வீடியோ : கடைசி ஓவரில் பயத்துக்கே பயம் காட்டிய ஷார்துல், லார்ட் தாகூர் என கொண்டாடும் ரசிகர்களின் ரியாக்சன் இதோ

Shardul Thakur 2
- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 19ஆம் தேதியன்று அனல் பறக்க ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 349/8 ரன்கள் குவித்து அசத்தியது. கேப்டன் ரோஹித் சர்மா 34, விராட் கோலி 8, இஷான் கிசான் 5, சூரியகுமார் யாதவ் 31, ஹர்டிக் பாண்டியா 28 என முக்கிய இந்திய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினார்கள்.

இருப்பினும் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி ஓவர் வரை நிலைத்து நின்று நியூசிலாந்து பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட சுப்மன் கில் ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் 19 பவுண்டரி 9 சிக்ஸருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்து 208 (149) ரன்கள் குவித்து அட்டானார். அதைத் தொடர்ந்து 350 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 40, டேவோன் கான்வே 10, ஹென்றி நிக்கோலஸ் 18, டார்ல் மிட்சேல் 9, கேப்டன் டாம் லாதம் 24, கிளன் பிலிப்ஸ் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்களை குவிக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

- Advertisement -

பயத்துக்கே பயம்:
அதனால் 131/6 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய நியூசிலாந்தை அடுத்ததாக களமிறங்கிய மைக்கேல் ப்ரேஸ்வெல் – மிட்சேல் சாட்னருடன் இணைந்து அதிரடியாக ரன்களை சேர்த்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அதில் ஒருபுறம் நிதானத்துடன் பேட்டிங் செய்த மிட்சேல் சாட்னர் அரை சதமடித்த நிலையில் மறுபுறம் வெளுத்து வாங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக சதமடித்து இந்தியாவுக்கு பயத்தை காட்டினார். அப்படி இந்தியாவின் வெற்றியை கேள்விக்குறியாக்கி 7வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தெறிக்க விட்ட இந்த ஜோடியை ஒரு வழியாக சிராஜ் மிட்சேல் சாட்னரை 57 (45) ரன்களில் அவுட்டாக்கி பிரித்தார்.

ஆனாலும் மறுபுறம் சிம்ம சொப்பனமாக மாறிய மைக்கேல் ப்ரேஸ்வெல் வெளுத்து வாங்கியதால் வெற்றியை நெருங்கிய நியூசிலாந்துக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஏற்கனவே சிராஜ் மற்றும் ஷமிக்கு 10 ஓவர்கள் முடிந்து விட்டதாலும் 49வது ஓவரை பாண்டியா வீசியிருந்ததாலும் வேறு வழியின்றி கடைசி ஓவரை சற்று ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த ஷார்துல் தாகூரிடம் கேப்டன் ரோகித் சர்மா கொடுத்தார்.

- Advertisement -

அதில் முதல் பந்திலேயே மைக்கல் பிரேஸ்வெல் சிக்ஸர் பறக்க விட்டு மேலும் பயத்தை காட்டிய நிலையில் அடுத்த பந்தில் தாகூர் ஒயிட் போட்டதால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்தனர். ஆனால் பதறாமல் அதற்கடுத்த பந்தில் லெக் ஸ்டம்ப்பை நோக்கி ஷார்துல் தாகூர் வீசிய யார்கர் பந்தை லெக் சைடு திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்த மைக்கல் பிரேஸ்வெல் முழுவதுமாக தவற விட்டு எல்பிடபிள்யூ முறையில் போராடி 140 (78) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதை ரிவியூ எடுத்தும் அவுட் கிடைத்ததால் 337 ரன்களுக்கு நியூஸிலாந்தை அவுட்டாக்கிய இந்தியா வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு சுப்மன் கில் இரட்டை சதமடித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றாலும் 4 விக்கெட்டுகள் எடுத்து சிராஜ் அசத்தினாலும் கடைசி நேரத்தில் பயத்தை காட்டிய மைக்கேல் பிரேஸ்வேலை அவுட்டாக்கி வெற்றி உறுதி செய்த ஷார்துல் தாகூரை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

அறிமுகமானது முதலே இப்படி ரன்களை வாரி வழங்கினாலும் முக்கிய தருணங்களில் ஏதோ ஒரு மேஜிக் செய்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுப்பது, எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை உடைப்பது அல்லது இது போன்ற முக்கிய நேரத்தில் விக்கெட்டை எடுத்து வெற்றியை பெற்றுக் கொடுப்பது போன்ற செயல்பாடுகளால் ஏற்கனவே சில மறக்க முடியாத வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நான் டபுள் செஞ்சுரி பத்தி யோசிச்சதே அந்த ஒரு ஓவருக்கு அப்புறம் தான் – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

அதே போல் பேட்டிங்கிலும் அவ்வப்போது யாருமே எதிர்பார வகையில் அதிரடியாக விளையாடி சில வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவரை ரசிகர்கள் “லார்ட் தாக்கூர்” என்று கொண்டாடுவதும் வழக்கமாகும். அந்த வகையில் இப்போட்டியில் பயத்தை காட்டிய மைக்கேல் பிரேஸ்வேலை அவுட்டாக்கி பயத்துக்கே பயத்தை காட்டி இந்தியாவை வெற்றி பெற வைத்த லார்ட் தாகூரிடம் ஏதோ ஒரு மேஜிக் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement