ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை நவம்பர் 6ஆம் தேதியன்று உச்சகட்டமான எதிர்பாராத திருப்பம் அரங்கேறியது. ஆம் அதிகாலை 5.30 மணிக்கு அடிலெய்ட் நகரில் நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த நெதர்லாந்தை நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்கொண்ட வலுவான தென்னாப்பிரிக்கா எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலம் காலமாக உலகக் கோப்பைகளில் முக்கிய நேரங்களில் சொதப்பும் அந்த அணி நெதர்லாந்து நிர்ணயித்த 159 ரன்கள் துரத்த முடியாமல் 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை தன்னைச் சோக்கர் என நிரூபித்து வெளியேறியது.
அதனால் ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் கடைசி நேரத்தில் அரையிறுதிக்கு செல்ல அதிர்ஷ்டமான வாய்ப்பைப் பெற்று அதே கிரிக்கெட் மைதானத்தில் 9.30 மணிக்கு துவங்கிய 41வது போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தாலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 127/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் சான்தோ அதிகபட்சமாக 7 பவுண்டரியுடன் 54 (48) ரன்கள் எடுத்ததால் முதல் 10 ஓவர்களில் 70 ரன்களை எடுத்து வலுவான இருந்தது. ஆனால் அடுத்த 10 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மோசமான முடிவு:
அந்தளவுக்கு டெத் ஓவரில் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 128 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு முகமது ரிஸ்மான் 32 (32) பாபர் அசாம் 25 (33) முகமது ஹாரிஸ் 31 (18) சான் மசூத் 24* (14) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்து 18.1 ஓவரிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதனால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசியில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்ற அசத்தியது.
முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்துக்கு சடாப் கான் வீசிய 11வது ஓவரின் 5வது பந்தை கேப்டன் சாகிப் அல் ஹசன் எதிர்கொண்டார். ஆனால் அவர் தவற விட்ட அந்த பந்து அவருடைய காலில் பட்டது. அதனால் பாகிஸ்தான் அவுட் கேட்டதால் நடுவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தது அவரை அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில் பந்து தன்னுடைய பேட்டில் பட்டததாக உணர்ந்த அவர் உடனடியாக டிஆர்எஸ் ரிவ்யூ எடுத்தார்.
அதில் பந்து தரையில் பட்டு காலில் படுவதற்கு முன்பாகவே அவருடைய பேட்டில் உரசியது அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் தெளிவாக தெரிந்தது. ஆனால் அதை தெரிந்தும் 3வது நடுவரும் காலில் பட்டதாக நினைத்து மீண்டும் அவுட் கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதனால் அதிர்ந்த சாகிப் அல் ஹசன் 2 கையையும் உயர்த்தி இது அவுட்டா என்ற வகையில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இருப்பினும் அவரை சமாதானம் செய்த நடுவர்கள் பெவிலியன் அனுப்பி வைத்தனர்.
அதனால் அவர் கோல்டன் டக் அவுட்டான அந்த தருணமே போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஏனெனில் அதன்பின் மடமடவென 7 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் நிர்ணயித்த 128 ரன்களை எட்டிப்பிடிக்க பாகிஸ்தானுக்கு 19 ஓவர்கள் தேவைப்பட்டது. ஒருவேளை அங்கு சரியான முடிவு கொடுக்கப்பட்டு அவர் கூடுதலாக 10 – 20 ரன்கள் எடுத்திருந்தால் கூட வங்கதேசம் வெற்றி பெற வாய்ப்பு கிடைத்திருக்கும். அப்படி மோசமான தீர்ப்பை வழங்கிய நடுவர்களை ஒட்டுமொத்த ரசிகர்களும் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.
அதிலும் சாகிப் அல் ஹசன் பேட் தரையில் படவில்லை என்றும் அதற்கு சாட்சியாக அவரது பேட்டுக்கும் தரைக்கும் இடையேயான நிழல் தெளிவாக தெரிவதால் அது அவுட்டில்லை என்று கூறியுள்ள முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா மோசமான அம்பையர்களை கடுமையாக விமர்சித்தார். மேலும் “இந்த புகைப்படம் அனைத்தையும் பேசுகிறது. அது நிச்சயமாக அவுட் கிடையாது. சாகிப் துரதிஷ்டவசமானவர்” என்று மற்றொரு முன்னாள் இந்த வீரர் அபிநவ் முகுந்த் இது பற்றி தனது ட்விட்டரில் அம்பயர்களை சாடியுள்ளார். அது போக சுப்பிரமணியம் பத்ரிநாத், ப்ராட் ஹோக், ஹர்ஷா போக்லே உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடுவர்களின் இந்த முடிவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.



