வீடியோ : எல்லாரும் தோனியாகி முடியாது, மீண்டும் அழுத்தத்தில் சொதப்பிய டிகே – டி20 உ.கோ நினைவுடன் விளாசும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வெறும் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ தங்களுடைய 15வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 212/2 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 61 (44), கேப்டன் டு பிளேஸிஸ் 79* (46), கிளன் மேக்ஸ்வெல் 59 (29) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவித்தனர்.

அதை தொடர்ந்து 213 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 0 (3) க்ருனால் பாண்டியா 0 (2) தீபக் ஹூடா 9 (10) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 23/3 என ஆரம்பத்திலேயே திணறிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ் 65 (30) ரன்கள் குவித்து சரிவை சரி செய்து அவுட்டான நிலையில் மறுபுறம் தடவலாக செயல்பட்ட கேஎல் ராகுல் 18 (20) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

சொதப்பிய டிகே:
அதனால் கேள்விக்குறியான அந்த அணியின் வெற்றியை அடுத்ததாக களமிறங்கி சரமாரியாக அடித்து நொறுக்கிய நிக்கோலஸ் பூரான் வெறும் 15 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த 2வது வீரராக சாதனை படைத்து 4 பவுண்டரி 7 சிக்சருடன் 62 (19) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் ஆயுஷ் படோனி 30 (24) ரன்களில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்ட போட்டியில் லக்னோவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

அதை வீசிய ஹர்ஷல் படேல் உனட்கட் 9 (7) மார்க் வுட் 1 (2) என 2 விக்கெட்களை சாய்த்ததால் ஸ்கோர் சமமான நிலையில் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரவி பிஷ்னோய் எதிர்புறமிருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேற முயற்சித்ததால் ஹர்ஷல் படேல் மன்கட் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் ஹர்ஷல் படேல் வெள்ளைக்கோட்டை தாண்டி சென்று மன்கட் செய்ய முயற்சித்ததால் நடுவர் அவுட் கொடுத்த மறுத்து விட்டார். அந்த இடத்திலேயே பெங்களூரு பாதி சொதப்பிய நிலையில் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தை ஆவேஷ் கான் அடிக்காமல் தவற விடுவார் என்று கணித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முன்னாள் கேப்டன் தோனி போல ஒற்றை கையுறையை கழற்றி தயாராக இருந்தார்.

- Advertisement -

எதிர்பார்த்தது போலவே ஆவேஷ் கானும் அதை அடிக்காமல் விட்டார். ஆனால் அப்போது வந்த பந்தை சரியாக பிடிக்காமல் கோட்டை விட்டு தட்டு தடுமாறி கீழே விழுந்து பிடித்து எழுந்த தினேஷ் கார்த்திக் ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டத்துடன் எதிர்ப்புறமாவது அவுட் செய்யலாம் என்ற எண்ணத்துடன் தூக்கி போடுவதற்குள் லக்னோவின் 2 பேட்ஸ்மேன்களும் வெற்றிகரமாக சிங்கிள் எடுத்து தோல்வியை பரிசளித்தனர். கிட்டத்தட்ட 2016 டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் தோனி எப்படி செயல்பட்டாரோ அதே போன்ற சூழ்நிலையில் அதே போல செயல்பட முயற்சித்த தினேஷ் கார்த்திக் வழக்கம் போல அழுத்தமான தருணத்தில் சொதப்பி வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.

ரன்களை வாரி வழங்கிய பெங்களூரு பவுலர்களால் கிடைத்த இந்த தோல்வியின் பழியை தினேஷ் கார்த்திக் மீது போட முடியாது என்றாலும் அந்த ரன் அவுட்டை செய்திருந்தால் குறைந்தபட்சம் டை செய்து சூப்பர் ஓவரில் வெற்றிக்காக பெங்களூரு போராடியிருக்க முடியும். முன்னதாக 2004இல் அறிமுகமானாலும் 2018 நிதியாஸ் கோப்பை ஃபைனல் தவிர்த்து பெரும்பாலான தருணங்களில் இதே போல சொதப்புவதை வழக்கமாக வைத்திருக்கும் காரணத்தாலேயே இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தினேஷ் கார்த்திக் சோடை போனார். ஆனாலும் சில ரசிகர்கள் தோனி தான் அவருடைய கேரியரை முடித்ததாக மனசாட்சியின்றி பேசுவார்கள்.

இதையும் படிங்க:RCB vs LSG : கடைசி பாலில் நடந்த சர்ச்சை. அவுட் கொடுக்க மறுத்த அம்பயர் – ரூல்ஸ் சொல்வது என்ன?

அந்த நிலையில் இப்போட்டியில் சொதப்பிய தினேஷ் கார்த்திக் எப்போதும் தோனியாக முடியாது என்று விளாசும் ரசிகர்கள் நல்லவேளையாக 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இவருடைய சொதப்பலை அஸ்வின் சரி செய்து காப்பாற்றியதாக அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement