ஹாங்காங் அணிக்கு எதிராக ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று நடைபெற்ற தனது 2வது ஆசிய கோப்பை லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 192/2 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (16) ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடி 36 (39) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் அதிரடியாக 68* (26) ரன்களும் அவருடன் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (44) ரன்களும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 193 ரன்களை துரத்திய ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்கள் முர்த்தசா 9, கேப்டன் நிஜாகத் கான் 10 என சொற்ப ரன்களில் அவுட்டாக மிடில் ஆர்டரில் பாபர் ஹயட் 41 (35) ரன்களும் கிஞ்சிட் ஷா 30 (28) ரன்களும் எடுத்து போராடி அவுட்டானார்கள். இறுதியில் ஜீசன் அலி 26* (17) ரன்களும் மெக்கன்சி 16* (8) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 152/5 ரன்கள் மட்டுமே எடுத்த ஹாங்காங் போராடி தோல்வியடைந்தது.
ரன் மெஷின்:
அதனால் சிறப்பான வெற்றியை பதிவு செய்த இந்தியா ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்திருந்ததால் குரூப் ஏ பிரிவில் பங்கேற்ற 2 லீக் போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 68* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இப்போட்டியில் இந்தியா வென்றாலும் பரம எதிரியான பலமான பாகிஸ்தானை சுருட்டி வீசிய இந்திய பவுலர்கள் கத்துக்குட்டியாக கருதப்படும் ஹாங்காங்கை ஆல் அவுட் செய்யாமல் சுமாராக பந்து வீசியது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
குறிப்பாக புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா, சஹால் ஆகிய 3 சீனியர் பவுலர்களை தவிர அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் ஹாங்காங் போன்ற கத்துக்குட்டி அணிக்கு எதிராக 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. இதில் பொதுவாகவே துல்லியமாக பந்துவீசக்கூடிய அர்ஷிதீப் சிங் நேற்று முதல் முறையாக 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தாலும் 44 கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது என்றாலும் பாடத்தை கற்கும் வகையில் பந்துவீசினார்.
ஆனால் அவரையும் மிஞ்சும் வகையில் 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தாலும் அரைசதம் அடித்து 53 ரன்களை 13.5 என்ற மோசமான எக்கனாமியில் பந்துவீசிய ஆவேஷ் கானை ரசிகர்கள் சரமாரியாக கலாய்க்கிறார்கள். ஏனெனில் அர்ஷிதீப் சிங் கூட நேற்று தான் அரிதாக ரன்களை வழங்கிய போதிலும் 50 ரன்களை தாண்டவில்லை. ஆனால் இவர் அறிமுகமானது முதல் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் ரன்களை வாரி வழங்கும் வள்ளல் பவுலராக செயல்பட்டு வருகிறார்.
கடந்த பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி சுமாராக செயல்பட்ட இவர் ஐபிஎல் 2022 தொடரில் ஓரளவு அசத்தியதால் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் வாய்ப்பை பெற்று 1 போட்டியை தவிர எஞ்சிய போட்டிகளில் ரன்களை வாரி வழங்கினார். அந்த நிலைமையில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் சுமாராக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக 2வது போட்டியில் அறிமுகமாக வாய்ப்பை பெற்ற இவர் ரன்களை வாரி வழங்கியதால் அதற்கு அவரே பரவாயில்லை என்ற வகையில் 3வது போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதன்பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலும் சுமாராக செயல்பட்ட இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முழுமையான 4 ஓவர்களை வழங்க முடியாத அளவுக்கு வெறும் 2 ஓவரில் இதர பவுலர்களை காட்டிலும் அதிகபட்சமாக 9.50 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசினார். இருப்பினும் நம்பிக்கை வைத்து ரோகித் சர்மா வாய்ப்பளித்து வரும் நிலையில் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 9.10 என்ற மோசமான எக்கனாமியில் பந்து வீசி வரும் இவர் 2022 காலண்டர் வருடத்தில் அதிக எக்கனாமியில் பந்து வீசிய இந்திய பவுலராக (குறைந்தது 25 ஓவர்கள்) மோசமான சாதனை படைத்துள்ளார்.
அதனால் கடுப்பாகும் ரசிகர்கள் ரன்களை வாரி வழங்கியதில் ஜாம்பவனாக கருதப்படும் முன்னாள் இந்திய பவுலர் அசோக் திண்டாவின் அடுத்த வாரிசு என்று இவரை சரமாரியாக கலாய்க்கிறார்கள். அத்துடன் அடுத்த போட்டியில் இவரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலுவான கோரிக்கைகள் எழுந்துள்ளது.



