இந்த இலங்கை தொடரில் இருந்து 3 வகையான கிரிக்கெட்டுக்கும் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையில் தனது புதிய பயணத்தை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த நவம்பர் மாதம் முழுநேர டி20 கேப்டனாக பொறுப்பேற்ற அவரிடம் கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டன் பதவியும் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த ஜனவரி மாதம் திடீரென பதவி விலகியதை அடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் கடந்த நவம்பர் முதல் இப்போது வரை நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக மொத்தம் 5 தொடரில் நடந்த 14 போட்டிகளில் அவர் இந்தியாவை வழி நடத்தியுள்ளார். அந்த 14 போட்டிகளிலும் வெற்றிகளை பதிவு செய்த அவர் அடுத்தடுத்து 5 ஒயிட்வாஷ் கோப்பைகளை பெற்றுக்கொடுத்து 100% சதவீத வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
பாராட்டிய முஹம்மது கைப்:
இப்படி அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த ரோகித் சர்மாவை பற்றி முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் தனது டுவிட்டரில் பாராட்டி இருந்தார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ராகுல், ரோஹித், விஹாரி, விராட், ஷ்ரேயஸ், பண்ட், ஜடேஜா, அஷ்வின், பும்ரா, ஷமி மற்றும் 11-வது இடத்தில் விளையாட ஏகப்பட்ட வீரர்கள் உள்ளனர். திடீரென்று இவை அனைத்தும் மிக சிறப்பாக தோன்றுகிறது. ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் கூட்டணியில் உலகின் எந்த ஒரு அணியையும் தோற்கடிக்கும் அணியாக இந்தியா உள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த பல ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள் என்றே கூறலாம். ஏனெனில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி தலைமைப் பொறுப்பில் இன்னும் முழுதாக 6 மாதங்கள் கூட கடக்கவில்லை. ஆனால் அதற்குள் திடீரென அவர்கள் தான் உலகத்தரம் வாய்ந்த இந்திய டெஸ்ட் அணியை உருவாக்கியது போல முகமது கைப் பாராட்டியது பல ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.
வறுக்கும் ரசிகர்கள்:
ஏனெனில் கடந்த 2014-ஆம் ஆண்டு விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்றபோது ஐசிசி தரவரிசையில் இந்தியா 7-வது இடத்தில் திண்டாடி கொண்டிருந்தது. அப்போது அதிரடி மாற்றங்களை செய்த விராட் கோலி தனது அபாரமான ஆக்ரோசம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்கள் உலகின் நம்பர்-1 அணியாக இந்தியாவை ராஜநடை போட வைத்தார். அதுமட்டுமல்லாமல் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்திய அணி சுழல் பந்துவீச்சாளர்களை மட்டும் நம்பிக்கொண்டு சொந்த மண்ணில் வெற்றி பெறும் அணியாக இருந்தது.
ஆனால் வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டுமெனில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் எடுக்க வேகப்பந்து வீச்சு துறையால் மட்டுமே முடியும் என உணர்ந்த விராட் கோலி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மற்ற இந்திய கேப்டன்களை காட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவு கொடுத்து வளர்த்தார். அதன் பயனாக கடந்த 2018-க்கு பின் உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறும் அணியாக உருவெடுத்த இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றி பெறத் தொடங்கியது. குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற சவால் மிகுந்த நாடுகளில் விராட் கோலி தலைமையில் பல சரித்திர வெற்றிகளை இந்தியா பதிவு செய்தது.
தூங்கிட்டீங்களா:
அதிலும் கடந்த 2019இல் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா 70 வருடங்களில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற மாபெரும் சரித்திரம் படைத்த விராட் கோலி மொத்தம் 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
முஹம்மது கைப் கூறும் பெரும்பாலான வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரின் தலைமையில் தான் அதிக வாய்ப்பளித்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக வளர்க்கப் பட்டவர்கள். அப்படி இருக்க திடீரென எப்படி ரோகித் – டிராவிட் கூட்டணியால் உலகத்தரம் வாய்ந்த இந்திய அணியை ஒரே நாள் இரவில் உருவாக்க முடிந்தது என முஹம்மது கைஃபை ரசிகர்கள் எதிர் கேள்வி கேட்கிறார்கள். மேலும் 2014 – 2021 வரையிலான காலகட்டங்களில் நீங்கள் தூங்கி விட்டீர்களா என ரசிகர்கள் சரமாரி கேள்வியை அவரிடம் கேட்டு வருகிறார்கள்.



