அது வேற வாய், விராட் கோலி விஷயத்தில் ஒரே வாரத்தில் பல்டி அடித்த கௌதம் கம்பீர் – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

Gambhir
- Advertisement -

வரலாற்றில் 15வது முறையாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக திகழ்வதால் எளிதாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த இந்தியா அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. அதனால் ரசிகர்கள் சோகமடைந்த நிலையில் நாடு திரும்புவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 8ஆம் தேதியான நேற்று களமிறங்கிய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 212/2 ரன்கள் சேர்த்தது.

அதில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என ஓயாமல் தினந்தோறும் விமர்சனங்களை சந்தித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆப்கானிஸ்தான் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தையும் சுமார் 3 வருடங்களாக அடம்பிடித்து வந்த 71வது சதத்தையும் விளாசினார். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற ரிக்கி பாண்டிங்கின் உலக சாதனையை சமன் செய்த அவர் 12 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 122* (61) ரன்களை விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

- Advertisement -

பார்முக்கு திரும்பிய கிங்:
அதை தொடர்ந்து 213 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 111/8 ரன்களை மட்டுமே எடுத்ததால் 101 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியா ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்த தொடரில் இந்தியா கோப்பையை இழந்தாலும் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியுள்ளது உண்மையாகவே அனைத்து இந்திய ரசிகர்களையும் முன்னாள் இன்னாள் வீரர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் அந்தளவுக்கு கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் கிட்டத்தட்ட 50 என்ற பேட்டிங் சராசரியில் எதிரணிகளை வெளுத்து வாங்கிய அவர் ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். மேலும் 33 வயதிலேயே 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஜாம்பவானுக்கு நிகராக சாதனைகளை படைத்த அவர் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல பணிச்சுமையால் 2019க்குப்பின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தார்.

- Advertisement -

வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களும் இதுபோன்ற நிலைமையை சந்தித்துள்ளார்கள் என்பதை தெரிந்தும் ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நன்றியை மறந்த நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் அவரை அணியிலிருந்து நீக்குமாறு கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அவரது அருமையை புரிந்து ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா போன்ற ஏராளமான வெளிநாட்டு ஜாம்பவான்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுத்தனர்.

கம்பீரின் உல்ட்டா கருத்து:
அப்படி ஒரு இந்தியருக்கு ஆதரவு கொடுக்காத இந்திய முன்னாள் வீரர்களில் கௌதம் கம்பீர் முக்கியமானவராவார். பொதுவாகவே விராட் கோலியை கண்டால் பிடிக்காது என்று ரசிகர்கள் வெளிப்படையாக பேசும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும் விமர்சிக்கக்கூடிய அவர் இந்த சோதனை காலகட்டத்தில் சொல்லவா வேண்டும் என்பதுபோல் கடந்த 3 வருடங்களில் ஏராளமான விமர்சனங்கள் அம்பாக எய்தார்.

அதிலும் இந்த ஆசிய கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி ஹாங்காங்க்கு எதிராக 59* (44) ரன்களை குவித்து போது கத்துக்குட்டிக்கு எதிராக தரமற்ற பவுலிங்கில் அடித்த 60 ரன்களை வைத்து பார்முக்கு திரும்பி விட்டார் என்று கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என விமர்சித்தது உச்ச கட்டமாகும். அதைவிட அதே போட்டியில் ஹாங்காங் பவுலர்களை பிரித்து மேய்ந்து 6 பவுண்டரி 6 சிக்சருடன் 68* (26) ரன்களை விளாசிய சூரியகுமார் யாதவை பாராட்டிய அவர் இனிமேல் 3வது இடத்தில் விராட் கோலிக்கு பதில் சூரியகுமார் யாதவ் விளையாட வேண்டும் என்று அப்பட்டமாக விமர்சித்தார்.

ஆனால் 3வது இடத்தில் விளையாடுவதற்காகவே பிறந்ததை போல் ஏராளமான ரன்களை குவித்த விராட் கோலிக்கு பதில் நேற்று வந்த சூரியகுமாரை களமிறங்க வேண்டுமென்று அவர் சொன்னது நிறைய ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அந்த நிலைமையில் நேற்றைய போட்டியில் சதமடித்ததும் அப்படியே யூ டர்ன் போட்ட கவுதம் கம்பீர் விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி தான் 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்று ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் பேசினார். அதைக் கேட்ட ரசிகர்கள் ஒரே வாரத்தில் வடிவேலுவை போல் “அது நாற வாய், இது நல்ல வாய்” என்பதை போல் இப்படி மாற்றி பேசுகிறாரே என்று அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்து தள்ளுகிறார்கள்.

Advertisement