தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோற்றது. ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6ஆம் தேதியன்று லக்னோவில் நடைபெற்றது. மழையால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா போராடி 249/4 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு ஜானெமன் மாலன் 22 (42) குயின்டன் டீ காக் 48 (54) என ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்து ஆட்டமிழக்க கேப்டன் பவுமா 8, மார்க்ரம் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
அதனால் 110/4 என தடுமாறிய தங்களது அணிக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்திய பவுலர்களை பந்தாடிய ஹென்றிச் க்ளாஸென் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 74* (65) ரன்களும் டேவிட் மில்லர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 75* (63) ரன்களும் குவித்து காப்பாற்றினர். இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஷர்துள் தாக்கூர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 250 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு அதிரடியாக விளையாட வேண்டிய கேப்டன் தவான் 4, கில் 3, ருதுராஜ் 19, இஷான் கிசான் 20 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர்.
போராடிய சாம்சன்:
அதனால் 51/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் 8 பவுண்டரிகளுடன் 50 (37) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் நங்கூரமாக நின்ற சஞ்சு சாம்சன் அடுத்ததாக களமிறங்கிய ஷார்துல் தாகூருடன் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடினார். அதனால் இந்தியா வெற்றியை நெருங்கியபோது தாகூர் 33 (31) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடியை அதிகப்படுத்திய சஞ்சு சாம்சன் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (63) ரன்கள் விளாசிய போதிலும் 40 ஓவர்களில் 240/8 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா போராடி தோற்றது.
அதனால் டி20 தொடரின் தோல்விக்கு பதிலடியாக வென்ற தென்ஆப்பிரிக்கா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் இப்போட்டியில் டாப் 4 பேட்ஸ்மேன்கள் இன்னும் 10 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நிச்சயம் இந்தியா வென்றிருக்கும் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும் 51/4 என்ற நிலையில் களமிறங்கி வெற்றிக்கு போராடிய சஞ்சு சாம்சனை நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் மனதார பாராட்டுகின்றனர்.
சுயநலம் இருந்ததா:
இருப்பினும் ஆரம்பம் முதலே அந்த அதிரடியை துவக்கியிருந்தால் இந்தியா எளிதாக வென்றிருக்குமே என்று வரும் விமர்சனங்களுக்கு அவர் மட்டும் நங்கூரமாக விளையாடாமல் போயிருந்தால் இந்தியா கேவலமாக தோற்றிருக்கும் என்று நிறைய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். ஆனால் கடைசி வரை வெற்றிக்காக போராடிய சஞ்சு சாம்சன் லுங்கி நிகிடி வீசிய 38வது ஓவரின் கடைசி பந்தில் வேண்டுமென்றே சிங்கிள் எடுக்கவில்லலை என்று சில ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
காரணம் 39வது ஓவரை வீச காத்திருந்த தரமான காகிஸோ ராபடாவை எதிர்கொண்டால் அவுட்டாகி விடுவோம் என்ற தயக்கத்தில் அவர் அதை செய்யவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இது போன்ற இன்னிங்ஸ்சில் கடைசி வரை அவுட்டாகாமல் நின்றால் தன்மீது தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகத்துக்கு நம்பிக்கை ஏற்பட்டு நீண்ட காலமாக கிடைக்காமல் இருக்கும் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அவர் அவ்வாறு செயல்பட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
அதற்கேற்றார்போல் ரபாடா வீசிய 39வது ஓவரின் முதல் 2 பந்துகளை எதிர்கொண்ட ஆவேஷ் கான் ரன்கள் எடுக்க முடியாத நிலைமையில் 3வது பந்தில் கொடுத்த கேட்ச்சை தென்ஆப்பிரிக்கா கோட்டை விட்டது. அப்போது சிங்கிள் மட்டுமே எடுக்க வேண்டிய சஞ்சு சாம்சன் தனது இடத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக டபுள் எடுத்து எதிர்ப்புறம் சென்றதுடன் பேட்டிங் தெரியாத ஆவேஷ் கானை பவுண்டரி அடிக்குமாறு அறிவுறுத்தினார்.
அதன்பின் 4வது பந்தில் ரன் எடுக்காத ஆவேஷ் கான் 5வது பந்தில் அவுட்டாக கடைசி பந்தில் ரவி பிஷ்னோய் தைரியமாக பவுண்டரி பறக்கவிட்டார். ஒருவேளை 3வது பந்தில் சிங்கிள் மட்டும் எடுத்து எஞ்சிய 3 பந்துகளில் ரபாடாவை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி அடித்திருந்தால் கூட கடைசி ஓவரில் இலக்கு குறைந்து வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கும் எனக்கூறும் சில ரசிகர்கள் என்னதான் சொன்னாலும் அந்த இடத்தில் சஞ்சு சாம்சன் சுயநலமாக நடந்து கொண்டதாக சாடுகிறார்கள்.



