தல தோனிக்கும் – சின்னத்தல ரெய்னாவுக்கும் இடையே விரிசல், மனக்கசப்பு! ஆதாரத்தை காட்டும் ரசிகர்கள்

raina
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முதல் போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென்று நேற்று அறிவித்தார். தற்போது 40 வயதைக் கடந்து விட்ட அவர் சென்னை அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த அணியின் மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் காலம் காலமாக வகித்து வந்த கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையில் முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக எம்எஸ் தோனி விளையாட உள்ளது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி கடந்த வருடம் வரை தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் அந்த அணியை குறைந்தது பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று பெருமை படுத்தினார்.

- Advertisement -

அவர் தலைமையில் 12 சீசன்களில் பங்கேற்ற சென்னை அதில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 9 முறை இறுதிப்போட்டியில் விளையாடி 4 சாம்பியன் கோப்பைகளை முத்தமிட்டது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக சென்னையை ஜொலிக்க வைத்து 2-வது வெற்றிகரமான கேப்டனாக எம்எஸ் தோனி விடை பெற்றுள்ளார்.

வாழ்த்து கூறிய சின்னத்தல ரெய்னா:
கடந்த பல வருடங்களாக சென்னை அணியை முன் நின்று வழிநடத்திய எம்எஸ் தோனி அந்த அணிக்காக பல சரித்திர வெற்றிகளை பெற்று கொடுத்ததால் சென்னை மற்றும் தமிழக ரசிகர்கள் அவரை “தல” என்று கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட அவர் விடை பெற்றுள்ள இந்த தருணத்தில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஜாம்பவான்களும் வல்லுநர்களும் அவரை தங்களின் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். மேலும் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வரிசையில் சென்னை அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வந்த நட்சத்திர இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தோனியின் விலகல் முடிவு பற்றியும் ஜடேஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்றது பற்றியும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “எனது சகோதரருக்காக மிகவும் த்ரில் அடைகிறேன். இந்த நிலைமையில் நாம் இருவருமே வளர்ந்த அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு உங்களை தவிர வேறு யாரும் தகுதியானவர் இருக்க முடியாது. வாழ்த்துக்கள் ஜடேஜா. இது உங்களின் ஆவல் மிகுந்த பயணம். இந்த பயணத்தில் உங்கள் மீது வைக்கப்படும் எதிர்பார்ப்புகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறேன். சிஎஸ்கே. விசில் போடு” என பதிவிட்டுள்ளார்.

விரிசல், மனக்கசப்பு உறுதி:
இதை பார்த்த பல ரசிகர்கள் எம்எஸ் தோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே விரிசலும் மனக்கசப்பும் இருப்பது இதன் வாயிலாக உறுதியாகிறது என்று பேசத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் தோனியை போலவே கடந்த 2008 முதல் சென்னை அணிக்காக தொடர்ந்து காலம் காலமாக விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா தனது அதிரடியான ஆட்டத்தால் அந்த அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

சொல்லப்போனால் தோனி கோப்பையை வென்ற 4 ஐபிஎல் தொடர்களிலும் அவரின் பங்கு அளப்பரியது என்றே கூறலாம். ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை அடித்த முதல் வீரர் போன்ற பல சாதனைகளைப் படைத்து வந்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என வல்லுனர்கள் பாராட்டிய வேளையில் கேப்டன் தோனிக்கு அடுத்து சென்னையின் முக்கிய முதுகெலும்பு வீரராக விளையாடியதால் “சின்ன தல என சென்னை ரசிகர்கள் கொண்டாடினர்.

பொதுவாகவே இந்தியாவிற்காகவும் சென்னைக்காகவும் ஜோடி சேர்ந்து பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர்கள் கிரிக்கெட் உலகில் ஒரு மிகச் சிறந்த நண்பர்களாக கருதப்படுகின்றனர். அந்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தினத்தில் சர்வதேச போட்டிகளிலிருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற அடுத்த ஒருசில நிமிடங்களில் தனது ஓய்வையும் அறிவித்த சுரேஷ் ரெய்னா நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக கடந்த வருடம் வரை கூட தோனிக்கு பின் சென்னையின் அடுத்த கேப்டன் சுரேஷ் ரெய்னா தான் என அனைவரும் கருதினார்கள். அந்த வேளையில் ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து ஒவ்வொரு சீசனுக்கும் 400+ ரன்களை அடித்து வந்த அவர் முதல் முறையாக கடந்த சில வருடங்களாக ரன்கள் குவிக்க தடுமாறினார். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் மோசமான பார்மில் இருந்த அவரை சென்னை அணி நிர்வாகம் சமீபத்தில் நடந்த ஏலத்தில் வாங்காமல் கழட்டி விட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இத்தனைக்கும் சென்னை அணியில் வாங்கப்படும் வீரர்கள் பெரும்பாலும் தோனியின் கட்டளைப்படி தான் வாங்கப் படுகிறார்கள் என அந்த அணியின் நிர்வாக இயக்குனர் காசி விசுவநாதன் அடிக்கடி கூறியுள்ளார்.

அந்த நிலையில் தோனியின் மேல் வைத்திருக்கும் பாசம் காரணமாக 34 வயதிலேயே அவர் ஓய்வு பெற்றபோது தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையையும் முடித்துக் கொண்ட சுரேஷ் ரெய்னா அவர் தலைமையில் தொடர்ந்து சென்னை அணியில் விளையாடலாம் என நம்பியிருந்தார். ஆனால் அந்த நட்பை மறந்த தோனி அவரை சென்னை அணி கண்டிப்பாக வாங்குவதற்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமெனில் ஐபிஎல் 2022 ஏலம் முடிந்த பின் சென்னை அணியிடம் இன்னும் கூட 2.90 கோடி மீதி தொகை உள்ளது. அந்த நிலையில் 2 கோடி விலை கொண்ட சுரேஷ் ரெய்னாவை யாரும் வாங்காத வேளையில் அடிப்படை விலையிலாவது வாங்கி குறைந்தபட்சம் பெஞ்சிலாவது அமர வைத்திருக்கலாமே, அதற்கு அவர் தகுதியானவர் தானே என பல சென்னை ரசிகர்கள் ஏலத்தின் போது வெளிப்படையாக பேசினார்கள்.

ரசிகர்களே அப்படிப் பேசும் நிலையில் சென்னை அணிக்காக காலம் காலமாக விளையாடி பங்காற்றிய நன்றியை மறந்த சென்னையைப் பற்றியும் தனது நண்பராக கருதிய தோனியை பற்றியும் சுரேஷ் ரெய்னாவுக்கு என்னென்ன எண்ணங்கள் மனதில் ஓடியிருக்கும். பொதுவாக ஒருவர் தடுமாறும் போது அந்த சமயத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என கூறுவார்கள். அந்த வகையில் கூட தோனியும் சென்னையும் நடந்து கொள்ளவில்லையே என மனம் உடைந்த சுரேஷ் ரெய்னா வேறு வழியின்றி தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார். அதன் காரணமாகவே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய போது அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் ஜடேஜாவை மட்டும் பாராட்டி உள்ளார் என ரசிகர்கள் ஆதாரத்தை நீட்டுகிறார்கள்.

ஒருவேளை சென்னை அணி நிர்வாகத்தின் மீது மட்டும் அவருக்கு கோபம் மற்றும் மனக்கசப்பு இருந்திருக்குமேனால் இந்த விஷயம் பற்றி அவர் எதுவுமே பேசாமல் இருந்திருப்பார். ஆனால் தனது ட்வீட்டில் டோனியை பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடாமல் ஜடேஜாவை மட்டும் குறிப்பிட்டதிலிருந்து தோனி மீது அவருக்கு மனக்கசப்பு உள்ளது தெளிவாகத் தெரிகிறது என ரசிகர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு காலத்தில் தல – சின்னத்தல என நட்புக்கு இலக்கணமாய் ஒரே அணியில் விளையாடி வந்த இந்தியாவின் நட்சத்திரங்களுக்கிடையே இன்று இப்படி ஒரு அரசல் புரசலான விரிசல் ஏற்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement