இந்த ஸ்பார்க் போதுமா? ஜெகதீஷனை கழற்றி விட்ட சென்னைக்கு நன்றி சொல்லும் தமிழக ரசிகர்கள் – பதிலடிகள் இதோ

Jagadeesan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2022 விஜய் ஹசாரே கோப்பையில் நவம்பர் 21ஆம் தேதியன்று தமிழக கிரிக்கெட் வரலாற்றில் பொன்னான நாளாக அமைந்தது. ஏனெனில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 100வது லீக் போட்டியில் அருணாச்சல பிரதேசத்தை எதிர்கொண்ட தமிழ்நாடு முதலில் பேட்டிங் செய்து 506/2 ரன்கள் குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்கள் கடந்த முதல் அணியாகவும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் இரட்டை உலக சாதனைகளை படைத்தது. அதற்கு 416 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்சிப் ரன்கள் குவித்த ஜோடியாக சாதனை படைத்த நாராயன் ஜெகதீசன் – சாய் சுதர்சன் ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தனர்.

அதில் குறிப்பாக இரட்டை சதமடித்து 277 ரன்கள் விளாசிய ஜெகதீசன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராக உலக சாதனை படைத்தார். அத்துடன் கடைசி தொடர்ந்து 5 சதங்களை அடித்த அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார். அவருடன் சாய் சுதர்சன் 154 ரன்கள் குவித்த உதவியுடன் பந்து வீச்சிலும் மிரட்டிய தமிழகம் அருணாச்சல பிரதேசத்தை வெறும் 71 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

ரசிகர்கள் ரியாக்சன்:
அதன் வாயிலாக 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தமிழகம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையும் படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்த ஜெகதீசன் சமீப காலங்களாகவே இப்படி உள்ளூர் கிரிக்கெட்டில் முடிந்தளவுக்கு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தரும் முக்கிய பாலமாக கருதப்படும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் வாங்கப்பட்டார்.

ஆனால் சமீப காலங்களாகவே பெயரை சென்னையில் மட்டும் வைத்துள்ள அந்த அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மறுபுறம் தினேஷ் கார்த்திக் முதல் சாய் சுதர்சன் வரை பெங்களூரு, குஜராத் போன்ற எதிரணிகளில் பெரிய தொகைக்கு அட்டகாசமாக விளையாடுகிறார்கள். ஆனால் இந்த பக்கம் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் ஆகியோரை வெறும் 20 லட்சத்துக்கு பெயருக்காக வாங்கி பெஞ்சில் அமர வைத்திருந்த சென்னை நிர்வாகம் வரும் டிசம்பரில் நடைபெறும் அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

- Advertisement -

இந்த இருவரில் ஹரி நிசாந்த் கடைசி வரை வாய்ப்பு பெறாத நிலையில் ஜெகதீசனுக்கு மட்டும் வெறும் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காத சென்னை சுமாராக செயல்பட்டார் என்பதை காரணமாக வைத்து கழற்றி விட்டுள்ளது. குறிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத 2020 சீசனில் அறிமுக வாய்ப்பை பெற்ற அவர் சுமாராக செயல்பட்ட நிலையில் சென்னை அணியில் உள்ள இளம் வீரர்களிடம் போதியளவு ஸ்பார்க் இல்லை என்று கேப்டன் தோனி கூறியது வைரலானது.

இருப்பினும் அதற்கடுத்த சீசனில் தெறிக்க விட்ட ருத்ராஜ் கைக்வாட் ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஆனால் தமிழக வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுக்கப்படாததால் 2021, 2022 சீசன்களில் பெஞ்சில் அமர்ந்திருந்த ஜெகதீசன் தற்போது அந்த அணியிலிருந்து வெளியே வந்ததும் ஏன் இவரை கழற்றி விட்டோம் என்று சென்னை வருந்தும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டுள்ளார்.

இதன் காரணமாக இந்த ஸ்பார்க் போதுமா என்று 2020இல் பேசிய கேப்டன் தோனிக்கும் சென்னை நிர்வாகத்திற்கும் தமிழக ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அத்துடன் நீங்கள் கழற்றி விட்டதே பரவாயில்லை தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் மிரட்டியுள்ளதால் இந்த ஏலத்தில் வேறு ஏதேனும் ஒரு அணி நிச்சயமாக பெரிய தொகைக்கு வாங்கும் என்று தெரிவிக்கும் தமிழக ரசிகர்கள் அதை பயன்படுத்தி வரும் காலத்தில் இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பையும் ஜெகதீசன் உருவாக்குவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஆனால் உங்கள் அணியில் இருந்தால் கடைசி வரை பெஞ்சில் அமர்ந்திருந்து வயதாகிவிடும் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் தயவு செய்து இந்த ஏலத்தில் மீண்டும் அவரை வாங்கி பெஞ்சில் அமர வைத்து விடாதீர்கள் அதுதான் அவருக்கு நீங்கள் செய்யும் நன்றியாக இருக்கும் என்றும் சாடுகிறார்கள்.

Advertisement