ஆசிய கோப்பை 2022 : திறமையான 2 இளம் வீரர்களை செலக்ட் பண்ணாத தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

Rishabh pant Shreyas Iyer Sanju Samson
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரின் 2 கோப்பைகளை வென்று இந்தியா வெற்றியுடன் தாயகம் திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாட உள்ளது. அதன்பின் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கும் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் இந்தியா களமிறங்குகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த வருடம் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த 15-ஆவது ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அந்த தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் சமீபத்தில் காயத்தால் வெளியேறிய கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வெடுத்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். இவர்களுடன் சமீபத்திய வெஸ்ட் இண்ட்டீஸ் தொடரில் அசத்திய சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சஹால் போன்ற சீனியர் வீரர்களும் தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், அரஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

மீண்டும் டாட்டா:
இருப்பினும் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் இந்த தொடரிலிருந்து வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. அதைவிட சமீபத்திய தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஆகிய 2 வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. அதிலும் காலம் காலமாக தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றப்பட்டு வரும் சஞ்சு சாம்சன் மீண்டும் கழற்றி விடப்பட்டு உள்ளது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

கடந்த 2015இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 4 கழித்துதான் கடந்த 2019இல் மீண்டும் தேர்வாகி பெஞ்சில் அமர வைக்கப்பட்டு ஒருவழியாக 2020இல் தன்னுடைய 2வது போட்டியில் விளையாடினார். இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர் கணிசமான ரன்கள் எடுத்தார். அதன் பின் 7 மாதங்கள் கழித்து 2020 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

அதன்பின் மீண்டும் 6 மாதங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக 2021 ஜூலையில் 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர் மீண்டும் 6 மாதங்கள் கழித்து 2022 பிப்ரவரியில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்று கழற்றி விடப்பட்டார். இப்படி 2015 – 2022 வரை 12 போட்டிகளில் மட்டுமே தொடர்ச்சியற்ற வாய்ப்பைப் பெற்ற அவர் ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானின் கேப்டனாக 400க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற போதிலும் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கண்டுகொள்ளப்படவில்லை.

அதனால் இதேபோல கடுமையான விமர்சனங்களை சந்தித்த தேர்வுக்குழு வேறு வழியின்றி அடுத்ததாக நடந்த அயர்லாந்து தொடரில் வாய்ப்பளித்தது. அதில் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத அவர் 2வது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்று தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் வரலாற்று சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து 77 (42) ரன்கள் விளாசி வெற்றிபெற வைத்தார். அதனால் இனிமேல் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு இங்கிலாந்து தொடரில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

- Advertisement -

கிசனுக்கும் வாய்ப்பில்லை:
அதன்பின் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வாய்ப்புப் பெற்ற அவரை மீண்டும் தேர்வுக்குழு கழற்றிவிட்டுள்ளது. அதேபோல் 2022 ஐபிஎல் தொடரில் 15 கோடிக்கு வாங்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் தடுமாறிய இஷான் கிசான் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்து நல்ல பார்முக்கு திரும்பியதுடன் ஐசிசி தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறினார்.

மேலும் இந்த வருடம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பட் பேட்ஸ்மேனாகவும் அவர் முதலிடத்தில் உள்ளார். அத்துடன் வெஸ்ட் இண்ட்டீஸ் தொடரில் ஆல்-ரவுண்டராக அசத்திய அக்சர் பட்டேலுக்கும் இடமில்லை.

இதையும் படிங்க : வரலாற்றில் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக தொடங்கப்பட்டு தோல்வியடைந்த 3 டி20 தொடர்கள்

ஆனாலும் இவர்களுக்கு பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கொடுக்காத தேர்வுக்குழு டி20 கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள் இப்போதெல்லாம் திறமையையும் நல்ல செயல்பாடுகளையும் விட பெயரைப் பார்த்து அணியை தேர்வு செய்யும் அரசியல் வேலைகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement