IND vs PAK : அந்த சின்ன பையன் கூட எவ்ளோ பரவால்ல, டிகே கழற்றிவிட்டதுக்கு வேணும் – ரிஷப் பண்ட்டை கலாய்க்கும் ரசிகர்கள்

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. துபாயில் செப்டம்பர் 4ஆம் தேதியான நேற்று நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 181/7 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு 54 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சிறப்பாக தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தலா 28 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13, ரிஷப் பண்ட் 14, ஹர்டிக் பாண்டியா 0 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அந்த சமயத்தில் வந்த தீபக் ஹூடா 16 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கி பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக நின்ற நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 4 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் அடித்து 60 (44) ரன்கள் விளாசி தனது விமர்சனங்களை அடித்து நொறுக்கினார். பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சடாப் கான் 2 விக்கெட்டுக்களை எடுத்தார். அதன் பின் 182 ரன்களை துரத்திய அந்த அணிக்கு கேப்டன் பாபர் அசாம் 14, பகார் ஜமான் 15 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்கள்.

- Advertisement -

பரிதாப இந்தியா:
ஆனால் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய பவுலர்களை பிரித்து மேய்ந்த முஹம்மது நவாஸ் 6 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 42 (20) ரன்களும் அவருடன் இந்தியாவை வெளுத்து வாங்கிய முஹம்மது ரிஸ்வான் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (51) ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். அதனால் ஏற்பட்ட திருப்பு முனையை பயன்படுத்த தவறிய இந்திய பவுலர்கள் குஷ்தில் ஷா 14* (11) ஆசிப் அலி 16 (8) என கடைசியில் வந்த பேட்ஸ்மேன்கள் பினிஷிங் செய்யும் அளவுக்கு சுமாராக பந்து வீசியதால் தோல்வி கிடைத்தது.

இதனால் லீக் சுற்றில் தோல்வியை கொடுத்த இந்தியாவுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் துவக்கியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்கள் எடுக்க தவறிய இந்தியா பந்து வீச்சிலும் கடைசி நேரத்தில் சுமாராக செயல்பட்டு தலை குனியும் தோல்வியை சந்தித்தது. இதனால் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய சூப்பர் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கழற்றிவிடப்பட்ட டிகே:
இப்போட்டியில் கடைசி நேரத்தில் புவனேஸ்வர் குமார் ஒரே ஓவரில் 19 ரன்களை வாரி வழங்கியது, ஆசிப் அலி 0 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை அரஷ்தீப் சிங் கோட்டை விட்டது போன்ற அம்சங்கள் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. ஆனால் அதைவிட ஐபிஎல் 2022 ஐபிஎல் தொடரில் அட்டகாசமாக செயல்பட்டு 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் காரணமின்றி நீக்கப்பட்டதும் தோல்வியை கொடுத்தது. ஏனெனில் இப்போட்டியில் இந்தியா எடுத்த ரன்களில் இருந்து வெற்றிக்கு 15 – 20 ரன்கள் குறைவாக இருந்தது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் 16 – 20 ஓவர்களில் சிறப்பாக செயல்படும் ஸ்பெஷலிஸ்ட் பினிஷிங் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்துள்ள தினேஷ் கார்த்திக் நேற்று விளையாடியிருந்தால் நிச்சயமாக அந்த ரன்களை எடுத்திருப்பார் என்பது நிறைய ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. ஆனால் வழக்கம் போல மீண்டும் அவரை நம்பாமல் கழற்றிவிட்டு இதுவரை 56 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு முறை கூட ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு எப்போதுமே சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட்டை அணி நிர்வாகம் நம்பியது.

அதற்கு பரிசாக 5வது இடத்தில் களமிறங்கிய அவர் 2 பவுண்டரிகளை அடித்தாலும் வழக்கம்போல 14 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் அவரது ஆட்டத்தில் அதிருப்தியடைந்து கலாய்க்கிறர்கள்.

குறிப்பாக விராட் கோலி அவுட்டானதும் கடைசி நேரத்தில் களமிறங்கி கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்கவிட்டு 8* (2) ரன்களை விளாசி இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றிய பேட்டிங் தெரியாத இளம் வீரர் ரவி பிஷ்னோய் ரிஷப் பண்ட்டை விட சிறப்பாக செயல்பட்டதாக ரசிகர்கள் கலாய்க்கின்றனர். மேலும் இந்த தோல்வி பாடத்தால் அடுத்த போட்டியிலாவது தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பு கிடைக்குமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement