எனக்குன்னே வருவியாடா ! தனி ஒருவனாக பஞ்சாப்பை கதறவிடும் இந்திய வீரர் – கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற 16-ஆவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் 5 (9) ரன்களில் ஏமாற்ற அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 8 (8) ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த லியம் லிவிங்ஸ்டன் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக பஞ்சாப்பை மீட்டெடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட 35 ரன்கள் எடுத்திருந்தபோது தவான் ஆட்டமிழக்க அடுத்து வந்த இளம் வீரர் ஜிதேஷ் சர்மா 11 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 23 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

மிரட்டிய லிவிங்ஸ்டன், அடக்கிய ரசித் கான்:
அந்த நிலையில் அடுத்து வந்த ஓடின் ஸ்மித் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தாலும் மறுபுறம் குஜராத் பவுலர்களை புரட்டி எடுத்து கொண்டிருந்த லியம் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்சர்கள் உட்பட 64 ரன்களை அடித்து மிரட்டிக் கொண்டிருந்த போது நட்சத்திர வீரர் ரஷித் கான் அவரை அவுட் செய்தார். அதை பயன்படுத்திய குஜராத் அடுத்து வந்த இளம் அதிரடி தமிழக வீரர் ஷாருக்கானை 15 (8) ரன்களில் காலி செய்து போட்டியை தனது பக்கம் திருப்பியது.

அதன் காரணமாக 200 ரன்களை தொடவேண்டிய பஞ்சாப் கடைசி நேரத்தில் 14 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 22* ரன்கள் எடுத்த ராகுல் சஹர் போராட்ட பினிஷிங் செய்ததால் 20 ஓவர்களில் 189/9 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ரசித் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 190 என்ற இலக்கை துரத்திய குஜராத் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

கலக்கிய கில், மாஸ் காட்டிய திவாடியா:
அப்போது களமிறங்கிய இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து அசத்தினார். அதிரடியாக பேட்டிங் செய்து குஜராத்தை மீட்டெடுத்த இந்த ஜோடியில் 30 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 35 ரன்கள் எடுத்து சுதர்சன் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து பஞ்சாபுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த சுப்மன் கில் 59 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 1 சிக்சர் உட்பட 96 ரன்கள் எடுத்து முக்கியமான 19-வது ஓவரில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

அதனால் போட்டியில் திடீரென பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி 6 பந்துகளில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டபோது 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா பினிஷிங் செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் பந்திலேயே ரன் அவுட்டான அவர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். அந்த நிலையில் களமிறங்கிய இளம் இந்திய வீரர் ராகுல் திவாடியா 2-வது பந்தில் சிங்கிள் எடுக்க அதற்கு அடுத்த பந்தில் தென்ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் பவுண்டரி அடித்து சிங்கிள் எடுத்தார்.

- Advertisement -

கதறவிடும் திவாடியா:
அதன் காரணமாக கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டதால் போட்டியில் உச்சகட்ட பரபரப்பு நிகழ்ந்தது. அப்போது அந்த ஓவரை வீசிக்கொண்டிருந்த ஓடின் ஸ்மித் வீசிய 5-வது பந்தில் அதிரடி சிக்சரை பறக்க விட்ட திவாடியா கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது மெகா சிக்சரை பறக்க விட்டு தனி ஒருவனாக பஞ்சாப்பை தோற்கடித்து குஜராத்தை வெற்றிபெற வைத்தார். இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஹாட்ரிக் வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

இந்த அற்புதமான வெற்றிக்கு 96 ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றாலும் கடைசி 2 பந்துகளில் சிக்சர்களை பறக்கவிட்ட திவாடியாவை பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடி வருகின்றனர். அதுவும் பஞ்சாப்பை பார்த்தாலே பரவசமடைந்து அந்த அணியை பந்தாடுகிறார் என்று அனைவரும் அவரை பாராட்டியும் பஞ்சாப் அணியை கலாய்த்தும் வருகிறார்கள். ஏனெனில் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் இதேபோல ஒரு போட்டியில் பஞ்சாப் நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் தோல்வியின் பிடியில் சிக்கியது.

அப்போது அதிரடி சரவெடியாக விளையாடிய அவர் அந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் செல்டன் காற்றெள் வீசிய 18-வது ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு போட்டியை தலைகீழாக மாற்றி 53 (31) ரன்களை விளாசி தனி ஒருவனாக ராஜஸ்தானுக்கு வெற்றியை தேடி தந்தார். அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து ராஜஸ்தான் சரித்திர சாதனை படைத்தது. தற்போது அதே போலவே அதே பஞ்சாப் அணிக்கு எதிராக மீண்டும் விஸ்வரூபம் எடுத்த அவர் கடைசி 2 பந்தில் 2 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

இதை பார்க்கும்போது வடிவேலு கூறுவது போல “எனக்குன்னே வருவியடா” என்பதுபோல் அவரைப் பார்த்து பஞ்சாப் பரிதாபமாய் கேட்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பஞ்சாப்பை விதவிதமாக கலாய்க்கின்றனர். இந்த அதிர்ச்சி தோல்வியால் பஞ்சாப் தற்போது புள்ளிபட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

Advertisement