சீக்கிரம் ஆசிய கோப்பையில் ஜிம்பாப்வேயை சேருங்க – நட்சத்திர வீரர்கள் மற்றும் பாகிஸ்தானை கலாய்க்கும் ரசிகர்கள்

Pak Shadab Khan
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2022 ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டத்தை யாருமே எதிர்பாராத வகையில் அற்புதமாக செயல்பட்ட இலங்கை இளம் வீரர்களை வைத்து கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய பாகிஸ்தானை செப்டம்பர் 11ஆம் தேதியான நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் போராடி 170/6 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 58/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு 5வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹசரங்கா அதிரடியாக 36 (21) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அவருடன் ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ராஜபக்சா 6 பவுண்டரி 3 சிக்சருடன் 71* (45) ரன்கள் விளாசினார். அதை தொடர்ந்து 171 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 5, பக்கார் ஜமான் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். அதனால் 22/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய இப்திகர் அஹமத் 32 (31) ரன்களிலும் அவருடன் போராடிய முஹம்மது ரிஸ்வான் 55 (49) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

சொதப்பிய பாக்:
அவர்களை தவிர எஞ்சிய வீரர்கள் அனைவரும் இலங்கையின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. ஆனால் சமீப காலங்களில் பலவீனமான அணியாக மாறி தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் இலங்கை இத்தொடரில் கோப்பையை வெல்லாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் முக்கிய போட்டிகளில் அற்புதமாக செயல்பட்ட அந்த அணி இளம் வீரர்களுடன் 6ஆவது ஆசிய கோப்பையை வென்று பாராட்டுகளை அள்ளுகிறது.

இது துவண்டு கிடக்கும் அந்நாட்டு கிரிக்கெட்டில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்பலாம். மறுபுறம் துபாயில் டாஸ் வென்றால் 99% வெற்றி உறுதி என்ற நிலைமையில் முதலில் பந்து வீசிய பாகிஸ்தான் இலங்கையை 58/5 என மடக்கிப் பிடித்தும் கடைசி 10 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பி தோற்றுள்ளது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

- Advertisement -

வாய்பேசிய பாக்:
முன்னதாக இந்த தொடரில் சாகின் அப்ரிடி வெளியேறியதால் இந்தியா தப்பித்து விட்டதாக ஆரம்பத்திலேயே வாய்ச் சவடால் விட்ட பாகிஸ்தான் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்றாலும் சூப்பர் 4 சுற்றில் பதிலடி கொடுத்தது. அப்போது ஐபிஎல் தொடரால் வளர்க்கப்பட்ட வீரர்கள் நிறைந்த இந்திய அணியை விட பிஎஸ்எல் தொடரால் வளர்க்கப்பட்ட வீரர்களைக் கொண்ட பாகிஸ்தானே சிறந்த அணி என்று அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏளனமாக பேசினர். ஆனால் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியாவை விட 8வது இடத்தில் உள்ள இலங்கையிடம் சூப்பர் 4 சுற்றிலும் பைனலிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் பதிலுக்கு கலாய்த்து வருகிறார்கள்.

அத்துடன் இந்த தொடரின் துவக்கத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த கேப்டன் பாபர் அசாம் 10, 9, 14, 0, 30, 5 என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதனாலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தையும் இழந்த அவர் வாழ்த்து தெரிவித்ததால் கைகொடுத்து நன்றியை தெரிவித்த விராட் கோலியிடம் பார்மை இழந்து விட்டதாகவும் ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

சரி அவர்தான் அப்படி என்று பார்த்தால் அவரை முந்தி புதிய நம்பர் 1 பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள முஹம்மது ரிஸ்வான் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு 55 ரன்களை எடுத்தாரே தவிர அதை 49 பந்துகளில் மெதுவாக எடுத்து வெற்றி பெறும் அளவுக்கு செயல்படவில்லை. மொத்தமாக 281 ரன்கள் குவித்து 2022 ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் சாதனை படைத்த அவர் தனது பெயருக்கு சாதனை படைத்தாலும் தன்னுடைய நாட்டிற்கு கோப்பையை வாங்கிக் கொடுக்கவில்லை என்றும் ரசிகர்கள் சாடுகிறார்கள்.

ஜிம்பாப்வே சேருங்க:
மேலும் பொதுவாகவே சமீப காலங்களில் ஜிம்பாப்வே போன்ற அணிகளுக்கு எதிராக பாகிஸ்தானும் பாபர் அசாம் போன்ற வீரர்களும் தங்களது முரட்டுத்தனத்தை காட்டி ரன்களையும் வெற்றிகளையும் குவித்து நம்பர் ஒன் இடத்தை அடைந்ததாக பேச்சுக்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த தொடரில் ஜிம்பாப்வே இல்லாததால் பாகிஸ்தான் மற்றும் பாபர் அசாமின் ஆட்டம் செல்லுபடியாகவில்லை என்று கூறும் ரசிகர்கள் விரைவில் அந்நாட்டை ஆசிய கோப்பையில் சேர்க்குமாறும் கலாய்க்கிறார்கள்.

Advertisement