வரலாற்றில் ஐபிஎல் தொடருக்கு போட்டியாக தொடங்கப்பட்டு தோல்வியடைந்த 3 டி20 தொடர்கள்

IPL vs EPL
- Advertisement -

நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் இதயமாக கருதப்பட்டாலும் அதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் 5 நாட்கள் முடிந்தும் முடிவுகளை கொடுக்காததால் ரசிகர்களை கவர்வதற்காக ஒரு நாளில் முடிவைக் கொடுக்கும் ஒருநாள் போட்டிகள் துவங்கப்பட்டன. ஆரம்ப காலத்தில் 60 ஓவர்களாக தொடங்கப்பட்ட அந்த போட்டி நாளடைவில் 50 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் 90களில் ரசிகர்களின் அபிமானமான கிரிக்கெட்டாக மாறியது. அதன்பின் 21-ஆம் நூற்றாண்டில் அனைத்து துறைகளிலும் உச்சகட்ட மாற்றங்களை கொண்டுவந்த காலத்தின் வளர்ச்சி கிரிக்கெட்டிலும் ஒருநாள் முழுக்க பார்க்க முடியாத ரசிகர்களுக்காக 3 – 4 மணி நேரங்களில் முடிவுகளைக் கொடுக்கும் வகையில் 20 ஓவர் போட்டிகளை அறிமுகப்படுத்தியது.

அதில் நடைபெற்ற போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்ததால் அது வரை நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை விட ரசிகர்களை மனம் கவர்ந்தது. அதை பார்த்து இளம் வீரர்களை உருவாக்குவதற்காக கடந்த 2008இல் 8 அணிகளுடன் பிசிசிஐ உருவாக்கிய ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு நிறைய பரிணாமங்களை கடந்து இன்று சர்வதேச டி20 போட்டிகளையும் மிஞ்சும் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக இமாலய வளர்ச்சி கண்டுள்ளது.

- Advertisement -

போட்டியும் தோல்வியும்:
ஏனெனில் அதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்கள் எதிர்பாராத திரில்லர் முடிவுகளை கொடுப்பதால் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் தரமாக இருப்பதாக ஏபி டிவிலியர்ஸ், சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களே பாராட்டியுள்ளனர். அதனால் இந்தியா – இலங்கை மோதும் சர்வதேச டி20 போட்டிகளை விட ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் ஐபிஎல் தொடர் இப்போது உலகின் நம்பர் ஒன் தொடராக உருவெடுத்துள்ளது. மேலும் இந்த தொடரில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை கல்லா கட்டும் பிசிசிஐ ஐசிசியை விட பணக்கார வாரியமாக மாறியுள்ளது.

அதனால் இந்த வருடம் 10 அணிகளுடன் விரிவடைந்துள்ள ஐபிஎல் தொடரின் 2023 – 2027 வரையிலான ஒளிபரப்பு உரிமை 48,390 கோடிக்கு சமீபத்தில் ஏலம் போனது. அதன் காரணமாக ஈபிஎல், என்பிஏ போன்ற இங்கிலாந்து, அமெரிக்க நாடுகள் நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து தொடர்களை மிஞ்சியுள்ள ஐபிஎல் உலக அளவில் அதிக வருமானத்தை கொட்டிக் கொடுக்கும் 2வது விளையாட்டு தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

இப்படி பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் தொடரை பார்த்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட அனைத்தும் வெளிநாடுகளும் ஆளாளுக்கு தங்களது நாட்டில் டி20 தொடர்களை நடத்தினாலும் ஐபிஎல் உச்சத்தை யாராலும் எட்ட முடியவில்லை. அதுபோக 10 ஓவர், 100 பந்துகள் கொண்ட ஹண்ட்ரட் போன்ற புதிய தொடர்கள் உருவாக்கப்பட்ட போதிலும் ஐபிஎல் தொடரின் தரத்தையும் மவுசுயும் எட்ட முடியவில்லை. அதைவிட ஐபிஎல்க்கு போட்டியாக துவங்கப்பட்ட சில தொடர்கள் தோல்வியடைந்ததையும் அதற்கான காரணத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்:

3. இலங்கை லீக்: ஐபிஎல் வளர்ச்சியை பார்த்து அண்டை நாடான இலங்கை கடந்த 2012இல் 7 அணிகள் கொண்ட இலங்கை பிரீமியர் லீக் டி-20 தொடரை அறிமுகப்படுத்தியது. ஆனால் முதல் வருடத்திலேயே ஸ்பான்சர் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இந்த தொடரின் 2013, 2014 சீசன்களில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடருக்கு இலங்கை சார்பில் ஒரு அணியை அனுப்ப வேண்டும் என்பதற்காக 4 அணிகள் கொண்ட தொடராக நடைபெற்றது.

- Advertisement -

ஆனால் அதுவும் அதற்கடுத்த வருடம் மொத்தமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2020இல் மீண்டும் லங்கா பிரிமியர் லீக் என்ற புதிய பெயரில் டி20 தொடரை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திய இலங்கை வாரியம் 2020, 2021 ஆகிய வருடங்களுக்கு பின் இந்த வருடத்துக்கான சீசனை மீண்டும் அதே பொருளாதார பிரச்சினையால் தள்ளி வைத்துள்ளது.

2. மாசன்சி லீக்: ஐபிஎல் தொடரை பார்த்து கடந்த 2018இல் 6 அணிகளுடன் மசான்சி சூப்பர் லீக் என்ற தொடரை தென்னாப்பிரிக்க வாரியம் உருவாக்கியது. ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் என ஐபிஎல் போலவே உலகின் நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்ற அந்தத் தொடர் 2 வருடங்கள் நடைபெற்ற நிலையில் கரோனாவால் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

அதன்பின் கடந்த வருடம் மீண்டும் அந்தத் தொடரை நடத்த முயற்சித்த தென் ஆப்பிரிக்க வாரியத்துக்கு ஸ்பான்சர் மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்கள் கிடைக்காததால் அந்த தொடரை மொத்தமாக நிறுத்திவிட்டது. தற்போது டி20 சேலஞ்ச் என்ற பெயரில் புதிதாக மீண்டும் ஒரு தொடரை உருவாக்கியுள்ள அந்நாட்டு வாரியம் அதை வரும் 2023 ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் ஐபிஎல் அணிகளை வாங்கியுள்ள சென்னை, மும்பை உள்ளிட்ட நிர்வாகங்கள் பங்கேற்கும் 6 அணிகளையும் மொத்தமாக வளைத்துப் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1. சாம்பியன்ஸ் லீக்: 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டதை போல் உலக அளவில் சில நாடுகளில் டி20 தொடர்கள் துவங்கப்பட்டன. அந்த தொடர்களில் சாம்பியனாகும் அணிகள் தனியாக ஒரு டி20 தொடரில் மோதினால் எப்படி இருக்கும் என்ற வித்யாசமான யோசனையுடன் அதே வருடம் துவங்கப்பட்டது தான் இந்த சாம்பியன்ஸ் லீக் டி20 தொடராகும்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் இணைந்து உருவாக்கிய இந்த தொடரும் ஆரம்ப காலங்களில் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்றது.

ஆனால் உலகின் எஞ்சிய அணிகளை காட்டிலும் இந்த தொடரில் ஐபிஎல் அணிகள் அதிக ஆதிக்கம் செலுத்திய காரணத்தாலும் ஐபிஎல் அணிகள் பங்கேற்கும் போட்டிகளை தவிர இதர நாட்டின் அணிகள் பங்கேற்கும் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்த காரணத்தாலும் ஸ்பான்சர்ஷிப் காரணத்தாலும் கடந்த 2015இல் இந்த தொடர் நிறுத்தப்பட்டது. 2008 – 2014 வரை நடைபெற்ற இந்த தொடரில் மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் அதிகபட்சமாக தலா 2 சாம்பியன் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement