IND vs WI : ஒரே ஜெர்ஸியுடன் விளையாடிய 3 இந்திய வீரர்கள். என்ன காரணம்? – முழுவிவரம் இதோ

Arshdeep Singh Jersey
Advertisement

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதியான நேற்று இரவு இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு வார்னர் பார்க் மைதானத்தில் துவங்குவதாக இருந்தது. ஆனால் முதல் போட்டி நடந்த ட்ரினிடாட் நகரிலிருந்து இரு அணி வீரர்களின் லக்கேஜ் வருவதற்கு தாமதமாவதால் இப்போட்டி 10 மணிக்கு துவங்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அறிவித்தது. அதனால் சர்வதேச கிரிக்கெட்டிலும் இப்படி ஒரு நிலையா என்று ரசிகர்கள் ஆச்சர்யமடைந்த நிலையில் அறிவித்தபடி 10 மணிக்கும் துவங்காத போட்டி மேலும் ஒரு மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு துவங்கியது.

அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா இம்முறை அந்த அணி பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியாவுக்கு முதல் பந்திலேயே கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 11 (6), ஸ்ரேயாஸ் அய்யர் 10 (11), ரிஷப் பண்ட் 24 (12), ஹர்திக் பாண்டியா 31 (31), ரவீந்திர ஜடேஜா 27 (30), தினேஷ் கார்த்திக் 7 (13) என அடுத்து வந்த அத்தனை முக்கியமான பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்களை எடுக்காமல் கைவிட்டார்கள்.

- Advertisement -

போராடிய பவுலர்கள்:
அந்த அளவுக்கு அற்புதமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஓபேத் மெக்காய் 6 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை தொடர்ந்து 139 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு 46 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க ஜோடியில் கெய்ல் மேயர்ஸ் 8 (14) ரன்களில் தடுமாறி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் நிக்கோலஸ் 14 (11) பூரன் சிம்ரோன் ஹெட்மையர் 6 (10) ரோவ்மன் போவல் 5 (8) என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட் செய்த இந்திய பவுலர்கள் வெற்றிக்காக முடிந்தளவு போராடினர்.

Arshdeep Singh Bowled

இருப்பினும் 16 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்த தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (52) ரன்களும் கடைசியில் டேவோன் தாமஸ் 31* (19) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 19.2 ஓவரில் 141/5 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்து இந்த தொடரை 1 – 1* (5) என்ற கணக்கில் சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு 6 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய மெக்காய் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஒரே ஜெர்ஸி:
முன்னதாக இப்போட்டி துவங்கிய போது ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தனது பெயருடைய ஜெர்சியை அணியாமல் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷிதீப் சிங் ஜெர்ஸியை அணிந்து விளையாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த நிலைமையில் பீல்டிங் செய்ய இந்தியா களமிறங்கிய போது மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானும் அவரது ஜெர்சியை அணிந்து விளையாடினார்.

- Advertisement -

அதுபோக அர்ஷிதீப் சிங்க்கும் 2 என்ற நம்பரை கொண்ட தனது ஜெர்சியை அணிந்து விளையாடினார். மொத்தத்தில் நேற்று களமிறங்கிய 11 இந்திய வீரர்களில் 3 பேர் ஒரே ஜெர்ஸியை அணிந்து விளையாடியதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை கலகலப்பாக தெரிவிக்கிறார்கள். அதுவும் 18.3வது பந்தில் அர்ஷிதீப் சிங் வீசிய பந்தை அவரே தூக்கி எறிந்து பின்னர் அவரே தடுத்து நிறுத்தியதாக அந்த 3 வீரர்களும் ஒன்றிணைந்த தருணத்தை குறிப்பிட்டு ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

சரியான நேரத்தில் வீரர்களின் லக்கேஜை அவர்களிடம் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சேர்க்காததே இந்த அனைத்து குழப்பத்திற்கும் முக்கிய காரணமாகும். மேலும் 3 மணி நேரம் போட்டி தாமதமாகும் அளவுக்கு அதிகப்படியான நேரம் எடுத்துக் கொண்ட பின்பும் கூட வெஸ்ட் இண்டீஸ் வாரியம் வீரர்களின் முழுமையான உடைமைகளை அவர்களிடம் ஒப்படைக்காததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதனால் ஒரு சர்வதேச கிரிக்கெட்டில் பொறுப்பின்றி நடந்து கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்க்கின்றனர். அதுபோக ஏற்கனவே முதல் போட்டி 3 மணி நேரம் தாமதமாக துவங்கியதால் தூக்கம் கெட்டுப்போன நிலையில் இன்று நடைபெறும் 3-வது போட்டியும் 8 மணிக்கு அல்லாமல் 9.30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய ரசிகர்கள் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் மீது மேலும் கோபமடைகின்றனர்.

Advertisement