அவர இப்படி பார்த்து எவ்ளோ வருசங்கள் ஆச்சு – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட் கோலி, முழுவிவரம்

kohli
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா ஆகஸ்ட் 31ஆம் தேதியான நேற்று ஹாங்காங்கை எதிர்கொண்டது. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு 192/2 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 21 (13) ரன்களும் கேஎல் ராகுல் மெதுவாக 36 (39) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து கடைசி வரை அவுட்டாகாமல் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியான பினிஷிங் கொடுத்தனர்.

அதில் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி 1 பவுண்டரி 3 சிக்சருடன் 59* (44) ரன்களை எடுக்க அவரைவிட அட்டகாசமாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 68* (26) ரன்களை 261.54 என்ற வெறித்தனமான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். அதை துரத்திய ஹாங்காங் அணிக்கு தொடக்க வீரர்கள் முர்த்தசா 9, கேப்டன் நிஜாகத் கான் 10 என சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில் மிடில் ஆர்டரில் வெற்றிக்கு போராடிய பாபர் ஹயத் 41 (35) ரன்களும் கின்சிட் ஷா 30 (28) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அரிதான காட்சி:
இறுதியில் ஜீசன் அலி அதிரடியாக 26* (17) ரன்களும் மெக்கன்னி 16* (9) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 152/5 ரன்கள் மட்டுமே எடுத்த ஹாங்காங் முடிந்த அளவுக்கு போராடி தோல்வியடைந்தது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் ஏற்கனவே முதல் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா இந்த ஆசிய கோப்பையின் 2 லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.

முன்னதாக ஜாம்பவானுக்கு நிகரான சாதனைகளை ஏற்கனவே படைத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக திகழும் விராட் கோலி 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்ற மிகப்பெரிய விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரு மாதம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் இந்த தொடரில் விளையாடி வருகிறார். அதில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ராகுல் டக் அவுட்டானாதும் களமிறங்கி ரோகித் சர்மாவுடன் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய 35 ரன்களை எடுத்தார்.

- Advertisement -

ஆனாலும் 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார் என்பதற்காக மீண்டும் விமர்சனங்களை சந்தித்த அவர் இந்த போட்டியில் 59* (44) ரன்களை 134.09 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் குவித்து அசத்தினார். அந்த நிலைமையில் நேற்றைய போட்டியில் ஹாங்காங் பலவீனமான அணி என்பதால் ஆரம்பம் முதலே சிறப்பாக பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து போட்டியை கட்டுக்குள் இருந்த காரணத்தாலும் 17வது ஓவரை வீசுவதற்கு கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் விராட் கோலி அனுமதி கேட்டார்.

போட்டி கட்டுக்குள் இருந்ததால் தாமாக முன்வந்து பந்து வீச விரும்பிய விராட் கோலிக்கு ரோகித் சர்மாவும் பச்சைக் கொடி காட்டினார். அதனால் 17வது ஓவரை வீசிய விராட் கோலி 6 ரன்கள் மட்டும் கொடுத்து சிறப்பாகவே பந்து வீசியதை பார்த்த பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பரவசமடைந்து தங்களது ஆனந்தத்தை சமூக வலைதளங்களில் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் நல்ல பேட்ஸ்மேன் மற்றும் ஃபீல்டரான அவர் முதன்மை பவுலர்கள் இருப்பதால் பெரும்பாலும் பகுதிநேர பவுலராக கூட பந்து வீசுவதில்லை.

6 வருடங்களுக்குப்பின்:
அந்த வகையில் நேற்று அரிதாக பந்துவீசிய அவரது பவுலிங்கை பார்த்த ரசிகர்கள் ஆவேஷ் கான் போன்ற ரன்களை வாரி வழங்கும் பவுலர்களை விட விராட் கோலி சிறப்பாகவே பந்து வீசுகிறார் என்று கலகலப்பை தெரிவிக்கின்றனர். சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2016இல் இந்திய மண்ணில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பந்து வீசியிருந்த அவர் 6 வருடங்கள் கழித்து நேற்று தான் ஒரு டி20 போட்டியில் பந்து வீசினார்.

ஆச்சரியப்படும் வகையில் 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கேப்டனாக செயல்பட்ட அவர் நினைத்திருந்தால் தாமாகவே எந்த சூழலிலும் பந்துவீசியிருக்க முடியும். இருப்பினும் கடைசியாக எம்எஸ் தோனி தலைமையில் பந்துவீசிய அவர் தற்போது 6 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தலைமையில் பந்து வீசியது உண்மையாகவே அரிதான காட்சியாகும்.

Advertisement