ஆசிய கோப்பையில் ஜிம்பாப்வே இல்ல – கைமாறிய பார்ம், கேரியரில் முதல் முறையாக சரிவை சந்தித்த பாபர் அசாமை கலாய்க்கும் ரசிகர்கள்

Virat Kohli Babar Azam
- Advertisement -

2022 ஆசிய கோப்பையில் நடப்புச் சாம்பியன் இந்தியாவிடம் லீக் சுற்றில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அந்த மொத்த வெறியையும் கத்துக்குட்டியான ஹாங்காங் அணிக்கு எதிராக காட்டி 155 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் மீண்டும் பரம எதிரியான இந்தியாவை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற அந்த அணி பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கடைசி நேரங்களில் கச்சிதமாக செயல்பட்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று தக்க பதிலடி கொடுத்தது. இதையடுத்து அடுத்த 2 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட இறுதிப் போட்டிக்குச் சென்று விடலாம் என்ற நல்ல நிலைமைக்கு அந்த அணி வந்துள்ளது.

இந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹீன் அப்ரிடி காயத்தால் விலகினாலும் எஞ்சிய வீரர்களை வைத்து அசத்தும் பாகிஸ்தான் நிறைய பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் பேட்டிங் துறையில் அந்த அணியின் முதுகெலும்பாக கருதப்படும் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் சுமாராக செயல்படுவது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் ஆசிய கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அவர் சிறப்பாக செயல்படுவது கட்டாயமாக பார்க்கப்படும் நிலையில் இதுவரை 10, 9, 14 என 3 போட்டிகளில் வெறும் 33 ரன்களை மட்டுமே எடுத்த அவர் சுமாராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

கைமாறிய பார்ம்:
அவர் ஏற்படுத்தும் இந்த பின்னடைவை மற்றொரு தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் முடிந்தளவுக்கு போராடி ஈடுகட்டி வருகிறார். இத்தனைக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்மை இழந்து தவிக்கும் 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் அவரையும் மிஞ்சும் வகையில் செயல்பட்டு வரும் பாபர் அசாம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரையே பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். இதனால் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சமீப காலங்களில் பேசுவதும் வழக்கமாகியுள்ளது.

அந்த நிலைமையில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள விராட் கோலிக்கு “இதுவும் கடந்து போகும் வலிமையுடன் இருங்கள்” என்று கடந்த மாதம் பாபர் அசாம் ட்வீட் போட்டு ஆதரவு கொடுத்தது ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதைத்தொடர்ந்து இந்த ஆசிய கோப்பை துவங்கும்போது துபாயில் வலைப்பயிற்சி மேற்கொண்ட இருநாட்டு வீரர்களும் நீண்ட காலம் கழித்த சந்தித்து கொண்டதால் பரம எதிரி என்பதையும் தாண்டி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தனர். அப்போது தமக்கு நன்றி தெரிவித்த பாபர் அசாமுக்கு விராட் கோலி நேரடியாக கைகொடுத்து நன்றி தெரிவித்த தருணத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

ஆனால் தற்போது விமர்சனத்தை நொறுக்கும் அளவுக்கு இந்த ஆசிய கோப்பையில் 35, 59*, 60 என பெரிய ரன்களை அடித்துள்ள விராட் கோலி பார்முக்கு திரும்பியதைப்போல் அற்புதமாக செயல்பட துவங்கியுள்ளார். மறுபுறம் அட்டகாசமான பார்மில் இருந்த பாபர் அசாம் இந்த ஆசிய கோப்பையில் இதுவரை 33 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்படத் துவங்கியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் விராட் கோலியின் மோசமான பார்ம் தற்போது பாபர் அசாமுக்கு கை மாறியுள்ளதாக சமூக வலைதளங்களில் கலகலப்புடன் தெரிவிக்கிறார்கள்.

ஜிம்பாப்வே இல்ல:
அதிலும் இந்தியாவுக்கு எதிராக தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானது பரவாயில்லை ஆனால் கத்துக்குட்டியான ஹாங்காங்க்கு எதிராக வெறும் 9 ரன்களில் அவர் அவுட்டானது தான் நிறைய ரசிகர்களை கலாய்க்க வைக்கிறது. அத்துடன் ஏற்கனவே ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக நிறைய ரன்களை எடுத்து சாதனைகளையும் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்ததாக அவரை கடந்த சில வருடங்களாகவே நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்ப்பது வழக்கமாகும்.

அந்த நிலைமையில் இந்த ஆசிய கோப்பையில் அவர் சுமாராக செயல்படுவதை பார்க்கும் ரசிகர்கள் இவர் எப்போதும் ஜிம்பாப்வேக்கு எதிராக மட்டுமே சிறப்பாக செயல்படுவார் என்றும் இந்த தொடரில் அந்த அணி பங்கேற்காததால் தடுமாறுகிறார் என்றும் கலாய்க்கின்றனர்.

அதற்கேற்றார்போல் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் இதுவரை 77 போட்டிகளில் விளையாடி 2719* ரன்களை எடுத்துள்ள நிலையில் கேரியரில் முதல் முறையாக இப்போதுதான் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 15 ரன்களை கூட தாண்டாத சரிவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement