ஓய்வு பெறாமல் அடம் பிடித்த கபில் தேவ் – பெருமையுடன் ஓய்வு பெற வைத்த பின்னியை பகிரும் முன்னாள் வீரர்

kapil
- Advertisement -

இந்தியாவில் இன்று ஐபிஎல் உட்பட அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு கடந்த 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலககோப்பையில் அப்போதைய அசுரனாக இருந்த வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து கபில் தேவ் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றதே ஆழமான விதையை விதைத்தது. ஜிம்பாப்வேக்கு எதிராக 175* ரன்களை விளாசிய முதல் பைனலில் ரிச்சர்ட்ஸ் கொடுத்த கேட்ச்சை ஓடி சென்று பிடித்தது வரை 1983 உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய கபில் தேவ் கேரியர் முழுவதும் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர்.

1978இல் அறிமுகமாகி டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளையும் 5248 ரன்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 253 விக்கெட்களையும் 3783 ரன்களையும் எடுத்த அவர் உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 400+ விக்கெட்டுகளையும் 5000+ ரன்களை எடுத்த ஒரே வீரராக இன்றும் உலக சாதனை படைத்துள்ளார். பொதுவாக கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஆசிய வீரர்கள் தங்களது கேரியரின் கடைசியில் வயது காரணமாக தடுமாறினாலும் வெளிநாட்டு வீரர்களை போலல்லாமல் எளிதாக ஓய்வு பெற அடம் பிடிப்பார்கள்.

- Advertisement -

ஓய்வுபெற அடம்:
அந்த வகையில் உலக கிரிக்கெட்டில் ஒரு ரவுண்டு வந்த கபில் தேவ் 1990க்குப்பின் மிகவும் தடுமாறியதால் ஓய்வு பெறுமாறு விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் தனது 400வது டெஸ்ட் விக்கெட்டை 1991/92இல் எடுத்த அவர் அப்போதைய உலக சாதனையாக இருந்த நியூசிலாந்து ஜாம்பவான் ரிச்சர்ட் ஹேட்லியின் 431 டெஸ்ட் விக்கெட்களை முறியடிக்கும் முயற்சியில் விளையாடினார். ஆனால் அதை தொடுவதற்கு சுமார் 2 வருடங்கள் தடுமாறிய அவருக்கு இந்தியாவைச் சேர்ந்தவர் உலக சாதனை படைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் பிசிசிஐ ஆதரவளித்தது.

இறுதியில் ஒரு வழியாக அகமதாபாத் நகரில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் அந்த உலக சாதனையை உடைத்த அவர் அத்துடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டிக்கு பின் மேலும் 2 வருடங்கள் விளையாடப் போவதாக கபில் தேவ் அறிவித்ததை எதிர்பார்க்கவில்லை என்று அப்போதைய தேர்வுக்குழு தலைவர் மற்றும் முன்னாள் வீரர் அனுஷ்மான் கைக்வாட் கூறியுள்ளார். இருப்பினும் அவரை போன்ற ஜாம்பவானை பிசிசிஐ அதிரடியாக நீக்குவதற்கு முன்பாக அவராகவே ஓய்வு பெறுவது சிறப்பாக இருக்கும் என்பதால் தேர்வுக்குழுவில் இடம் பிடித்திருந்த மற்றொரு ஜாம்பவான் குண்டப்பா விஸ்வநாத்தும் தாமும் கபில் தேவிடம் பேசி ஓய்வுபெற சம்மதிக்க வைத்ததாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் அவரைப் போன்ற பெரிய வீரரை நீக்க முடியாது. அதனால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் அவரை விளையாட அனுமதித்தோம். அதில் அகமதாபாத் டெஸ்டில் அவர் உலக சாதனையை உடைத்தார். அப்போது தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அன்றைய நாளின் மாலையில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் 2 வருடங்கள் விளையாடப் போவதாக அவர் அறிவித்தார். அதற்கடுத்த நாள் குண்டப்பா விஸ்வநாத் என்னிடம் “கபில் தேவ் மேலும் 2 வருடங்கள் விளையாடுவதாக வரும் தலைப்புச் செய்திகளை பாருங்கள்” என்று அதிருப்தியுடன் சொன்னார்”

“அதன்பின் அன்றைய நாளின் மாலையில் பிசிசிஐ செயலாளர் ஜக்மோகன் டால்மியா தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்கள் கபில் தேவை நீக்குவது என்று முடிவெடுத்தோம். இருப்பினும் இது பற்றி கபில் தேவிடம் பேசுவதற்கு குண்டப்பா விஸ்வநாத்தை அனுப்பலாம் என டால்மியாவிடம் பரிந்துரைத்தேன். அதன் பின் தேனீர் நேரத்தின் போது கபில் தேவை நாங்கள் அணுகினோம். விஸ்வநாத் அதை அவரிடம் நேரடியாக பேசுவதற்கு தயங்கி அங்கே இங்கே சுற்றியதால் நான் அந்தப் பேச்சை தொடங்கினேன்”

“அப்போது கப்ஸ் தேர்வுக் குழுவினர் உங்களை நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளனர் என்பது உங்களுக்கும் தெரியும். வேண்டுமானால் உங்களுக்கு வழி அனுப்பும் போட்டி செய்து கொடுக்கிறோம். ஆனால் இறுதி முடிவை நீங்கள் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கபில் தேவிடம் கூறினோம். அதற்கு கபில் தேவ் “மிகவும் நன்றி நீங்கள் என்னிடம் சொன்னதை பாராட்டுகிறேன். சில சமயங்களில் இது போன்ற செயலை ஒருவர் செய்ய வேண்டும். அதை நான் செய்வேன்” என்று பதிலளித்தார்” என கூறினார். ஆனால் அதன் பின்பும் நியூசிலாந்திலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணிலும் சில போட்டிகளில் விளையாடிய கபில் தேவ் ஒரு வழியாக 1994இல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement