இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோல்வியடைந்த இந்தியா 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் மட்டுமே செய்தது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா திரும்பியதும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று பழி தீர்த்தது. அதைத் தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜூலை 12-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு லண்டனில் துவங்கியது.
அப்போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி காயத்தால் விலகிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து தனது பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் 2-வது ஓவரை வீசிய இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது பந்தில் தொடக்க வீரர் ஜேசன் ராயை டக் அவுட் செய்து கடைசி பந்தில் இங்கிலாந்து நட்சத்திரம் ஜோ ரூட்டை சில்வர் டக் அவுட் செய்து மிரட்டினார்.
நெருப்பான பவுலிங்:
அப்போது களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் முகமது சமியின் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 7/3 என்ற கணக்கில் மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்துக்கு நங்கூரத்தை போட முயன்ற ஜானி பேர்ஸ்டோவை மீண்டும் முகமது சமி 7 (20) ரன்களில் காலி செய்தார். போதாகுறைக்கு அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் லியம் லிவிங்ஸ்டனையும் ஜஸ்பிரித் பும்ரா 0 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். இப்படி முக்கிய வீரர்கள் இந்தியாவின் நெருப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 8 ஓவர்களில் 26/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்தை காப்பாற்ற போராடிய கேப்டன் ஜோஸ் பட்லருக்கு மற்றொரு நட்சத்திர வீரர் மொயீன் அலி கைகொடுக்க வந்தார்.
ஆனால் 5 ஓவர்களுக்கு கூட பார்ட்னர்ஷிப் போட விடாமல் இந்த ஜோடியை பிரித்த இளம் பந்துவீச்சாளர் பிரஸித் கிருஷ்ணா மொயின் அலியை 14 (18) ரன்களில் அவுட்டாக்கி பெவிலியனக்கு அனுப்பி வைத்தார். அடுத்த ஓவரிலேயே 6 பவுண்டரியுடன் 30 (32) ரன்கள் எடுத்து போராடிக்கொண்டிருந்த ஜோஸ் பட்லர் முகமது ஷமியின் அட்டகாசமான பந்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படி அனைத்து பேட்ஸ்மேன்களும் சீட்டுக்கட்டு சரிவது போல தங்களது விக்கெட்டுகளை மளமளவென இந்தியாவின் தரமான பந்துவீச்சில் தாரைவார்த்ததால் 59/7 என திணறிய இங்கிலாந்து 100 ரன்களை தாண்டுமா என்ற கவலை அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டது.
தப்பாத இங்கிலாந்து:
அந்த மோசமான நிலைமையில் க்ரைக் ஓவர்டன் 2 பவுண்டரியுடன் 8 (7) ரன்களும் கார்ஸ் 2 பவுண்டரியுடன் 15 (26) ரன்களும் எடுத்ததால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது குறைந்தபட்ச ஸ்கோரான 86 ரன்கள் கண்டத்தை ஒருவழியாக அந்த அணி கடந்தது. கடைசியில் டேவிட் வில்லி 3 பவுண்டரியுடன் 21 (26) ரன்களை எடுத்ததால் தப்பிய இங்கிலாந்து 100 ரன்களை கடந்த நிலையில் அவரை ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் கிளீன் போல்டாக்கினார். ஆனாலும் 25.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து வெறும் 110 ரன்களுக்கு பரிதாபமாக சுருண்டது.
அதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த இங்கிலாந்து சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தவிர்க்க முடியாத அவமானத்தை சந்தித்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் குறைந்தபட்ச ஸ்கோர்கள் இதோ:
1. 110 ஆல்-அவுட், ஓவல், லண்டன், 2022*
2. 125 ஆல்-அவுட், ஜெய்ப்பூர், 2006
3. 149 ஆல்-அவுட், சிட்னி, 1985
இங்கிலாந்தா இது:
அந்த அளவுக்கு எரிமலையாக பந்துவீசிய இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். அவருக்கு சமமாக அற்புதமாக பந்துவீசிய முகமது சமி தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதை தொடர்ந்து 111 என்ற சுலபமான இலக்கைத் துரத்தி தற்போது இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
கடந்த 2015 உலகக் கோப்பைக்கு பின்பு இங்கிலாந்து அணியில் கேப்டன் இயன் மோர்கன் ஏற்படுத்திய எழுச்சியால் அதிரடி படையாக மாறிய அந்த அணி சொந்த மண்ணுக்கு வரும் பெரும்பாலான அணிகளை சரமாரியாக அடித்து 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக உலக சாதனை படைத்துள்ளது.
ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், லியம் லிவிங்ஸ்டன், மொயின் அலி போன்ற முரட்டுத் தனமான அதிரடி வீரர்களால் எப்போதுமே சொந்த மண்ணில் வெறித்தனமாக அடிக்கும் வலுவான அணியாக கருதப்படும் இங்கிலாந்து மோர்கன் ஓய்வு பெற்ற முதல் போட்டியிலேயே இப்படி இந்தியாவின் அற்புதமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மண்ணை கவ்வியுள்ளதை பார்க்கும் ரசிகர்கள் இங்கிலாந்தா இது என்று வியந்து போய் இந்திய பவுலர்களை பாராட்டுகிறார்கள்.



