IND vs PAK : கொஞ்சமும் மாறாமல் மீண்டும் சொதப்பிய நட்சத்திர வீரரை கலாய்க்கும் ரசிகர்கள் – வேறு வீரருக்கு சான்ஸ் கொடுக்க கோரிக்கை

Rahul-1
- Advertisement -

உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை போட்டி துபாயில் பரபரப்பாக நடைபெற்றது. ஆகஸ்ட் 28ஆம் தேதியான நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக மோதிக் கொண்டதால் கடைசி ஓவர் வரை அனல் பறந்தது. அதில் அழுத்தத்திற்கு அஞ்சாமல் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி திரில் வெற்றி பெற்று இந்த ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் பெரிய ரன்களை எடுக்க முடியாமல் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 43 (42) ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை துரத்திய இந்தியாவுக்கு பார்மின்றி தவிக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 3 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (34) ரன்களும் 5வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த ஜடேஜா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (29) ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

சொதப்பிய ராகுல்:
இறுதியில் ஜடேஜா அவுட்டானாலும் கடைசி வரை அவுட்டாகாமல் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரிகள் உட்பட 33* (17) ரன்களை விளாசி சிக்சருடன் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்து வெற்றி பெற்ற இந்தியா இதே மைதானத்தில் கடைசியாக மோதியபோது உலக கோப்பையில் முதல் முறையாக அவமான தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து அசத்தியது. ஆனால் இப்போட்டியில் 148 என்ற ஓரளவு சுலபமான இலக்கை எளிதாக எட்டிப் பிடிக்க வேண்டிய இந்தியா கடைசி ஓவர் வரை போராடுவதற்கு முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த வருடம் ஆரம்பம் முதலே ஓய்வெடுத்து இந்தியாவுக்காக எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடாத அவர் ஐபிஎல் 2022 தொடரில் தன்னை 17 கோடிக்கு வாங்கிய லக்னோ அணியின் கேப்டனாக 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தினார். அதனால் அதன்பின் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த அவர் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறி 2 மாதங்கள் அணியிலிருந்து விலகியிருந்தார்.

- Advertisement -

அந்த நிலைமையில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் முதலில் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ஷிகர் தவானை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை என்பது போல் கடைசி நேரத்தில் குணமடைந்ததால் இரவோடு இரவாக கேப்டனாக அறிவிக்கப்பட்ட இவர் 1, 30 என பெரிய ரன்களை எடுக்க தவறினார்.

மாறாத சொதப்பல்:
அப்படி பெரிய அளவில் விளையாடி பெரிய அளவில் ரன்களை எடுத்து பார்மில் இல்லை என்பதற்காகவே பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் சில முன்னாள் வீரர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று கேட்டுக் கொண்டனர். இருப்பினும் அதையும் தாண்டி அவர் மீது நம்பிக்கை வைத்து தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் வாய்ப்பு கொடுத்தது. அந்த வகையில் இந்த வருடத்தில் இந்தியாவுக்காக முதல் முறையாக நேற்று டி20 போட்டியில் களமிறங்கிய அவர் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானது நிறைய ரசிகர்களை அதிருப்திடைய வைத்தது.

முன்னதாக கடந்த வருடம் இதே துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் ஷாஹீன் அப்ரிடியிடம் 3 ரன்களில் அவுட்டான அவர் வரலாற்று தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் இப்போது இடது கை வேகப்பந்து வீச்சாளரான சாகின் அப்ரிடி இல்லாத நிலைமையில் நேற்றைய போட்டியில் முதல் முறையாக அறிமுகமான பாகிஸ்தான் வலது கை இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா வீசிய முதல் ஓவரிலேயே அனுபவம் வாய்ந்த கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டானது தான் ரசிகர்களை கோபமடைய வைக்கிறது.

அதனால் கடுப்பான ரசிகர்கள் இவரை ஐபிஎல் தொடரில் மட்டும்தான் சிறப்பாக செயல்படுவார் நாட்டுக்காக சொதப்புவார் என்றும் ஒரு வருடமாகியும் பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்புவதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கலாய்க்கின்றனர். மேலும் தற்போது சுமாரான பார்மில் இருக்கும் அவரை அடுத்த போட்டியில் நீக்கிவிட்டு ரிஷப் பண்ட் அல்லது தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement