வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி நிறைய சர்ச்சைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் புஜாரா மட்டும் கழற்றி விடப்பட்டார். மேலும் ரஞ்சி கோப்பையில் சர்பராஸ் கான் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் அசத்திய ருதுராஜ் கைக்வாட் தேர்வு செய்யப்பட்டது நிறைய விமர்சனங்களை எழுப்பியது.
அந்த நிலைமையில் இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணி இத்தொடரில் களமிறங்க உள்ளது. மேலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தோல்வியை சந்தித்ததால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்கும் வேலையை ஏற்கனவே துவங்கியுள்ள பிசிசிஐ இந்த தொடரில் ஐபிஎல் 2023 சீசனில் அசத்திய நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரசிகர்கள் கொந்தளிப்பு:
அந்த நிலைமையில் சூரியகுமார் யாதவ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் பேட்டிங் துறையில் ஐபிஎல் 2023 தொடரில் உச்சகட்டமாக அசத்திய ஜெயஸ்வால், சுப்மன் கில் ஆகியோருடன் மும்பை அணியில் மிரட்டிய திலக் வர்மா மற்றும் விக்கெட் கீப்பர்களாக இஷான் கிசான், சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஆனால் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரிங்கு சிங் ஆரம்பத்திலேயே புறக்கணிக்கப்பட்டு பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட பெறாதது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
ஏனெனில் சிலிண்டர் வினியோகம் செய்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து 2018 முதலே கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் கடந்த வருடம் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்து தோல்வியை சந்தித்தார். அதன் காரணமாக இந்த சீசனில் முதல் முறையாக முழுமையான வாய்ப்பு பெற்ற அவர் 14 போட்டிகளில் 474 ரன்களை 149.35 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அனைவரது பாராட்டுகளை அள்ளினார்.
குறிப்பாக குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்து 5 சிக்சர்களை அடித்து வரலாறு காணாத அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கிய அவர் மாபெரும் உலக சாதனை படைத்தார். மேலும் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியிலும் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்த அவர் லோயர் மிடில் ஆர்டரில் அட்டகாசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் இந்தியாவுக்காக வரும் காலங்களில் டி20 அணியில் ஃபினிஷராக செயல்படும் அளவுக்கு அழுத்தமான மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக விளையாடியதாக மேத்தியூ ஹெய்டன் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டினர்.
அது மட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இந்தியா தடுமாறி வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை போன்ற வருங்கால தொடர்களை கருத்தில் கொண்டு இப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்த்தால் ரிங்கு சிங் நிச்சயமாக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என்று உறுதியாக சொல்லலாம். அந்த நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்ற அஜித் அகர்கர் இந்த அணியை தான் முதல் முறையாக தேர்வு செய்துள்ளார்.
இதையும் படிங்க:இவரோட பினிஷிங் திறமையை பாக்கும் போது தோனியை பாக்குற மாதிரியே இருக்கு – ரிக்கி பாண்டிங் புகழாரம்
அதனால் நிறைய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 474 ரன்கள் குவித்த ரிங்கு சிங் மற்றும் சென்னை அணிக்காக 560 ரன்களை விளாசிய ருதுராஜ் ஆகியோரை தேர்ந்தெடுக்காத அவர் மும்பைக்காக வெறும் 343 ரன்கள் எடுத்த திலக் வர்மாவை தேர்ந்தெடுத்து முதல் தொடரிலேயே காலம் காலமாக நடந்து வரும் அரசியல் வேலையை ஆரம்பித்துள்ளதாக ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர்.



