IND vs ZIM : சான்ஸ் கொடுக்கலைனா எதுக்கு செலக்ட் பண்ணீங்க – மீண்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட 2 வீரர்கள், ரசிகர்கள் அதிருப்தி

India Dhawan
- Advertisement -

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிராக பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளின் முடிவில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கேஎல் ராகுல் முதல் 2 போட்டிகளில் பந்துவீச தீர்மானித்து வாங்கிக் கட்டிக் கொண்ட விமர்சனத்தால் ஒருவழியாக பேட்டிங் செய்வதாக அறிவித்தார். மேலும் இந்திய அணியில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு பதில் ஆவேஷ் கான் மற்றும் முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்று காயத்தால் விலகிய தீபக் சஹர் மீண்டும் சேர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிப்பாதி சேர்க்கப்படாதது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. ஏனெனில் சமீப வருடங்களில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக நல்ல ரன்களை எடுத்த போதிலும் தொடர்ந்து புறக்கணித்து வந்த தேர்வுக்குழுவை ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருந்தனர். குறிப்பாக ஐபிஎல் 2022 தொடரில் 400+ ரன்களை எடுத்த போதிலும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் தேர்வு செய்யப்படாததால் கோபமடைந்த ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து அவர் 30 வயதைத் தொட்டுவிட்டதால் இப்போது வாய்ப்பு கொடுக்கவில்லையெனில் எப்போதுதான் வாய்ப்பு கொடுப்பீர்கள் என்று கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

மீண்டும் பெஞ்சில்:
அதனால் கேள்விகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாத தேர்வுக்குழு ஒரு வழியாக ஜூன் மாத இறுதியில் அயர்லாந்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முதல் முறையாக அவரை தேர்வு செய்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் தலைமை தாங்கிய அந்த தொடரில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் விளையாடும் வாய்ப்பை பெறாமல் பெஞ்சில் அமர்ந்திருந்த அவருக்கு அடுத்ததாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அந்த வாய்ப்பையும் தேர்வுக்குழு வழங்கவில்லை.

அந்த நிலைமையில் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் தொடராக கருதப்படும் இந்த ஜிம்பாப்வே தொடரில் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு முதலிரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி தொடரை வெல்வதற்காக வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருப்பார்கள் என்பதால் 3வது போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

- Advertisement -

அதுவும் உள்ளூர் அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்காத போதிலும் டி20 கிரிக்கெட்டில் அசத்திய இஷான் கிஷனுக்கு வாய்ப்பளித்துள்ள அணி நிர்வாகம் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் ஓபனிங் முதல் மிடில் ஆர்டர் வரை அனைத்து இடங்களிலும் பேட்டிங் செய்து பழக்கப்பட்ட ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ருதுராஜ்கும் வாய்ப்பில்லை:
ஒருவேளை களமிறங்க வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் தண்ணீர் பாட்டில் தூக்கிக்கொண்டு பெஞ்சில் அமர்வதற்காக 31 வயதில் தேர்வு செய்யப்பட்டாரா என்றும் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் அணி நிர்வாகத்துக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று அதன் பின் நடந்த 2021 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில் 3 சதங்கள் உட்பட 600+ ரன்கள் குவித்த இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட்டுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டு காயத்தால் வெளியேறிய அவர் அதன் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 ஒருநாள் தொடர்களில் பெஞ்சில் அமர்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாட கொடுக்கப்பட்ட வாய்ப்பில் தடுமாறினார் என்பதற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லையா என்று அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதேபோல் வாசிங்டன் சுந்தர் சுந்தருக்கு பதில் சேர்க்கப்பட்ட சபாஸ் அஹமதுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மொத்தத்தில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்பட்ட இந்த ஜிம்பாப்வே தொடரில் எந்த ஒரு வீரருக்கும் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை கேஎல் ராகுல் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோர் கொடுக்காதது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement