செல்பிஷ் பேட்டிங், சொதப்பல் கேப்டன்ஷிப் ! பெரிய ரன்கள் அடித்தும் நட்சத்திர வீரர் மீது ரசிகர்கள் கோபம் – காரணம் இதோ

Quinton De Kock KL Rahul 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 25-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்த லக்னோவை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த தகுதி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் இத்தனைக்கும் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 207/4 ரன்கள் சேர்த்தது.

patidar 1

- Advertisement -

அந்த அணிக்கு கேப்டன் டுப்லஸ்ஸிஸ் 0 (1) விராட் கோலி 25 (24) கிளன் மேக்ஸ்வெல் 9 (10) மஹிபால் லோம்ரோர் 14 (9) என முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் டுப்லஸ்ஸிஸ் அவுட்டானதும் களமிறங்கி மறுபுறம் நங்கூரமாக நின்று அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த இளம் வீரர் ரஜத் படிடார் கடைசி வரை அவுட்டாகாமல் லக்னோ பவுலர்களை பிரித்து மேய்ந்து 12 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 112* (54) ரன்கள் விளாசினார்.

லக்னோ வெளியேற்றம்:
அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த அவருடன் கடைசி நேரத்தில் பட்டையை கிளப்பிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37* (23) ரன்கள் விளாசி அதிரடியான பினிஷிங் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு குயின்டன் டி காக் 6 (5) மன்னன் வோஹ்ரா 19 (11) என டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 42/1 என அந்த அணி தடுமாறியது. ஆனாலும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் பொறுப்புடனும் நிதானமாகவும் பேட்டிங் செய்து அடுத்து வந்த தீபக் ஹூடாவுடன் இணைந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை மீட்டெடுத்தார்.

Mohammed Siraj De Kock

இருப்பினும் அதில் தீபக் ஹூடா 45 (26) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மர்கஸ் ஸ்டாய்நிஸ் 9 (9) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அந்த சமயத்தில் பினிஷிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 79 (58) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த க்ருனால் பாண்டியா கோல்டன் டக் அவுட்டானதால் தோல்வி உறுதியானது. இறுதியில் 20 ஓவர்களில் 193/6 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி ஐபிஎல் 2022 தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

செல்பிஷ் பேட்டிங்:
இப்போட்டியில் இதர பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்ட போதிலும் 79 (58) ரன்கள் எடுத்து போராடிய கேஎல் ராகுலை பாராட்டாமல் தோல்விக்கு அவர்தான் காரணம் என்று பெரும்பாலான ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். ஏனெனில் முதல் 21 பந்துகளில் மெதுவாக பேட்டிங் செய்து 29 ரன்கள் மட்டுமே எடுத்த அவரால் 9 – 13 ஆகிய 5 ஓவரில் லக்னோ வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 39 பந்துகளில் 45 ரன்களை எடுத்த அவர் அதிரடி காட்ட வேண்டிய நேரத்திலும் அதே நிதானத்தை கடைபிடித்ததால் எதிர்ப்புறம் அதிரடி காட்ட முயன்ற தீபக் ஹூடா 41 (26) ரன்களில் அவுட்டானர்.

சரி கடைசி நேரத்திலாவது அதிரடி காட்டுவார் என்று பார்த்தால் அவர் சந்தித்த கடைசி 19 பந்துகளில் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்து 19-வது ஓவரில் 58 பந்துகளில் 79 ரன்களை 136.21 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து நடையைக்கட்டினார். அதனால் 10.5 என இருந்த ரன்ரேட் 14.4 என உயர்ந்த காரணத்தாலும் சந்திப்பதற்கு குறைவான பந்துகள் மட்டுமே இருந்த காரணத்தால் ஏற்பட்ட அழுத்தத்தால் அடுத்து வந்த ஸ்டோனிஸ் 9 (9), க்ருனால் பாண்டியா 0 (1), எவின் 3* (6) ஆகியோரால் அதிரடி காட்ட முடியவில்லை.

- Advertisement -

1. முதல் ஓவரிலிருந்து 19 ஓவர்கள் வரை விளையாடி தோல்வியடைந்ததற்கு சற்று முன்கூட்டியே அதிரடியாக விளையாடி அவுட்டாகியிருந்தால் ஸ்டோனிஸ், எவின் லெவிஸ் போன்ற அதிரடி வீரர்கள் அதிக பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை பெற்று வெற்றி பெற்றுக்கொடுப்பதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.

2. இது மட்டுமல்லாமல் ஆரஞ்சு தொப்பி போன்ற சொந்த சாதனைகளுக்காக அதிரடி காட்டாமல் மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் கேஎல் ராகுல் அதற்கு பலனாக தன்னிச்சையான சாதனைகளை படைத்தாலும் அணியைப் பற்றி கவலைப்படாமல் அணிக்கு உதவாத செல்பிஷ் பேட்டிங் செய்வதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றனர்.

3. போட்டியின் சூழ்நிலைக்கேற்ப விளையாட வேண்டும் என்பதால் ஸ்ட்ரைக் ரேட் மீது எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சமீபத்திய பேட்டியில் கேஎல் ராகுல் தெரிவித்திருந்தார். ஆனால் போட்டியின் சூழ்நிலைக்கேற்ப அவர் எப்போதுமே விளையாடியது கிடையாது என்று ரசிகர்கள் சாடுகின்றனர்.

சுமாரான கேப்டன்ஷிப்:
சரி பேட்டிங் தான் அப்படி என்று பார்த்தால் பேட்டிங்கில் பினிஷிங் செய்ய மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா ஆகியோர் இருக்க எவின் லெவிஸ் போன்ற வெஸ்ட் இண்டீஸ் காட்டடி வீரரை 3-வது இடத்தில் களமிறக்காமல் மன்னன் வோஹ்ரா போன்றவரை களமிறக்கி கேப்டன்ஷிப் விஷயத்திலும் அவர் சொதப்பியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் இருந்தபோது அவர் கொடுத்த கேட்சை கோட்டை விட்டதால் அதன்பின் 37 ரன்கள் எடுத்த அவர் தோல்வியை பரிசளித்தார். மொத்தத்தில் லக்னோ வெளியேறுவதற்கு கேஎல் ராகுல் தான் காரணம் என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே திட்டுகின்றனர்.

Advertisement