ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. 2 – 1* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் அந்தக் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் சுமாராக விளையாடி வந்த கேப்டன் ரோஹித் சர்மா தாமாக ஓய்வு எடுத்துக் கொண்டார்.
அவருக்கு பதிலாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக தலைமை தாங்கினார். அந்த சூழ்நிலையில் துவங்கிய போட்டியில் கேஎல் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி சென்றார். மறுபுறம் நங்கூரமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
கோலியின் பழைய பஞ்சாங்கம்:
அதற்கடுத்ததாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்கள். அதில் சுமாரான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி முதல் பந்திலேயே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனை மீண்டும் தொட்டு எட்ஜ் வழங்கினார். அது நேராக ஸ்டீவ் ஸ்மித் கைகளுக்கு சென்றது. இருப்பினும் அதை தரையோடு தரையாக பிடித்த ஸ்மித் கைகளை விட்டு வெளியேறிய பந்து தரையில் உரசி பின்னர் மார்னஸ் லபுஸ்ஷேன் கைகளில் தஞ்சமடைந்தது.
ஆனால் அதை சோதித்த போது ஸ்மித் கைக்கு வெளியே பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்ததால் நடுவர் நாட் அவுட் வழங்கினார். அதனால் கோல்டன் டக் அவுட்டாவதிலிருந்து அதிர்ஷ்டமாக தப்பிய விராட் கோலி நங்கூரமாக விளையாட துவங்கினர். மறுபுறம் அவருடன் ஜோடி சேர்ந்த விளையாடிய கில் 20 ரன்களில் உணவு இடைவெளிக்கு முன் அவுட்டானார்.
ரோஹித் போல:
உணவு இடைவெளி முடிந்ததும் ஸ்காட் போலண்ட் வீசிய அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தை மீண்டும் அடிக்க முயற்சித்த விராத் கோலி 17 (69) ரன்களில் எட்ஜ் கொடுத்து அவுட்டாகி ரசிகர்களை கடுப்பேற்றினார். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே அதே மாதிரி அவுட்டாகி வந்த அவர் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். இத்தனைக்கும் இதே சிட்னி மைதானத்தில் 2004ஆம் ஆண்டு கவர் ட்ரைவ் அடிக்காமல் 241* ரன்கள் குவித்த சச்சினை பின்பற்றுமாறு விராட் கோலிக்கு சில முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இதாங்க ஒற்றுமையான இந்திய அணி.. ரோஹித் சர்மா நீக்கப்பட்டது ஏன்? கேப்டன் பும்ரா பேட்டி
அதையெல்லாம் கேட்காத விராட் கோலி மீண்டும் அப்படியே அவுட்டாகி உள்ளார். அதனால் ஏமாற்றமடையும் ரசிகர்கள் நீங்கள் வேறு விதமாக அவுட்டானால் கூட பரவாயில்லை. மீண்டும் மீண்டும் இப்படியே அவுட்டானால் எப்படி? என்று விராட் கோலி மீது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அதே காரணத்தால் ரோஹித் போல விராட் கோலியையும் அனுப்ப வேண்டிய நேரம் வந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.



