ரெய்னாவுக்கு நடந்த மாதிரியே ஜடேஜாவுக்கும் நடக்குதே ! சென்னையை விளாசும் ரசிகர்கள் – நிர்வாகத்தின் பதில் இதோ

Jadeja-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக மும்பை நகரில் நடைபெற்று வந்தாலும் அதில் நடப்பு சாம்பியனான விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இதுவரை பெரிய அளவில் வெற்றி வெற்றிகரமாக அமையவில்லை. 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த சென்னை இம்முறை சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து 5-ஆவது கோப்பையை வென்று மும்பையின் ஆல்டைம் சாதனையை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் எம்எஸ் தோனி தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக தேவையின்றி கேப்டன்ஷிப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

மறுபுறம் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத ஜடேஜா முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பே சென்னை 4 தோல்விகளை சந்தித்ததால் வரலாற்றில் ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாப சாதனையை படைத்தார். அதைவிட ஆல்-ரவுண்டராக அசத்திய அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என மொத்தமும் சொதப்பியதால் அந்த பொறுப்பை வேண்டாம் என்று மீண்டும் தோனியிடமே வழங்கினார்.

காயத்தால் விலகல்:
ஆனால் அதற்குள் சென்னையின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு 90% பறிபோன நிலையில் கேப்டனாக தோனி திரும்பியதும் ஒருசில பெரிய வெற்றிகளை சுவைத்த அந்த அணி தற்போது 11 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலைமையில் அடுத்த 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு வெறும் 3% மட்டுமே வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமையில் கடந்த மே 4-இல் பெங்களூருவுக்கு எதிராக சென்னை போட்டியின்போது கேட்சை பிடிக்க முயன்ற போது கடுமையான காயமடைந்த ரவீந்திர ஜடேஜா பாதியிலேயே விலகினார்.

அதனால் டெல்லிக்கு எதிரான சென்னையின் கடைசி போட்டியில் மொத்தமாக விலகிய அவரின் காயம் பெரிய அளவில் இருப்பதால் எஞ்சிய ஐபிஎல் 2022 தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் மாதங்களில் டி20 உலகக் கோப்பை உட்பட இந்தியா பங்கேற்கும் முக்கிய கிரிக்கெட் தொடர்கள் துவங்குவதால் அதற்கு முன் காயத்திலிருந்து குணமடைந்தது பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் சந்தேகம்:
ஆனால் சின்னத்தல என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த போதிலும் நன்றி இல்லாத வகையில் சென்னை அணி நிர்வாகம் கழற்றிவிட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு நடந்ததுபோல் ஜடேஜாவுக்கும் தற்போது நடைபெறுவதாக பல ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். ஏனெனில் 2008 முதல் ஒவ்வொரு வருடமும் சொல்லி அடித்து பல சாதனைகளைப் படைத்து மிஸ்டர் ஐபிஎல் என பெயரெடுத்து சென்னை 4 கோப்பைகள் வெல்ல முக்கிய பங்காற்றிய சுரேஷ் ரெய்னா கடந்த வருடம் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை என்பதால் அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

அதிலும் 2021இல் இதேபோல ஐபிஎல் தொடரின் கடைசி ஒருசில போட்டிகளுக்கு முன்பாக காயத்தால் ரெய்னா விலகினார் என அறிவிக்கப்பட்டு பின்னர் தக்கவைக்காமல் ஏலத்திலும் வாங்காமல் கழற்றிவிட்டு அவமானப்படுத்தியது. அதேபோல் இந்த வருடம் பெரிய ரன்கள் எடுக்காமல் சொதப்பிய ஜடேஜாவுக்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

அதற்கு ஆதாரமாக சமூக வலைதளங்களில் ரெய்னாவை பின்பற்றி வந்த சென்னை அதன்பின் பின் தொடர்வதை நிறுத்தியது போல் சில வாரங்களுக்கு முன் ஜடேஜாவை பின்தொடர்ந்த சென்னை அணி நிர்வாகம் தற்போது அவரை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளது. ஆனால் இந்த வருடம் தோனியை விட 16 கோடி என்ற பெரிய தொகைக்கு ஜடேஜாவை நம்பி வாங்கிவிட்டு ஒருசில போட்டிகளில் சொதப்பினார் என்பதற்காக சென்னை அணி நிர்வாகம் கழற்றி விடவில்லை என கூறும் சென்னை ரசிகர்கள் அதற்கு ஆதாரமாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியின்போது ஜடேஜா காயமடைந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

நிர்வாகத்தின் பதில்:
மொத்தத்தில் நேற்று ஜடேஜா காயத்தால் விலகினார் என்று வெளியானதும் தற்போது சமூக வலைதளங்களில் இந்த பேச்சுக்கள்தான் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இந்தப் பேச்சுக்கள் அனைத்துமே தேவையற்றது என்றும் உண்மையாகவே ஜடேஜா காயத்தால் தான் விலகினார் என்றும் அடுத்த வருடங்களில் நிச்சயம் அவர் சென்னைக்காக விளையாடுவார் என அந்த அணியின் தலைமை இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “சமூக வலைதளங்களில் பின்தொடர்வது பின்தொடராரது போன்றவைகளை நான் பின்தொடர்வது கிடையாது. இருப்பினும் எங்கள் நிர்வாகத்தின் சார்பில் ஜடேஜாவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர் எப்போதும் வருங்கால சென்னை அணியில் இருப்பார்” என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement